போராடும் இளைஞர்களே சிந்தியுங்கள்| Dinamalar

போராடும் இளைஞர்களே சிந்தியுங்கள்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (6)
Share
உரத்தசிந்தனை, குடியுரிமைசட்டம்,ஹிந்தி, தமிழ், மொழி, போராட்டம்

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது, ஹிந்தி மொழியை, கட்டாயப் பாடமாக்க, 1937ல், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டம்.

இந்த போராட்டத்தை, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த நீதிக்கட்சியும், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.,வும் இணைந்து நடத்தினர்.மூன்று ஆண்டுகள் அற வழியில் மட்டுமே நடந்த இந்த போராட்டம், மறியல் என்று திசை மாறிய போது, இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர். இதன் எதிரொலியாக, காங்கிரஸ் அரசு விலகியது. அன்றைய கவர்னர் எர்ஸ்கின் பிரபு, கட்டாய ஹிந்தி கல்விச் சட்டத்தை, 1940ல் நீக்கினார்.கடந்த, 1965 முதல், ஹிந்தி மட்டுமே அரசுபணி மொழியாக இருக்க வேண்டுமென்று, 1950 ஜனவரி, 26ல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டப் பிரிவு கூறியது. இதையே, 1963ல் சட்டமாக இயற்றியபோது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியது.உடனே, அப்போதைய பிரதமர் நேரு, '1965க்கு பிறகும், ஆங்கிலமும், அரசு மொழியாக விளங்கும்' என, உறுதியளித்தார். ஆயினும் அச்சட்டத்தின் உள்ளடக்கம் ஏற்புடையதாக இல்லையென்று கூறி, தி.மு.க., போராட்டத்தில் இறங்கி, 1965 குடியரசு தினத்தை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க தீர்மானித்தது.

அந்த ஆண்டு, ஜனவரி, 25ல், மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் நடைபெற்ற கைகலப்பு, கலவரமாக வெடித்தது. இக்கலவரம், பிற பகுதிகளுக்கும் பரவி, தடியடி, தீவைப்பு, கொள்ளை என மாறியது; போலீசார் இருவர் எரித்துக் கொல்லப்பட்டனர்; போராட்டக்காரர்களில், ஐந்து பேர் தீக்குளித்து இறந்தனர்; மூவர் விஷமருந்தி தற்கொலை செய்தனர்.நிலைமையைக் கட்டுப்படுத்த நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 70க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.அப்போதைய பாரத பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, 'ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப் பணிகளில் இணைமொழியாக இருக்கும்' என, உறுதி அளித்தார்; மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

இதையே, 1967ல், பிரதமர் இந்திரா, சட்டமாக்கினார். ஹிந்தி தொடர்ந்து, ஆட்சி மொழிகளில் ஒன்றாகவே இருந்தது.அப்போது, தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியிலிருந்தது. அதனால், போராடவில்லை. செம்மொழியான தமிழையும் ஓர் ஆட்சி மொழியாக ஏற்கவேண்டுமென போராடவில்லை. மாறாக, மும்மொழி திட்டத்தை ஏற்க மறுத்து, இருமொழிக் கொள்கையைத் அறிவித்தது.இருமொழிக் கொள்கை, தமிழை புறக்கணித்து, ஆங்கிலத்தை மட்டுமே மேம்படுத்தியது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு துாய தமிழில் பெயரிட்டனர். ஆனால், தமிழ் மொழி மீதான பற்றை வளர்க்க வில்லை. விளைவு, அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு, வட மொழி பெயர்கள் சூட்டப்பட்டன.

வெகு சிலரை தவிர மற்றவர்கள், ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் பயிற்றுவித்தனர்.தமிழைப் படிக்காமல், ஹிந்தியை இரண்டாம் பாடமாக ஏற்று படிக்க வைத்தனர். வீட்டில், தமிழில் பேசுவது கேவலம் என்ற எண்ணம் மேலோங்கியது. விளைவு, நம்மை ஆளும் அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழ்ப்பற்று அற்று போய் விட்டது.முதல்வர் அண்ணாதுரை தலைமையில், தமிழக சட்டசபையில், 1968 ஜனவரி, 3ல் இயற்றப்பட்ட, இரு முக்கியமான தீர்மானங்கள், காற்றில் பறக்க விடப்பட்டன.

அந்த தீர்மானங்கள், 'அனைத்து கல்லுாரிகளிலும், தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப் படும். ஐந்து ஆண்டுகளுக்குள், அலுவல் மொழியாக தமிழ், அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றன.ஆனால், இன்று நடப்பது என்ன?அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்விக்கே முன்னுரிமை கொடுக்கப் படுகிறது.

விளைவு, நம்மை காக்க வேண்டிய காவலர் வாகனங்களில் கூட, மக்களுக்கு தெரிய வேண்டிய விபரங்கள், தமிழில் இல்லை.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடும் மாணவர்களே... போராட்டத்தை தொடர்வதற்கு முன், சற்று சிந்தியுங்கள். ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் உயிர் நீத்த, 70 பேரின் குடும்பங்கள் இன்று என்ன நிலைமையில் உள்ளது என்று நேரில் சென்று காணுங்கள்.ஹிந்தி படிக்காததால், உயர் பதவிக்கு செல்ல முடியாமல் சோர்ந்து போன, அன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், வட மாநிலங்களுக்கு சென்று, தன் தொழிலை விரிவாக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்களையும் சந்தித்து உரையாடுங்கள்.

அவர்களின் இழப்பு எத்தகையது என்பது உங்களுக்கு புரியும்.ஹிந்தியை நாம் படிக்காததால், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழகம் வந்து தொழில் செய்து, நம்மை பின்னுக்கு தள்ளிய நிலைமையை, உங்கள் ஊரிலேயே நீங்கள் காண முடியும்.இன்று தமிழகத்திற்கு வரும் மேல்நாட்டு சுற்றுலாப் பயணியரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு வர தவறுவதில்லை. சீன அதிபரின் வருகைக்கு பின், மாமல்லபுரம் மேலும் புகழ் பெற்றுஉள்ளது.

மேல்நாட்டு சுற்றுலா பயணியரைக் கவரும் கைவினைப் பொருள் விற்பனை கடைகளில், 90 சதவீதம் வட மாநிலத்தவர் மற்றும் காஷ்மீர் முஸ்லிம்களின் கைகளில் தான் உள்ளது. ஓட்டல்களில், நம்மூர் தோசையை சுட்டுத் தருவதும் கூட அவர்களே.'வட மாநிலங்களுக்கு சென்று, பொருட்களை வாங்கி வந்து, இங்கு விற்று ஏன் லாபம் ஈட்டக்கூடாது' என, நம்மவர்களிடம் கேட்டு பாருங்கள். 'எங்களுக்கு ஹிந்தி தெரியாதே...' என்ற பதில் வரும். மேற்கூறிய இழப்புகள் அனைத்தும், நம் உணர்ச்சிகளை துாண்டி விட்டு, ஹிந்தி படிக்காமல் தளரச் செய்ததன் விளைவு தான். அன்று யாரும், 'நீங்கள் போராடுவது தவறு; தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு இன்னொரு மொழியாக, ஹிந்தி படிப்பதில் தவறில்லையே' என, எடுத்துரைக்கவில்லை; நாளை ஏற்படப் போகும் இழப்புகளையும் சுட்டிக்காட்டவில்லை.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, இன்று போராடும் மாணவர்களே... சற்று சிந்தியுங்கள்! இந்த சட்டத் திருத்தத்தால், நம் நாட்டினருக்கு, எந்த பாதிப்பும் இல்லை. சட்ட விரோதமாக, நம் நாட்டுக்குள் நுழைந்து, குறுக்கு வழியில் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற்ற ஆப்கன், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் வங்கதேசத்து முஸ்லிம் மக்களுக்கு தானே பாதிப்பு...கடந்த, 1951ல், இந்தியாவின் மக்கள் தொகை, 36 கோடி. ஆனால் இன்று, 130 கோடி. இந்த அபரி மிதமான உயர்வுக்கு காரணம், ஒரு நாளைக்கு, 26 ஆயிரத்து, 789 இறப்புகள் நடக்கும் நம் நாட்டில், பிறப்புகளோ, 73 ஆயிரத்து, 787.முறையற்ற முறையில், நம் நாட்டுக்குள் நுழைந்துள்ள, ஐந்து கோடி அன்னியர்களுக்கும் குடியுரிமை கொடுத்தால், நம் மக்கள் தொகை இன்னமும் வேகமாக அதிகரிக்காதா? அதனால், நம் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா?

வட கிழக்கு மாநிலங்களின் வழியாக உள்ளே நுழைந்து, 2,800 கி.மீ., பயணித்து, திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை, 300.இதனால் அங்கு வாழும், நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்றுாரில் மட்டுமே இவ்வளவு பாதிப்பு என்றால், இந்தியா முழுவதும் பரவியிருக்கும் அந்த அன்னியர்களால், நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள்; தலை சுற்றும்.

இப்போதே இதை தடுக்கா விட்டால், நாளை என்றுமே கட்டுப்படுத்த முடியாது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏன் குறைந்தது என, சிந்தித்து பாருங்கள்.இந்த இரு நாடுகளில் மட்டுமல்ல. நம் நாட்டிலும், 60 ஆண்டுகளில் ஹிந்துக்களின் சதவீதம், 5.75 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால், நம் சகோதர முஸ்லிம்களின் சதவீதம், 4.40 சதவீதம் கூடியுள்ளது. எனினும், அவர்கள் நம் இந்தியர்களே.ஏனெனில், 1947ல் ஒருங்கிணைந்து இருந்த இந்திய திருநாட்டின், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட போதும், இங்குள்ள முஸ்லிம்கள், இந்தியர்களாகவே நம்மோடு வாழ முடிவு செய்தவர்கள். அவர்களுடன் இன்று வரை இணக்கமாக வாழ்ந்து வருகிறோம்; எந்த வேறுபாடும் காட்டுவதில்லை.நமக்கு வாழ இடமில்லை. விவசாயம் அழிந்து வருகிறது; உண்ண உணவில்லை; குடிக்கத் தண்ணீர் கூட, பல மாதங்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், வருவோருக்கு எல்லாம் குடியுரிமைக் கொடுத்து, தங்க வைக்க முடியுமா?நம்மை விட, மூன்று மடங்கு கூடுதல் நிலப்பரப்பும், பொருளாதாரத்தில், உலகின் இரண்டாவது நாடாக திகழும் சீனாவுக்குள், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களால் போக முடியுமா; குடியுரிமை கேட்கத் தான் முடியுமா?நம்மை விட, 5 மடங்கு கூடுதல் நிலப்பரப்பும், 5 மடங்கு குறைவான மக்கள் தொகையும், இயற்கை வளத்துடன் செல்வச் செழிப்பாக விளங்குகிறது அமெரிக்கா. அங்கு செல்ல, நம் படித்த இளைஞர்கள், மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், 'விசா'வுக்காக வரிசையில் நிற்பதை, சென்னை அண்ணா சாலையில் வந்து பாருங்கள். முறையாக விசா எடுத்து தான், யாராக இருந்தாலும் அமெரிக்கா செல்ல முடியும்.போராடுவது உங்கள் பொழுதுபோக்கு என்றால், அன்னியர்கள் முறையற்ற முறையில் நம் நாட்டுக்குள் நுழைய முடியாதபடி, கட்டுப்பாடு வேண்டுமென போராடுங்கள்.

மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்று போராடுங்கள். தமிழில் படித்த இளைஞர்களுக்கு எல்லா துறைகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, போராடுங்கள்.கிராமத்து மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய, மிகக் குறைந்த கட்டணம் உள்ள, உயர் தரமான கல்வி அளிக்கும், 'நவோதயா வித்யாலயா' பள்ளிகள் வேண்டுமென்று போராடுங்கள். அழிந்து வரும் அன்னை தமிழை காக்க போராடுங்கள். அதை விடுத்து, இன்னமும், 10 ஆண்டுகளில் உங்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கக் கூடிய அன்னியர்கள் வருகையை முறைப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது...சிந்தியுங்கள்!

நீங்கள், 21ம் நுாற்றாண்டில் வாழ்பவர்கள்; உலகமே உங்கள் கையிலடக்கம்; உண்மையை கண்டறியுங்கள். அது மட்டுமல்ல, நான் மேலே கூறிய அனைத்தும் உண்மை தானா என, ஆய்வு செய்து, தவறு என தெரிந்தால் போராட்டத்தை தொடருங்கள். புரியாமல் போராடும் அனைவருக்கும் உண்மையை எடுத்துரையுங்கள்!

ஆ.த.பா.போஸ்
சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:இ - மெயில்: atbbose@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X