சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவியாளராக சேர்ந்தோர் குறித்து ரகசிய கணக்கெடுப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சென்னை : 'குரூப் - 2ஏ' தேர்வு முறைகேடு வாயிலாக, உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த, ரகசிய ஆய்வு துவங்கியுள்ளது. இது, பதிவுத்துறையில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ' தேர்வுகளில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணை, தொடர் சங்கிலி போன்று நீள்கிறது.மோசடியில் சிக்கியோரின் உறவினர்கள், பதிவுத்துறை பணியில் இருந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணையில், மேலும் சில நபர்கள் சிக்கினர். தற்போதைய நிலவரப்படி, பதிவுத்துறையை சேர்ந்த இரண்டு பேர், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை வளையத்தில் உள்ள மேலும் நான்கு பேர் என, மொத்தம் ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து, 'குரூப் - 2ஏ' தேர்வு முறைகேடு வாயிலாக, உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த, ரகசிய ஆய்வை, பதிவுத்துறை உயரதிகாரிகள் துவக்கி உள்ளனர்.அவர்களின் முழு விபரங்களும் சேகரிக்கப்படுவதால், பதிவுத்துறையில் சில ஆண்டுகளாக பணியில் சேர்ந்தோர் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:பொதுவாக பட்டப்படிப்பு முடித்தவர்கள், உதவியாளர்களாக பணியில் சேருகின்றனர். 'குரூப் - 2 ஏ' தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு வருகின்றனர்.சமீப காலமாக, பொறியியல் பட்டம் முடித்தவர்களும், சட்டம் படித்தவர்களும், உதவியாளர்களாக பணிக்கு வருகின்றனர். முழுநேர சார் பதிவாளர்கள் இல்லாத இடங்களில், இவர்கள் தான் பத்திரப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர்.இவர்களில் பலர், வசூல் மன்னர்களாக உள்ளனர். சட்ட ரீதியாக குறைபாடுகள் உள்ள ஆவணங்களை பதிவு செய்கின்றனர்.

உயரதிகாரிகள் விசாரித்தாலும், உரிய பதில் அளிக்காமல் குழப்புகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், தேர்வு மோசடி யில், ஆறு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், எத்தனை பேர் பதிவுத்துறையில் பணியில் உள்ளனர் என்பதை கண்டறிய, அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தற்போது, விசாரணையில் சிக்கியவர்கள், பணிகளின் போது, எந்த மாதிரியான மோசடி செய்துள்ளனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சிக்குவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X