எங்ககிட்டயேவா! மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி| Dinamalar

தமிழ்நாடு

எங்ககிட்டயேவா! மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020
Share
கோவை:கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, மின் கோபுரத்தை இடம் மாற்றுவதில் சிக்கல் தொடர்கிறது. மின்கோபுரத்தை மாற்ற, மின்வாரியம் பணம் செலுத்துமாறு கேட்கிறது; மாநகராட்சியோ முடியாது என்கிறது.காந்திபுரம், நுாறடி ரோட்டில் ஏழாவது குறுக்கு சந்து அருகே துவங்கி, ஜி.பி.சந்திப்பு மற்றும் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பை கடந்து, இறங்கும் வகையில், 1.75
 எங்ககிட்டயேவா! மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி

கோவை:கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, மின் கோபுரத்தை இடம் மாற்றுவதில் சிக்கல் தொடர்கிறது. மின்கோபுரத்தை மாற்ற, மின்வாரியம் பணம் செலுத்துமாறு கேட்கிறது; மாநகராட்சியோ முடியாது என்கிறது.காந்திபுரம், நுாறடி ரோட்டில் ஏழாவது குறுக்கு சந்து அருகே துவங்கி, ஜி.பி.சந்திப்பு மற்றும் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பை கடந்து, இறங்கும் வகையில், 1.75 கி.மீ., துாரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
பயனுள்ள பாலம்நுாறடி ரோட்டில் இருந்து, இப்பாலத்தில் வருபவர்கள், எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாலையில் இணைந்து, அவிநாசி ரோட்டுக்கு செல்லலாம். வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், இப்பாலத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.பாலத்தை கடந்து வரும்போது, 'எஸ் - பெண்டு' பகுதியில், ரோட்டில், மின் கோபுரம் இருக்கிறது. அதை சற்றுத்தள்ளி இடம் மாற்றிக் கொடுக்குமாறு, கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியது.பணம் கேட்கிறது... அதற்கு, மின் கோபுரத்தை இடம் மாற்றுவதற்கான தொகை செலுத்த வேண்டும்; அருகிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, இடம் ஒதுக்கித் தர வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியது.
வீடுகளை காலி செய்ய வேண்டுமெனில், குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து, மின் கோபுரம் அமைத்திருப்பதோடு, வேறிடத்துக்கு மாற்றுவதற்கு, தங்களிடமே பணம் கேட்பதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி 'உஷ்ணம்'மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.என்.ஆர்., சாலை, மாநகராட்சிக்கு சொந்தமானது. செம்மொழி மாநாடு நடந்தபோது, அக்கல்லுாரி நிர்வாகம் தானமாக கொடுத்த இடம். அவ்விடத்தை மின்வாரியம் ஆக்கிரமித்து, மின்கோபுரம் அமைத்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது; வேறிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினால், எங்களை பணம் கட்டச் சொல்வது நியாயமல்ல' என்கின்றனர்.'நீயா...நானா' என மல்லுக்கு நிற்காமல், மக்கள் நலன் கருதி யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X