வெற்றிப்பாதையில் பயணிக்கும் திருப்பூர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வெற்றிப்பாதையில் பயணிக்கும் திருப்பூர்!'

Added : பிப் 09, 2020
Share
 'வெற்றிப்பாதையில் பயணிக்கும் திருப்பூர்!'

'வெற்றிப்பாதையில் திருப்பூர் -- 2020' நிகழ்ச்சி, திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், பின்னலாடை துறையினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இக்கட்டான சூழலில் இருந்த பின்னலாடை துறையை மீட்டெடுப்பதற்கான முயற்சியாக, முதலிபாளையம் நிப்ட்---டீ கல்லுாரி நிர்வாகம், கடந்த 2012 ல் முதல் முறையாக, வெற்றிப்பாதையில் திருப்பூர் என்கிற நிகழ்ச்சியை நடத்தியது.வல்லுனர்கள் பங்கேற்று, தொழில் மேம்பாட்டு யுத்திகள் குறித்து பேசினர்; தொழில்முனைவோர் மனதில் தன்னம்பிக்கை விதைகளை துாவினர். இதன்பயனாக, பீனிக்ஸ் பறவை போன்று, பிரச்னைகளிலிருந்து மீண்டெழுந்தது, திருப்பூர் தொழில் துறை.தொடர்ந்து, தொழில் துறையினர் இணைந்து, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வெற்றிப்பாதையில் திருப்பூர் நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். தற்போது, ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம்; 20 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் என, 46 ஆயிரம் கோடி மொத்த வர்த்தகத்தை எட்டியுள்ளது, திருப்பூர்.இந்த வர்த்தகத்தை, லட்சம் கோடியாக உயர்த்திக்காட்டுவதே, ஒட்டுமொத்த பின்னலாடை துறையினரின் லட்சிய கனவாக உள்ளது.லட்சம் கோடி ரூபாய் லட்சிய கனவை நனவாக்கும்வகையில், ஐந்தாவது முறையாக, வெற்றிப்பாதையில் திருப்பூர் - 2020 நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்--டீ கல்லுாரி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, தொழில்பாதுகாப்புக்குழு மற்றும் அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோருடன் 'தினமலர்' நாளிதழும் கரம் கோர்த்தது.பிற்பகல், 3:30 மணிக்கு துவங்கிய முதல் நிகழ்ச்சியில், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி வரவேற்றார். திறன் மிகு திருப்பூர், தொழில் வளர்ச்சியில் நிப்ட்--டீ கல்லுாரி; அடல் இன்குபேஷன் மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஒலி ஒளி காட்சிப்படுத்தப்பட்டது.அதன்பின் நடந்த கருத்தரங்கில், வசீர் ஆலோசனை நிறுவன வர்த்தக இயக்குனர் சுரேந்தர் ஜெயின் பங்கேற்று, செயற்கை நுாலிழை ஆடைகளுக்கான வர்த்தக வாய்ப்புகள்; போட்டி நாடுகளின் ஆடை உற்பத்தி துறையுடன் ஒப்பீடு என்கிற தலைப்பில் பேசினார்.ஆடை உற்பத்தி மேலாண்மை குறித்து, டில்லி ராஜேஷ்பேடா நிறுவன இயக்குனர் ராஜேஷ்பேடா; புதுமை டிசைன் உருவாக்கம் மூலம் வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்து, பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ்; குறுகிய காலத்துக்குள் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நுணுக்கங்கள் குறித்து, ஸ்டிங் சோர்ஷிங் நிறுவன இயக்குனர் சுபாஷ் தனஞ்செயன் பேசினர்.மாலை, 6:30 மணிக்கு துவங்கிய இரண்டாவது நிகழ்வில், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமைவகித்தார். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆடை உற்பத்தி துறையினருக்கு தன்னம்பிக்கை அளித்தார்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, 12 ஸ்டால்களுடன் கண்காட்சி நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட நுாலிழைகள்; கரிசலாங்கண்ணி, மஞ்சள் அரளி, செவ்வாழைப்பூ போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை சாயமேற்றப்பட்ட துணி, ஆடை ரகங்கள்; குழந்தைகள் ஆடைகள். கழிவு துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட டேக், விசிட்டிங் கார்டு.தொழில்முனைவோர் கடன் பெற வழிகாட்டும்வகையில், வங்கிகளின் அரங்குகள்; மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விளக்கும்வகையில், நிப்ட்--டீ கல்லுாரி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.திருப்பூர் ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனத்தினர் ஆர்வமுடன் பங்கேற்று, வல்லுனர்களின் கருத்துக்களை குறிப்பெடுத்தனர்; தங்கள் சந்தேகங்களை வல்லுனர்களிடம் கேட்டு தெளிவு பெற்றனர். கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, புதுமை ஆடை தயாரிப்பு குறித்த விவரங்களை சேகரித்தனர். ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X