சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : பிப் 10, 2020
Advertisement

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, சிமிட்டிரி சாலையைச் சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான ஜாவித், 23, என்பவருக்கும், திருவொற்றியூர், தாங்கல் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமிக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெரு, தனியார் திருமண மண்டபத்தில், நேற்று காலை, திருமண ஏற்பாடுகள் நடந்தன. தகவலறிந்த, சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், கொருக்குப்பேட்டை போலீசாருடன், திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று, திருமணத்தை நிறுத்தினர். பின், இருவீட்டாருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மாமூல் கேட்ட ரவுடி சிக்கினார்
வியாசர்பாடி: சத்தியமூர்த்தி நகர், 49வது பிளாக்கைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ், 24. இவர் மீது, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் காவல் நிலையங்களில், கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபமாக, சத்தியமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி சுற்றுவட்டார வியாபாரிகளிடம் தொலைபேசியில் மிரட்டி, மாமூல் கேட்டுள்ளார். தகவலறிந்த எம்.கே.பி.நகர் போலீசார், பிரவீன் ராஜை, நேற்று காலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
டூ - வீலரில் ரூ.4,000 திருட்டு
புளியந்தோப்பு: ஓட்டேரியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரான முகமது பயாஸ், 24, நேற்று காலை, கன்னிகாபுரம் விளையாட்டு திடலுக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, அவரது டூ - வீலரில் இருந்த ஹெல்மெட், 4,000 ரூபாய், கிரெடிட், டெபிட் கார்டுகள் திருடப்பட்டது தெரியவந்தது. புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கியவருக்கு, 'கம்பி!'
திருவொற்றியூர்: திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கிஷோர், 25. நேற்று மாலை, மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் நின்றிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த மூவரை பார்த்து, கிஷோர் தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து, அவரை தாக்கி தப்பியது. இதில், கிஷோருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த, திருவொற்றியூர் போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, யுகேந்திரன், 29, என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கியவர் அகப்பட்டார்
அம்பத்துார்: கொரட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்த பெருமாள், 45; தொழிலாளி. அவரது மனைவி சுகுணா, 30. கரூர், ஒத்தவாடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 31; தனியார் நிறுவன ஊழியர்; சுகுணாவின் முகநுால் நண்பர். இவருக்கு, 3 மாதத்திற்கு முன் திருமணமானது. இந்த நிலையில், சுகுணாவுடனான, நட்பு குறித்த பிரச்னையால், அவரது மனைவி பிரிந்தார். தன் மனைவியின் பிரிவுக்கு சுகுணா தான் காரணம் என, பாஸ்கர் ஆத்திரமடைந்தார். அவர், நேற்று அம்பத்துாரில், சுகுணா வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று, அவரிடம் தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்தினார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், சுகுணாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து விசாரித்த அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல்
புழல்: புழல், ஜீவா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 33; அவரது மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டால், வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே சென்று, கஞ்சா விற்பது வழக்கம். புழல் போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X