கும்டா தலைவராகிறார் முதல்வர் விரைவில் வருது சட்டத்திருத்தம் | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'கும்டா' தலைவராகிறார் முதல்வர் விரைவில் வருது சட்டத்திருத்தம்

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (3)
Share
 'கும்டா'தலைவர், முதல்வர், சட்டத்திருத்தம்

ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமமான, 'கும்டா'வின் தலைவராக, முதல்வரை நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில், போக்கு வரத்து திட்டங்களை செயல்படுத்துவதில், அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, கும்டா என்ற அமைப்பு, 2010ல் துவக்கப்பட்டது. இதன் தலைவராக, போக்குவரத்து துறை அமைச்சர் நியமிக்கப் பட்டார்.இதில், பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் முதன்மை பிளானர், இதன் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த, தற்போதைய நிர்வாக அமைப்பே, தடையாக மாறும் சூழல் உருவானது. 'தற்போதைய நிர்வாக அமைப்பு, நிதி பெற ஏற்றதாக இல்லை' என, உலக வங்கி அதிகாரிகள், தமிழக அரசிடம் தெரிவித்தனர். இது குறித்து, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கும்டா நிர்வாக அமைப்பை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, உறுப்பினர் செயலராக நியமிக்க, அரசு துறைகள் மத்தியில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பின், கும்டாவின் தலைவராக, போக்குவரத்து துறை அமைச்சர் இருப்பதை விட, முதல்வர் இருப்பது நல்லது என, உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில், முதல்வரை தலைவராகவும், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கான, வரைவு சட்டத்திருத்தம் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதுபற்றிய அறிவிப்பு, விரைவில் வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிரூபர்

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X