மட்டம் தட்டாதீங்க... மாட்டிக்காதீங்க!

Added : பிப் 10, 2020
Advertisement
மட்டம் தட்டாதீங்க... மாட்டிக்காதீங்க!

பன்னீர் தெளிப்பது மாதிரி. தெளிப்பவர் மீதும் சில துளிகள் விழும். மகிழ்ச்சி என்ற வாசம் பரவும். உற்சாகப்படுத்துவதே உன்னதமானது. இதற்கு மாறாக பிறரை மட்டம் தட்டி சிலர் மகிழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களே அதில் மாட்டிக்கொள்வார்கள். சில நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டால் இந்தப் பிரச்னையில் நாம் சிக்காமல் தப்பிக்கலாம்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷாவைச் சந்திக்க இருவர் வந்திருந்தனர். அவரை மட்டம் தட்ட நினைத்தனர். ஒருவன், “எங்களுக்குள் ஒரு விவாதம். நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான். ஆனால் என் நண்பர் நீங்கள் ஒரு போக்கிரி என்கிறார். இதில் எது உண்மை என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என்றார். அதைக் கேட்டுப் புன்னகைத்த பெர்னாட்ஷா, இருவரையும் அருகில் அழைத்து நடுவில் நின்று கொண்டு, “இப்போது நீங்கள் குறிப்பிட்ட இருவருக்கும் நடுவில் நான் நிற்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் வெட்கித் தலைகுனிந்தனர்.


இந்தியர்களின் நிறம்


முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் இங்கிலாந்து சென்றிருந்தபோது, அங்குள்ள ஆங்கிலப் பிரமுகர் கேட்டார். 'ஆண்டவன் படைப்பில் நாங்கள் வெள்ளையாக இருக்கிறோம். இதற்கு எதிர்மறையாக நீக்ரோக்கள் கறுப்பாக இருக்கிறார்கள். இதுதான் இயற்கை. அதென்ன இந்தியர்கள் இரண்டும் கெட்டான் நிறத்தில் இருக்கிறீர்கள்?' என்று கிண்டலடித்தார். ராதாகிருஷ்ணன் நிதானமாகப் பதில் சொன்னார். 'ஆண்டவன் மனிதர்களைப் படைக்கத் தொடங்கும்போது, பச்சை மண்ணாக இருந்த உடலை செங்கலைப் போல வேகவைத்தார்.

அவசரப்பட்டு எடுத்துவிட்டதால் அது வேகாமல் இருந்தது. அதுதான் வெள்ளையர்களாகிய நீங்கள். மீண்டும் படைத்து வேக வைத்தார். நீண்ட நேரம் ஆகிவிட்டதால் கருகி விட்டது. அவர்கள்தான் நீக்ரோக்கள். மீண்டும் படைத்துச் சரியாக வேகவைத்துப் பக்குவமாக எடுத்தார். அதுதான் இந்தியர்கள். ஆகவே வேகாத செங்கற்கள் போன்றவர்கள்தான் நீங்கள்' என்று பதிலடி கொடுத்தார்.


எத்தனை விரல்கள்


இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆஸ்டர், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில்சிறந்தவர். ஒரு சமயம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆஸ்டரை கிண்டல் செய்ய விரும்பினார். 'மிஸஸ் ஆஸ்டர்! ஒரு பன்றியின் கால்களில் எத்தனை விரல்கள் இருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா?' என்று கேட்டார். அதற்கு ஆஸ்டர், “உங்கள் கால்களில் உள்ள ஷூக்களைக் கழற்றிவிட்டு விரல்களை எண்ணிப் பார்த்தால் தெரியும்” என்றார். கேள்வி கேட்டவரின் முகம் சுருங்கிவிட்டது.

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஷூவுக்குப் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார். வந்தவர் கேட்டார் “உங்கள் ஷூவுக்கு நீங்களா பாலீஷ் போடுகிறீர்கள்?” லிங்கன் சொன்னார், ஆமாம். நீங்கள் யாருடைய ஷூவுக்குப் போடுவீர்கள்?'நாட்டுமண்


நேரு ஒருமுறை சிறையில் இருந்தபோது அவருக்குச் சாப்பிடக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் ஒட்டியிருந்தது. ஜெயில் அதிகாரியிடம் அதனைப்புகார் செய்தபோது அவர், “உங்கள் நாட்டு மண்தானே! சாப்பிடுங்கள்” என்று கிண்டலடித்தார். உடனே நேரு, “நாங்கள் எங்கள் நாட்டு மண்ணைச் சாப்பிடப் பிறந்தவர்கள் அல்ல. காப்பாற்றப் பிறந்தவர்கள்” என்று பதிலளித்தார்.


பழிக்குப் பழி

ஜார்ஜ் பெர்னாட்ஷாவுக்கு ஷேக்ஸ்பியரைப் பிடிக்காது. ஷேக்ஸ்பியரின் அபிமானிகள் பெர்னாட்ஷாவை அவமானப்படுத்த நினைத்து, அவர் பேசும்போது சொன்ன ஜோக்குகளைக் கேட்டுச் சிரிக்கவில்லை. சிரிப்பு வரவில்லை என்றனர். அதற்குப் பதிலளித்த பெர்னாட்ஷா, “எப்படி வரும்? எல்லாம் ஷேக்ஸ்பியரின் நகைச் சுவைகளாயிற்றே” என்றார். கிண்டலடித்தவர்களே கேலிக்கு உள்ளாயினர். குரங்குடன் நடைப்பயிற்சி காலையில் ஒருவர் தனது நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போனார். எதிரே வந்தவர் இவரைக் கிண்டலடிக்க நினைத்து, “என்ன குரங்கைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போற மாதிரி இருக்கு!” என்றார்.

அதற்கு அவர் நல்லா பாருங்க நான் நாயைக் கூட்டிக்கிட்டுத்தானே போறேன்” என்றார். அதற்கு, ''நான் உங்ககிட்டயா கேட்டேன்; நாய்கிட்டத்தானே கேட்டேன்” என்றார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், “ஓ! நாய்கிட்டப் பேசினீங்களா? இனம் இனத்தோடதானே பேசும்” என்றார்.கிண்டலடித்தவர் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார்.


மனைவியின் உறவினர்கள் ஒருவர் அவரது மனைவி அருகில் அமர்ந்திருக்க காரோட்டிக் கொண்டு போனார். ஓர் இடத்தில் சில கழுதைகள் ரோட்டை மறித்துக்கொண்டு நின்றன. அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மனைவியைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார். “பார்த்தாயா, உன் சொந்தக்காரங்கள்லாம் காரை மறிச்சிக்கிட்டு நிக்கிறாங்க!”. அவர் மனைவி சுதாரித்துக்கொண்டு, “ஆமாம். சொந்தக்காரங்கதான். உங்களைக் கட்டிக்கிட்ட பிறகு உங்க வழியில வந்த சொந்தக்காரங்க” என்றதும் அவர் முகத்தில் அசடு வழிந்தது.


கேள்விக்குப் பதில் கேள்வி


ஓர் இடத்தில் மாதர் சங்கக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாராட்டத் தொடங்கினாள் “நீங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் கதைகள் எழுதுறீங்க. எல்லாம் ரொம்ப நல்லாவே இருக்கும். அதுசரி! இதையெல்லாம் யாரு உங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாங்க?” இதைக் கேட்டதும் அந்தப்பெண்ணுக்கு சுரீரென்றது. பதிலடி கொடுக்க நினைத்தார். “உங்கள் பாராட்டுக்கு நன்றி. அதுசரி! என் கதைகளையெல்லாம் யாரு உங்களுக்குப்படிச்சுக் காட்டுறாங்க?” முதல் பெண்ணுக்கு முகம் கோணிவிட்டது.


மூளை இருக்கா


ஒரு மிலிட்டரி ஓட்டலுக்குள் ஒரு ரவுடி நுழைந்தார். உட்கார்ந்து கொண்டு சர்வரிடம், “மூளை இருக்கா?” என்று இரண்டு அர்த்தத்தோடு நக்கலாகக் கேட்டார். ஒன்று சாப்பிட மூளையிருக்கா? இன்னொன்று சர்வருக்கு மூளையிருக்கா? சர்வர் இதைப் புரிந்துகொண்டார். அந்த ரவுடியை மடக்க நினைத்தார். கொஞ்சம் இருங்க! உள்ளே போயி பார்த்துட்டு வர்றேன் என்ற சர்வர் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார். “என்ன மூளை இருக்கா?” என்று மறுபடியும் நக்கலாகக் கேட்டான் ரவுடி. அதற்கு சர்வர், “உங்களுக்கு முன்னாடி வந்தவங்களுக்கெல்லாம் மூளை இருந்ததுங்க. உங்களுக்கு மட்டும் மூளை இல்லை” என்றார். ரவுடி பாடு திண்டாட்டம்தான்.

நல்ல சுவர் - குட்டிச் சுவர் கிருபானந்தவாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. முடிந்ததும் அவரை நெருங்கிய ஓர் இளைஞர், “ஏன் நெற்றி நிறைய வெள்ளையடிச்ச மாதிரி விபூதி பூசியிருக்கீங்க” என்று கேட்டார். அவர் உடனே சொன்னார். “நல்ல சுவருக்குத்தான் வெள்ளையடிப்பார்கள். குட்டிச் சுவருக்கெல்லாம் அடிக்க மாட்டார்கள்”. இளைஞன் ஓடியே போய்விட்டான்.


பாரதி

பாரதியார் சிறு வயதிலேயே கவிதைகள் எழுதிப் புகழ்பெற்றவர். காந்திமதிநாதன் என்ற புலவர் பாரதிமேல் பொறாமை கொண்டவர். அவரை மட்டம் தட்ட நினைத்து, “நீ உடனே கவிதை எழுதக்கூடிய திறமை பெற்றவனாமே, 'பாரதி சின்னப் பயல்' என்ற ஈற்றடி வருவதுபோல் ஒரு வெண்பா பாடு” என்றார். தன்னைக் கிண்டல் செய்ய நினைக்கிறார் என்பதை உணர்ந்த பாரதியார், புலவருக்குப் பாடம் புகட்ட எண்ணி ஒரு வெண்பா பாடினார். “ஆண்டில் இளையவன் என்றந்தோ அகந்தையினால் ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் - மாண்பற்றகாரிருள் போல் உள்ளத்தான்'' 'காந்திமதிநாதனைப்பார் அதி சின்னப்பயல்” 'பாரதி' என்ற சொல்லைப் பிரித்து 'பார் - அதி' என்று ஆக்கிவிட்டார்.

ஆனால் வயதான அவரது மனதைப் புண்படுத்தக் கூடாது என்று எண்ணிய பாரதியார், “காந்திமதி நாதர்க்குப் பாரதி சின்னப்பயல்” என்று மாற்றிப் பாடினார். இந்தப் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்? எனவே ய ரையும் மட்டம் தட்ட வேண்டாம். மாட்டிக் கொள்ளவும் வேண்டாம். எல்லோரையும் பாராட்டுவோம். நாமும் பாராட்டப்படுவோம்.
- முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலையமுன்னாள் இயக்குனர்மதுரை98430 62817


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X