அடுத்தடுத்து நெருக்கடி: அரசியலில் நடிகர் விஜய்?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து நெருக்கடி: அரசியலில் நடிகர் விஜய்?

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (24)
Share
வருமான வரித் துறையின், அதிரடி சோதனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய், பா.ஜ.,மேலிடத்திடம், சரண்டராகும் வகையில், இனி தான் நடிக்கும் படங்களில், மத்திய அரசை விமர்சிக்கும் போக்கை கைவிடுவாரா அல்லது மத்திய அரசை எதிர்க்கும் வகையில், அரசியல் பிரவேசம் மேற்கொள்வாரா என்ற கேள்வி, அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நவ., மாதத்தில் நடந்த, நடிகர் கமல் பிறந்த நாள்
அடுத்தடுத்து நெருக்கடி ,#  அரசியலில் நடிகர் விஜய்?

வருமான வரித் துறையின், அதிரடி சோதனையில் சிக்கியுள்ள நடிகர் விஜய், பா.ஜ.,மேலிடத்திடம், சரண்டராகும் வகையில், இனி தான் நடிக்கும் படங்களில், மத்திய அரசை விமர்சிக்கும் போக்கை கைவிடுவாரா அல்லது மத்திய அரசை எதிர்க்கும் வகையில், அரசியல் பிரவேசம் மேற்கொள்வாரா என்ற கேள்வி, அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நவ., மாதத்தில் நடந்த, நடிகர் கமல் பிறந்த நாள் விழாவில், விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், 'ரஜினி, கமல் சேர்ந்தால், தமிழகத்திற்கு நல்லது. நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பின், உங்கள் தம்பிகள் வந்தால், அவர்களுக்கு வழிவிட வேண்டும்' என்றார்.


சோதனை


இந்த விழா வாயிலாக, ரஜினிக்கு பின், விஜய் முதல்வராக வேண்டும் என்ற, தன் விருப்பத்தை, எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படுத்தினார். மேலும், ரஜினி கட்சி துவங்கிய பின், அவருக்கு விஜய் ஆதரவு தெரிவிக்கும் வாயிலாக, அவர் அரசியலில் நுழைவார் என்பதையும், சூசகமாக தெரிவித்தார். ஏற்கனவே, விஜய் தலைமையில் மக்கள் இயக்கம், அரசியல் கட்சி பாணியில் செயல்படுகிறது. இந்த இயக்கத்திற்கு, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், தனி அலுவலகம் இயங்கி வருகிறது.

மெர்சல், பிகில் படங்களில், மத்திய அரசின் திட்டங்களை, விஜய் சாடியிருந்தார். இதனால், விஜயை, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்தனர். பிகில் படத்திற்கு, அவர் பெற்ற சம்பளம் தொடர்பாக, அவரது வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில், பா.ஜ., மேலிடத்திடம், 'சரண்' அடையும் விதமாக, மத்திய அரசை, தன் படங்களில் விமர்சிப்பதை தவிர்ப்பாரா அல்லது சட்டரீதியாக விசாரணையை சந்தித்து, சட்டசபை தேர்தலுக்கு முன், தீவிர அரசியலில் இறங்கி, மத்திய அரசை எதிர்ப்பாரா என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


முட்டுக்கட்டை


இது குறித்து, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரசில் இணைவதற்கு, விஜய் விரும்பினார்; ராகுலை சந்தித்து பேசினார். ராஜ்யசபா எம்.பி., பதவி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை, விஜய் எதிர்பார்த்தார். ஆனால், விஜய்க்கு, 45 வயதாகி விட்டது என்ற சான்றிதழை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள், ராகுலுக்கு அனுப்பி வைத்ததால், முட்டுக்கட்டை விழுந்தது. தி.மு.க.,வில், கனிமொழிக்கும், உதயநிதிக்கும் தான் முக்கியத்துவம் கிடைக்கும் என்பதால், அக்கட்சியில் இணைவதையும் தவிர்த்தார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு விஜய் ஆதரவு அளித்தார். 'அண்ணாதுரைக்கு, எம்.ஜி.ஆர்., கொடுத்த வெற்றியை போல, ஜெயலலி தாவுக்கு விஜய் வெற்றி தேடி தந்தார்' என, எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதால், விஜய் நடித்த, தலைவா படத்திற்கு சிக்கல் உருவாகியது. இதனால், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையும், விஜய் மாற்றிக் கொண்டார். 2014ல் நடந்த, லோக்சபா தேர்தலுக்கு முன், கோவையில், பிரதமர் மோடியை விஜய் சந்தித்து பேசினார். பா.ஜ.,வுடன் நடத்திய பேச்சும் சுமுகமாக முடியவில்லை. மெர்சல் படப் பிரச்னை தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசிய பின், அப்படத்தின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.


குழப்பம்


பின், சர்கார் படப் பிரச்னையில், இலவச பொருட்களை உடைக்கும் காட்சிக்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், எந்த கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டை, விஜய் எடுக்கிறார் என்ற முடிவு தெரியாமல், அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், வருமான வரித் துறையினர் சோதனை மற்றும், மாஸ்டர் படப்பிடிப்புக்கு, பா.ஜ., எதிர்ப்பு போன்ற நெருக்கடிகளால், விஜய் தீவிர அரசியலில் இறங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X