வாக்கி-டாக்கி முறைகேடு ; எஸ்.பி, டி.எஸ்.பி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாக்கி-டாக்கி' முறைகேடு ; எஸ்.பி, டி.எஸ்.பி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு!

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (16+ 17)
Share
waki taki, police, vigilence, raid , 'வாக்கி-டாக்கி', முறைகேடு, எஸ்.பி, டி.எஸ்.பி, , லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை : தமிழக காவல் துறைக்கு 2016 - 18ம் ஆண்டு காலகட்டத்தில் 'வாக்கி-டாக்கி' உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சாட்டையை சுழற்றத் துவங்கி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக எஸ்.பி. - டி.எஸ்.பி.க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் சிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையை நவீனப்படுத்துதல் திட்டத்தில் 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்க 47.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக 83.45 கோடி ரூபாய் செலவிட்டு வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அரசு ஒதுக்கிய நிதியிலேயே 10 ஆயிரம் வாக்கி - டாக்கிகள் வாங்கியிருக்க முடியும் என்ற நிலையில் கூடுதலாக நிதி செலவிடப்பட்டும் 4000 வாக்கி - டாக்கிகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதில் பல்வேறு குளறுபடி மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; பின் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி அப்போதைய டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதத்தில் 11 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி கோரியிருந்தார். இந்த கடிதமும் வெளியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வாக்கி - டாக்கி ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே தமிழக காவல் துறைக்கு 2016 முதல் 2018ம் ஆண்டு வரை 'அலைபேசிகள், சிசிடிவி - கேமராக்கள், கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினிகள்' உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதல் செய்ததிலும் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சென்னை கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 'சிசிடிவி - கேமரா' பொருத்துவதில் பெரியஅளவில் ஊழல் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வாக்கி - டாக்கி ஊழல் தொடர்பான விசாரணையை இரண்டு ஆண்டுக்கு பின் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வாக்கி - டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிய ஊழல் தொடர்பாக நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை யை துவங்கினர். இதில் அரசுக்கும் காவல் துறைக்கும் பெரியளவில் இழப்பு ஏற்படுத்தியதாக தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி. - டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 பேர் மீதும் இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முன்னாள் மற்றும் இன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய எஸ்.பி. அன்புச்செழியன், ஏ.டி.எஸ்.பி. உதயசங்கர், கூடுதல் எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் தொடர்புடையை 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்காக வெளியூரில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்த முறை கேட்டில் தொடர்புடைய 14 அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X