பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய - மாநில அரசு மனது வைத்தால் இயற்கைநாரில் ஆடை தொழில் மேம்படும்: நம்பிக்கை தெரிவிக்கிறார் அனகாபுத்தூர் சேகர்

Added : பிப் 10, 2020
Advertisement
 மத்திய - மாநில அரசு மனது வைத்தால் இயற்கைநாரில் ஆடை தொழில் மேம்படும்:  நம்பிக்கை தெரிவிக்கிறார் அனகாபுத்தூர் சேகர்


இயற்கை நாரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், மருத்துவக் குணம் கொண்டவை. தோல் வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு, வெப்பத்தைத் தாங்கும் தன்மை உண்டு. நாட்டிற்கே பெருமை சேர்க்கும், இத்தொழிலை மேம்படுத்த, தமிழக அரசு, மனது வைக்க வேண்டும் என்கிறார், அனகாபுத்துார், இயற்கை நார் நெசவுக் குழுமத் தலைவர் சேகர், 57.
இது குறித்து, அவர் நம்முடன் பகிர்ந்ததாவது: இயற்கை நார் நெசவு என்றால்?வாழை நார், மூங்கில், கற்றாழை, சணல், புளிச்ச கீரை, அன்னாசி நார், பட்டு, தேங்காய் நார், கோரை புல், வெட்டி வேர் ஆகியவற்றால், இயற்கையான முறையில் புடவை, பேன்ட், சர்ட் மற்றும் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வதாகும்.
இந்த தொழிலில் ஆர்வம் வரக் காரணம்?
தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் வைத்தே, இயற்கை நார் நெசவு தொழிலுக்கு மாறினோம். இத்தொழிலுக்கு தேவையான பருத்தி, வாழை ஆகியவை, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. வாழை உற்பத்தியில், இந்திய அளவில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.அப்படியிருக்கையில், வாழை மரத்தின் நார், தேவையில்லாமல் குப்பைக்கு செல்கிறது. இதை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மண் வளத்தையும், தண்ணீரையும் சேமிக்கலாம்.
எத்தனை ஆண்டுகளாக செய்கிறீர்கள்?
இருபது ஆண்டுகளுக்கு முன், மெட்ராஸ் டிசைன்ஸ் நெசவு தொழில் செய்து வந்தோம். அப்போது, நாங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகள், பெருமளவில் ஏற்றுமதியானது. அதன்பின், இயந்திர நெசவு ஆதிக்கத்தால், அத்தொழில் முடங்கியது.கடந்த, 15 ஆண்டுகளாக, இயற்கை நார் நெசவு தொழில் செய்து வருகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த, 100 பெண்கள், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இதை அடிப்படையாக வைத்தே, அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமம் ஏற்படுத்தப்பட்டது.
இத்தொழிலுக்கு வரவேற்பு உள்ளதா?
ஆரம்பத்தில் சணலை கொண்டு, ஆடைகளை உற்பத்தி செய்தோம். அப்போது, 20 நெசவாளர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின், வாழை நார் ஆடைகளை உற்பத்தி செய்தோம். அந்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, கற்றாழை, அன்னாசி நார்களை சேர்த்துக் கொண்டோம்.நாங்கள் உற்பத்தி செய்த ஆடைகளை, டில்லி ஐ.ஐ.டி.,க்கு சோதனைக்கு அனுப்பினர். அதில், 'இயற்கை நாரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், மருத்துவக் குணம் கொண்டவை. 'தோல் வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு, வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டவை' என, முடிவு வந்தது. இதுவே, தொடர்ந்து தொழிலில் ஈடுபட ஆர்வத்தை துாண்டியது. தற்போது, இக்குழுமத்தில், 100 உறுப்பினர்கள் உள்ளனர்.
இயற்கை நார்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?
ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா, அசாம், நாகலாந்து, மேகாலயா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற இடங்களில் இருந்து, கூரியர் மூலம் வாங்குகிறோம்.மக்களிடம் வரவேற்பு உள்ளதா? தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விரும்பி வாங்குகின்றனர். 'ஆன்--லைன்' மூலமாக, அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் விற்பனை செய்கிறோம். எங்களுடைய ஆடைகளுக்கு, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில், அதிக வரவேற்பு உள்ளது. லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில், 'ஆர்டர்' கொடுக்க தயாராக உள்ளனர்.
அரசின் கண்காட்சி, விற்பனை முகாம்களில் பங்கேற்றது உண்டா ?
கைவினைப் பொருட்கள் துறை, சணல் வாரியம் சார்பில், நாடு முழுவதும் நடந்த கண்காட்சியில், பங்கேற்றுள்ளோம். அசாமில் நடந்த வட கிழக்கு பிராந்திய கூட்டமைப்பு கண்காட்சியில் பங்கேற்றோம். அதுமட்டுமின்றி, 2018ல், அசாம் நெசவாளர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்தோம். வாரணாசி, திரிபுரா நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுள்ளனர். இம்மாதம் இறுதியில் திருச்சியில் நடக்கும் சர்வதேச வாழை ஆராய்ச்சி மற்றும் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, புது மாடல்களை உற்பத்தி செய்துள்ளோம்.
மறக்க முடியாத அனுபவம்?
லண்டன் மியூசியத்தில், நாங்கள் உற்பத்தி செய்யப்பட்ட ஆடையை வைத்துள்ளனர். 2015ல், சென்னை பல்கலைக் கழகத்தில், கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் அணிந்த சால்வை, நாங்கள் உற்பத்தி செய்த மூலிகை சால்வை.கடந்த, 2017ல் டில்லியில் நடந்த, வேளாண் துறை நிகழ்ச்சியிலும், பிரதமர் மோடி, நாங்கள் உற்பத்தி செய்த சால்வையை அணிந்திருந்தார். அத்தி வரதருக்காக, பிரத்யேகமாக, மூலிகை புடவையை உற்பத்தி செய்து, சாத்தினோம்.
மத்திய - மாநில அரசுகளின் உதவி ?
பத்து ஆண்டுகளுக்கு முன், சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தில் பதிவு செய்தோம். அந்த அதிகாரிகள், நாங்கள் செய்யும் தொழிலை பார்வையிட்டு, தொழிலை மேம்படுத்த இயந்திரங்கள் வழங்க முன்வந்தனர். ஆனால், அதற்கேற்ப இடவசதி இல்லை.அதனால், போதிய இடவசதியை ஏற்படுத்தி தருமாறு, மாநில அரசிடம், பலமுறை கோரிக்கை வைத்தோம். துறை அமைச்சரிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். எங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை.இதனால், தொழிலை மேம்படுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். இடம் மற்றும் இயந்திர வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், இயற்கை நார் நெசவு தொழிலில் உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கி, நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம்.எங்களது கோரிக்கையை, முதல்வர் இ.பி.எஸ்., நிறைவேற்ற வேண்டும் என்று, இயற்கை நார் நெசவாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம். வரும் பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேறும் என்ற ஆவலோடு உள்ளோம்.இவரை தொடர்புகொள்ள விரும்புவோர் 98415 41883 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X