பொது செய்தி

தமிழ்நாடு

முதியோரின் உதவியாளருக்காக மருத்துவ ஆலோசனை குழு

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 முதியோரின் உதவியாளருக்காக மருத்துவ ஆலோசனை குழு

சென்னை:முதியோருக்கு உதவுவோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமையில், மருத்துவ ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, தி.நகரில் நேற்று நடந்தது. இதில், ஆண்டு விழா மலரை, மூத்த நரம்பியல் மருத்துவர் அர்ஜுன் தாஸ் வெளியிட்டார்.மேலும், டாக்டர் வி.எஸ்.நடராஜன் தலைமையில், 'முதியோரைக் காப்பாளருக்கு உதவும் குழு' என்ற, மருத்துவ ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. அதில், முதியோர் நலம், நரம்பியல், மூட்டு, எலும்பு இயல், இதய இயல், புற்றுநோய் மற்றும் மன நோய் சார்ந்த டாக்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில், டாக்டர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது:முதியோருக்கு, 'பார்க்கின்சன்ஸ்' என்னும், உதறுவாதம், மறதி, மூட்டுவலி, பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட பல விதமான தொந்தரவுகள் இருக்கும். இதனால், அவர்களை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.அவர்களை பாதுகாப்போரும் மன அழுத்தம், துாக்கமின்மை உள்ளிட்ட, பல்வேறு உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, முதியோருக்கும், உடன் பாதுகாப்போருக்கும் ஆலோசனைகளை வழங்க, இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாக, முதியோர் அதிகமாக பாதிக்கப்படுவது, பார்க்கின்சன்ஸ் நோயினால் தான். அவர்கள், கை நடுக்கத்தால் எதையும் செய்ய முடிவதில்லை. இதிலிருந்து மீள, கையில், விரல்விட்டு எண்ணுவது, மனதை ஒருநிலைப்படுத்தி பூஜா மாலைகளை உருட்டுவது உள்ளிட்ட பயிற்சிகளை செய்யலாம். வலது கை பாதிக்கப்பட்டவர்கள், இடது கையை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகளை வழங்க, மருத்துவக்குழு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து, டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:தலைக்காயம், முதியவர்களை பெரிதும் பாதிப்பது, பார்க்கின்சன்ஸ் நோய். இது மூளை தொடர்பானது. இது, சிறிது சிறிதாக பெரிதாகி, தசை இறுக்கம், நடுக்கம், நிலை தடுமாற்றம் உள்ளிட்ட தொந்தரவுகளுக்குப் பின், உண்பது, உடுத்துவது உள்ளிட்ட உடலின் செயல்பாடுகளை முடக்கிவிடும். இந்த பாதிப்புள்ளோர் தொடர் உடற்பயிற்சிகளும், பிசியோதெரபியும் செய்ய வேண்டும்.உடனிருப்போர், மருந்துகளை சரியான நேரத்துக்கு கொடுக்க வேண்டும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, உதவுவோர் அறிந்திருக்க வேண்டும். மூச்சுத் திணறலில், உடனிருப்போர் உதவ வேண்டும். இவ்வாறான முதுமை நோய்களுக்கு, உடனிருப்போருக்கு தேவையான ஆலோசனைகளை, இந்த குழு வழங்கும்.எங்களை, 044 -- 2641 2030, 4861 5866 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 99949 02173 என்ற மொபைல் எண்ணிலோ அழைத்து, மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X