வெளியீடு! திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர்.....பொது மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளியீடு! திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர்.....பொது மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் 'மகிழ்ச்சி'

Added : பிப் 10, 2020
Share

திண்டிவனம்:திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு, நிர்வாக அனுமதி கொடுத்துவிட்ட நிலையில், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் மூலம், பொது மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனத்தில், நகராட்சிக்கு சொந்தமான இந்திரா காந்தி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 47 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த பஸ் நிலையத்தில் 10 பஸ்கள் வந்து செல்வதற்கேற்ற வசதி மட்டுமே உள்ளது. ரயில்வே மேம்பாலத்தையொட்டியுள்ள பஸ் நிலையத்திற்குள் அனைத்து மார்க்கங்களிலிருந்து வரும்வாகனங்கள் உள்ளே வந்து வெளியே செல்வதற்கு போதுமான இட வசதி கிடையாது.இதனால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் அனைத்து பஸ்களும், பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்லவேண்டிய நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்க இடமின்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்திலேயே, பிரதான பஸ் நிலையம், மேம்பாலத்தின் கீழ் செயல்படுவது திண்டிவனத்தில் மட்டுமே.இதனை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்திற்கு, கடந்த 2001ல் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த 2013ல் புதிய பஸ் நிலையம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கியதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால் புதிய பஸ் நிலையம் தொடங்குவதற்கான எந்த பணியும் இதுவரை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.இதற்கிடையே, ஜெ., அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் செலவில் பஸ் நிலையம் அமைப்பதற்கு, கடந்த 24.7.2018 ல் நிர்வாக அனுமதி கொடுத்தது.
இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கடந்த நவ.,1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பொது மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகள், நகராட்சியின் இணையதளத்தில் வரும் 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம் 27 ம் தேதி, திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பாக டெண்டர் வெளியிடப்பட்டது. அதில், தனியார் பங்களிப்பில் (PPP-private, puplic, partcipation) ரூ.20 கோடி செலவில், திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு, தகுதியுள்ள ஒப்பந்தாரர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டது.அதில் புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ்கள் வந்து செல்லும் வகையில், திட்டம் தயாரித்து அனுப்பும் படி கோரப்பட்டது. புதிய பஸ் நிலையத்தை கட்டி 22 வருடங்களுக்கு பிறகு, நகராட்சி வசம் ஒப்படைக்கும் படி கூறப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம் DBFOT (design, build, finance, operate and transfer) என்ற திட்டத்தின் படி கட்டப்பட உள்ளது.டெண்டரில் கூறியுள்ள படி, தகுதியுள்ள விண்ணப்பரதாரர்கள், வரும் 31.3.2020க்குள் பஸ் நிலையம் கட்டுவதற்காக மாதிரி வரை படங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.விண்ணப்பம் பெறப்பட்ட ஒப்பந்தாரர்களில், தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் யார் என்று, நகராட்சி நிர்வாக அதிகாரி மூலம் நியமிக்கப்பட்ட குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதிய பஸ் நிலையம் கட்டுதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் அநேகமாக வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், திண்டிவனம் நகர மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X