நவமலை, நாகரூத்து பழங்குடி மக்களுக்கு வீடுகள் காலம் கரையுது!வனத்துறை வருவாய்த்துறை அசட்டையால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவமலை, நாகரூத்து பழங்குடி மக்களுக்கு வீடுகள் காலம் கரையுது!வனத்துறை வருவாய்த்துறை அசட்டையால் அவதி

Added : பிப் 10, 2020
Share

ஆனைமலை;ஆனைமலை அடுத்த நவமலை, நாகரூத்து செட்டில்மென்ட்களில், வீடுகள் கட்டித்தராமல், வனத்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் காலம் தாழ்த்துவதால், பழங்குடியினர் அவதிப்படுகின்றனர்.ஆனைமலை அடுத்த சர்க்கார்பதி பவர் ஹவுஸ் அருகே, 'நாகரூத்து 2' செட்டில்மென்ட் உள்ளது. இங்கு, 22 குடிசைகளில், 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வந்தனர்.
குடியிருப்பு அருகே உள்ள காண்டூர் கால்வாயில், கடந்தாண்டு, செப்., மாதம் பாறை, மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டது.இதில், கால்வாய் நீர் வெளியேறி, அந்த வெள்ளத்தில், 20 குடிசைகள் அடித்து செல்லப்பட்டன. இதில், இரண்டு வயது குழந்தை இறந்தது, ஆறு பேர் காயமடைந்தனர். வனத்துறை, சர்க்கார்பதி மின் வாரிய குடியிருப்பில், பழங்குடியினரை தங்க வைத்து, மின்வாரிய இடத்தில், 22 வீடுகள் கட்ட திட்டமிட்டனர்.அதேபோல், கடந்தாண்டு மே மாதம், பொள்ளாச்சி, நவமலை செட்டில்மென்டில், ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கி, ஏழு வயது சிறுமி, முதியவர் பலியானார்; மூவர் காயமடைந்தனர். அங்கிருந்த பழங்குடியினரை அருகிலுள்ள மின்வாரிய குடியிருப்பு அரங்கத்தில், இரவு நேரம் தங்க அனுமதித்தனர். நவமலை பழங்குடியினருக்கு, 30 வீடுகள் கட்டித்தர வருவாய்த்துறை, வனத்துறை திட்டமிட்டு, கள ஆய்வு செய்தது.நவமலை, நாகரூத்து பகுதிகளில், ஆய்வு செய்து பல மாதங்களாகியும், இன்னமும் வீடு கட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. மின்வாரிய குடியிருப்பில் தங்க முடியாமல், நாகரூத்து பழங்குடியினர், மீண்டும் சேதமடைந்த குடிசைகள் அருகே, தாங்களாகவே பணம் திரட்டி, புதிய குடிசைகள் அமைத்து வருகின்றனர்.அதேபோல், நவமலை பழங்குடியினர், மின்வாரிய அரங்கத்தில், இடநெருக்கடியால் சிரமப்படுகின்றனர். புதிய வீடுகள் கட்டித்தராமல் வனத்துறை, வருவாய்த்துறையினர் காலம் தாழ்த்துவதால், பழங்குடியினர் அனுதினமும் இன்னலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தர வேண்டுமெனில், மற்ற அரசு துறைகள் ஆனைமலை புலிகள் காப்பக அறக்கட்டளைக்கு, நிதியை நன்கொடையாக ஒதுக்க வேண்டும். அந்த நிதியை கொண்டு, வனத்துறை தான் வீடு கட்டித்தர முடியும்; வேறு துறைகளால் கட்டித்தர முடியாது.நவமலை, நாகரூத்து பகுதியில் ஆய்வு செய்த வருவாய்த்துறையினர், வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்தனர். அந்த இடம் புலிகள் காப்பகத்தில் இருப்பதால், தகர மேற்கூரை வீடு கட்டித்தர வனத்துறை திட்டமிட்டது. ஆனால், இதுவரை வீடுகள் கட்டவில்லை.ஆழியாறு, குரங்கு அருவி, சேத்துமடையில் நுழைவுக்கட்டணம் பெறுவதில், வனத்துறைக்கு, லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. ஏன், வனத்துறை நிதிக்கு தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறது. சொந்த நிதியில் இருந்தே வீடு கட்டித்தரலாம்.பரம்பிக்குளத்தில், இதே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், கேரள அரசு, 4.5 லட்சம் ரூபாயில் 'சோலார்' விளக்கு, கழிப்பிட வசதி கொண்ட, மூன்று அறைகளுடன் கூடி கான்கிரீட் மேற்கூரையுள்ள வீடு கட்டிக்கொடுத்து உள்ளது. வனத்துறை பழங்குடியினரை வஞ்சிக்காமல், விரைவில், கான்கிரீட் மேற்கூரையுள்ள வீடுகள் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.அனுமதி இல்லை!பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறியதாவது:நுழைவுக்கட்டணம், அபராதம் உள்ளிட்ட வருமானம் அரசுக்கு அனுப்பப்படுகிறது. அதிலிருந்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. வருமானத்திலிருந்து மேம்பாட்டு பணிகள் செய்ய, அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். தற்போது, பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட, வருவாய்த்துறையுடன் இணைந்து, தன்னார்வலர்களிடம் நிதி திரட்டி வருகிறோம். போதிய நிதி கிடைத்ததும், பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தரப்படும். கேரள அரசு கட்டியதைப்போல், வனத்தினுள் கான்கிரீட் வீடுகள் கட்ட, தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X