அஜினோ மோட்டோவால் பாதிப்பு எதுவும் கிடையாது!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அஜினோ மோட்டோவால் பாதிப்பு எதுவும் கிடையாது!'

Added : பிப் 09, 2020
Share

பசிக்கு உணவை தேடிய காலம் மாறி, சுவையான உணவுகளை தேடி சுவைக்கும் பழக்கம், மக்களிடம் அதிகரித்து வருகிறது. அவர்களை கவர்ந்திழுக்க, சுவையூட்டிகள் பெருகி வருகின்றன. சுவையூட்டிகள் விற்பனையில், 'அஜினோ மோட்டோ நிறுவனம்' சாதனை படைத்து வருகிறது. ஆனால், அஜினோமோட்டோ குறித்து, தமிழக மக்களிடம்தவறான தகவல் பரவிஉள்ளது.

அதை நீக்க, அந்நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து, 'அஜினோ மோட்டோ இந்தியா' நிறுவன இயக்குனர் அட்சுமிஷூகு, அதன் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோர் கூறியதாவது:'அஜினோமோட்டோ' என்பது, ஜப்பான் நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம், 'மோனோ சோடியம் குளுட்டோமேட் எனும், எம்.எஸ்.ஜி., என்ற சுவையூட்டியை, தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலகெங்கிலும், 180க்கும் அதிகமான நாடுகளில், 'அஜினோ மோட்டோ' என்பது, பதிவு செய்யப்பட்ட 'டிரேட் மார்க்' ஆகும். 'அஜினோ மோட்டோ' என்ற வார்த்தைக்கு, ஜப்பானிய மொழியில், 'சுவையின் சாரம்' என்று அர்த்தம்.

இந்த சுவையூட்டியை, ஜப்பான் நாட்டை சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கிடா என்பவர், 1909ல் கண்டறிந்தார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும், 'குளுட்டோமேட்' வழியே கிடைக்கும் சுவைக்கு, 'உமாமி' என, பெயரிட்டார். எம்.எஸ்.ஜி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், சுவையூட்டி தொடர்பாக, பல்வேறு தவறான கருத்துக்கள், மக்களிடம் பரப்பப்படுகின்றன. உண்மையில், இந்த சுவையூட்டியில், பலவிதமான புரத சத்துக்கள் உள்ளன; இதை ஆய்வறிக்கைகளும் தெளிவுப்படுத்தி உள்ளன.சுவை அதிகம்இயற்கையாகவே, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றில், பல்வேறு சுவைகள் அடங்கி உள்ளன. இதற்கு காரணம், குளுட்டோமேட். நாம் சமைக்கும் உணவுகளில், எம்.எஸ்.ஜி., சேர்க்கும்போது, அதன் சுவை அதிகரிக்கிறது. அத்துடன் புரத சத்தும் கிடைக்கிறது.

இதை உணவில் சேர்ப்பதால், எவ்வித தீங்கும் ஏற்படாது. தாய்ப்பாலில் அடங்கியுள்ள, அனைத்து புரத சத்துக்களும், இதில் இடம்பெற்றுள்ளன.நம் வீட்டில் ரசம் செய்யும்போது, அதில் தக்காளியை சேர்ப்போம். அப்போது, ரசத்தின் சுவை அதிகரிக்கும். அதேபோல், எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை சேர்க்கும்போது, சுவை அதிகரிக்கிறது. இதனால், பக்க விளைவு கிடையாது. ஏனெனில், இந்த எம்.எஸ்.ஜி., சுவையூட்டி, கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றிலிருந்து, எம்.எஸ்.ஜி., தயாரிப்பதற்காகும் செலவை விட, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிப்பதற்காகும் செலவு குறைவு.

எனவே, அஜினோ மோட்டோ நிறுவனம், தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து, எம்.எஸ்.ஜி., உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம், மரவள்ளிக் கிழங்கு மாவை வாங்கி, அதை இரண்டு நாட்கள் நொதிக்க வைக்கிறது. இதற்கு சில, 'என்சைம்கள்' பயன்படுத்தப்படுகின்றன. நொதித்தல் வழியே கிடைக்கும் திரவம், 'குளுட்டோமிக் அமிலம்' என, அழைக்கப்படுகிறது. இதை, குளிர்விப்பானை பயன்படுத்தி, 'மோனோ சோடியம் குளுட்டோமேட்' என்ற திடப் பொருளாக மாற்றுகின்றனர். பின், அதை வெப்பம் மற்றும் குளிர் காற்று வழியே, உலர வைத்து, சிறிய பொடிகளாக தயாரிக்கின்றனர்.

இந்த சுவையூட்டியை, சிறிய மற்றும் பெரிய பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர். மிகப்பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் உணவுப் பொருள் தயாரிப்புக்கு, எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை பயன்படுத்துகின்றன. இது, முழுக்க சைவ உணவுப் பொருளாகும். இந்த எம்.எஸ்.ஜி., இந்தியாவில், அஜினோ மோட்டோ என்றே அழைக்கப்படுகிறது. இது, இந்தியாவில், 2003ல் அறிமுகம் செய்யப்பட்டது.


ஆய்வறிக்கை


முதலில், பெரிய ஹோட்டல் மற்றும் தொழிற்சாலை சமையல் கூடங்களில் பயன்படுத்தப் பட்டது. தற்போது, சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது. இதே, எம்.எஸ்.ஜி.,யை, சில சீன நிறுவனங்களும், தயாரித்து வருகின்றன. அவை, தரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே, அஜினோ மோட்டோ நிறுவனத்தின் தயாரிப்பை விட, குறைந்த விலைக்கு வழங்குகின்றனர். இதை, வியாபாரிகள் மற்றும் உணவு தயாரிப்பாளர்கள் அதிகம் வாங்குகின்றனர்.

அதையும், 'அஜினோ மோட்டோ' என்றே அனைவரும் அழைக்கின்றனர். இது வேறு, அஜினோ மோட்டோ தயாரிப்பு வேறு என்பதை, மக்களுக்கு தெரியப்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எம்.எஸ்.ஜி., மிகவும் பாதுகாப்பானது என, உலக சுகாதார அமைப்பும், வேளாண் அமைப்பும் ஆய்வறிக்கை அளித்துள்ளன.இதன் காரணமாக, எம்.எஸ்.ஜி., விற்பனை அதிகரித்துள்ளது. உலக அளவில், ஆண்டுக்கு, 4.6 சதவீதம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 500 டன் விற்பனையாகிறது.

எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை, ரசம், குழம்பு, கலவை சாதம், முருங்கைக்காய் கறி, பொரியல், அசைவ உணவுகள் உள்ளிட்ட, அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


'ரெடிமேடு காபி!'


அஜினோ மோட்டோ நிறுவனம், 'ஹேப்பிமா' எனப்படும், 'பிரைடு ரைஸ்' உணவுக்கான பொடி, காய்கறிகளை வைத்து, மொறு மொறுப்பான தின்பண்டம் தயாரிக்க உதவும் பவுடர், வெறும் சுடு தண்ணீரை வைத்து, உடனடியாக காபி தயாரிக்கக்கூடிய, 'பி.லெண்டி' ஆகியவற்றை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. அதேபோல், அஜினோ மோட்டோ சுவையூட்டி, 5 கிராம், 10 கிராம், 50 கிராம், 100 கிராம், அரைக் கிலோ பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X