இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தல் கருத்துகணிப்புக்கள் சரியானது அல்ல எனவும், தாங்கள் 48 இடங்கள் வரை கைப்பற்றுவோம் என பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டில்லி சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஏற்க பா.ஜ., தரப்பு மறுத்துள்ளது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு கட்சியின் பார்லி., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு மீனாட்சி லேகி கூறுகையில், கருத்து கணிப்பு சரியான கணிப்பு அல்ல. அது மட்டுமின்றி இந்த புள்ளி விபரம் எடுக்கப்பட்டது மாலை 4 முதல் 5 மணி வரைக்குள். இதற்கு முன் கருத்துகணிப்புக்கள் பொய்யானது உண்டு. எங்கள் கட்சி வாக்காளர்கள் தாமதமாகவே வந்து ஓட்டளித்தனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. நிச்சயமாக டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்றார்.
காலை 10.30 மணிக்குள் அனைவரும் குடும்பத்துடன் வந்து ஓட்டளிக்கும்படி அமித்ஷா பா.ஜ.,வினரை கேட்டிருந்த போதிலும், ஓட்டுப்பதிவு முடியும் சமயத்திலேயே பா.ஜ.,வினர் அதிகம் வந்து ஓட்டளித்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர். பிப்.,11 ல் வெளியாகும் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் என அமித்ஷா கூறி இருந்ததால், தாமதமாக வந்து ஓட்டளித்தது பா.ஜ.,வின் யுக்தியாக இருக்கக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், ஆம்ஆத்மியின் மாபெரும் வெற்றி என்ற கருத்து கணிப்பு பிப்.,11 ல் ஓட்டுக்கள் எண்ணப்படும் போது பொய்யாகி போகும். தோராயமாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து கணிப்புக்கள் துடைப்பத்தால் (ஆம்ஆத்மி சின்னம்) துடைத்து எறியப்படும். பெரும்பான்மை பெற 36 இடங்கள் தேவை என்றாலும் பா.ஜ., 48 இடங்களை கைப்பற்றி, தலைநகரில் ஆட்சி அமைக்கும். அனைத்து கருத்துகணிப்புக்களும் தோற்கடிக்கப்படும். தயவு செய்து இதற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடாதீர்கள் என்றார். பா.ஜ., தலைவர்கள் அனைவரும், தங்கள் கட்சி 45 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE