புதுடில்லி : இடஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ., முயற்சி செய்வதாக காங்., எம்.பி.,ராகுல் கற்றம்சாட்டி உள்ளார்.

அரசு பணிகளில் எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து உத்திரகாண்ட் அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
இவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட், எஸ்சி., எஸ்டி., இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது செல்லும் எனவும், பணி, பதவி உயர்வு ஆகியவற்றிற்கு இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.,யின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தன. இடஒதுக்கீடு தொடர்பாக இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காங்., உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்., எம்.பி.,ராகுல், பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்., கொள்கைகள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை.
அவர்கள் எஸ்சி., எஸ்டி., பிரிவினரின் முன்னேற்றத்தை விரும்புவதில்லை. அவர்கள் அரசியலமைப்பின் அனைத்து அமைப்புக்களையும் உடைக்கிறார்கள். இடஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்.,ம் முயற்சிக்கின்றன. மோடியும், மோகன் பகவத்தும் எவ்வளவு கனவு கண்டாலும் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் விடமாட்டோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE