பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் களை கட்டிய நிலாச்சோறு திருவிழா: விடியவிடிய கும்மியடித்து பெண்கள் கொண்டாட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னிமலை: சென்னிமலை கிராமங்களில், நிலாச்சோறு திருவிழாவை, விடியவிடிய கும்மியடித்து, பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னிமலை அருகே கிராமங்களில், தைப்பூசத்துக்கு ஐந்து நாட்கள் முன்பாக, நிலாவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு திருவிழா நடப்பது வழக்கமாக உள்ளது. முதல் நான்கு நாட்கள், தினமும் இரவில், ஊர் பெண்கள் ஒன்று கூடி, ஊரின் முக்கிய இடத்தில் கும்மியடித்து, தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை, பங்கிட்டு உண்டு மகிழ்வர். ஐந்தாவது நாள் இரவில், திருமண நிகழ்ச்சி போல் நடத்துவர். இதன்படி பூச்சக்காட்டுவலசு, பாரதி நகர் மற்றும் உப்பிலிபாளையம் என பல்வேறு கிராமங்களில், நூற்றுக்கணக்கான பெண்கள், இரவில் நிலாச்சோறு விழா கொண்டாடினர். தைப்பூசத்துக்கு முந்தைய நாளான, நேற்று முன்தினம் இரவு, விழா நிறைவடைந்தது. இதையொட்டி களிமண்ணில் இரு உருவ பொம்மை (உக்கை என அழைக்கின்றனர்) செய்து, மணமகன், மணமகளாக கருதி, தேங்காய், பழம் படைத்தனர். உக்கையை சுற்றி பாட்டு பாடி கும்மியடித்தனர். நள்ளிரவு வரை கும்மியடித்து கொண்டாடினர். இதையடுத்து நேற்று அதிகாலையில், சென்னிமலை முருகன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் வடம் பிடிக்க சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: பல தலைமுறைகளாக நிலாச்சோறு திருவிழா நடக்கிறது. முன்பெல்லாம் மின்சாரம் கிடையாது. அதனால் நிலா வெளிச்சத்தில் தான் ஒன்று திரண்டு பேசியுள்ளனர். அப்போது தை மாதத்தில் விவசாயம் செழிக்க, ஊரில் ஒற்றுமை நிலவ, ஏதாவது செய்ய நிலாவை பார்த்து யோசனை செய்த போதுதான், நிலாவுக்கே விழா எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தி, நிலாச்சோறு விழா நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X