கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுவாச பிரச்னையால் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுவாச பிரச்னையால் மக்கள் அவதி

Added : பிப் 10, 2020
Share
 கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுவாச பிரச்னையால் மக்கள் அவதி

வேளச்சேரி:வீராங்கால் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து உருவாகும் வாயுவால், சுவாச பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் வடிகால் நீர், வேளச்சேரி விரைவு சாலையை ஒட்டி உள்ள, வீராங்கால் கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், உபரி நீர் வெளியேறவில்லை. விரைவு சாலையை ஒட்டி உள்ள, வணிக நிறுவனங்கள் மற்றும் சில குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாயில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கால்வாயை ஒட்டி உள்ள கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில் இருந்தும், கழிவு நீர் கால்வாயில் விடப்படுகிறது.கால்வாயை பராமரிப்பு யார் என்பது குறித்து, பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால், கழிவு நீர் விடுவதை தடுக்க, இரு துறைகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில், சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ள கால்வாய் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஒன்றரை கி.மீ., வரை, கால்வாயில், 7 அடி உயரத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.இதனால், 2 கி.மீ., சுற்றளவில் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து உருவாகும் ஒரு வித வாயுவால், மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு உள்ளது. துாக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது.ஆகவே, கால்வாயில், கழிவு நீர் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என, வேளச்சேரி பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X