ஓரிரு நாளில் உற்பத்தி திறன் உயர்த்த யோசனை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓரிரு நாளில் உற்பத்தி திறன் உயர்த்த யோசனை!

Added : பிப் 09, 2020
Share
 ஓரிரு நாளில் உற்பத்தி திறன் உயர்த்த யோசனை!

வெற்றிப்பாதையில் திருப்பூர் 2020 கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சர்வதேச வல்லுனர்கள் பங்கேற்று, ஆடை உற்பத்தி துறையை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க செய்யும் யுத்திகள் குறித்து பேசினர்.ஆடை உற்பத்தி மேலாண்மை குறித்து டில்லியைச் சேர்ந்த வல்லுனர் ராஜேஷ்பேடா பேசியதாவது:தொழில்முனைவோர் குழுவாக இணைந்து செயல்படுவதற்கு, சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது திருப்பூர். ஒவ்வொருமுறை பிரச்னைகள் எழும்போதும், பின்னலாடை துறையினர் உடனடியாக தீர்வு கண்டு, மீண்டெழுகின்றனர்.எந்தெந்த வகையான சுய முயற்சிகளால், வர்த்தகத்தை மேம்படுத்தமுடியும் என ஆராய்ந்து, அவற்றை செயல்படுத்தவேண்டும்.உற்பத்தி திறன் மேம்பாட்டு நுட்பங்களை திருப்பூரில் சோதனை செய்தோம். ஓரிரு நாட்களிலேயே, நிறுவனத்தின் உற்பத்தி திறன் 26 சதவீதம் அதிகரித்தது; தொழிலாளர் விடுப்பு எடுக்கும் விகிதம் குறைந்ததையும் காணமுடிந்தது.இயந்திரங்கள் வாங்குவது, பராமரிப்பதற்கு முதலீடு செய்வதைப்போல், மனிதவள மேம்பாட்டுக்காகவும் நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும்.முதலிலேயே சரியாக தயாரிப்பதுதான், உண்மையான தரம். இதன்மூலம், கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்கமுடியும்; குறித்த காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும்.மரபுசாரா மின் உற்பத்தி, ஜீரோ டிஸ்சார்ஜ் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு அளிப்பதில், திருப்பூர் முன்னோடியாக திகழ்கிறது. திருப்பூருக்கே பிரத்யேகமாக உள்ள இத்தகைய பெருமைகளை, வெளிநாட்டு வர்த்தகர்கள் உற்பத்தி மேலாண்மை நுட்பங்களை கடைபிடித்து, வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அனுமன் போல் செயல்படுங்கள்

அனுமன் சிறுவயதில், பழம் என நினைத்து, சூரியனை பிடிக்க முயன்றார். சூரியன் பயந்து, பின்னால் சென்றுகொண்டிருந்தார். ராவணனுக்கு துாது அனுப்ப, கடல் கடந்து இலங்கைக்கு செல்ல, அனுமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அனுமனுக்கு தன்திறன் தனக்கு தெரியாது.அவரது திறன் என்னென்ன என பிறர் கூறியபோது, அவரது திறன் என்வென்று அவருக்கு தெரிந்தது. விஸ்வரூபம் எடுத்துநின்றார்; கடல் கடந்து வெற்றிகரமாக இலங்கை சென்றடைந்தார்.சோதனைகள்தான், நமது ஆற்றலை வெளிப்படச் செய்கின்றன. ஆஞ்சநேயர் போலவே, திருப்பூர் பின்னலாடை துறையினரும் தங்கள் திறனை உணரவேண்டும்; இதன்மூலம், பிரச்னைகளை கடந்து, எளிதாக வெற்றிக்கனியை பறிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X