வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லியில் கல்லூரி ஆண்டு விழாவின் போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரம் டில்லி கார்கி கல்லூரியில் ரெவெரி என்ற பெயரில் மாலை 6.30 மணியளவில் ஆண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த கொடூரத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரும், போலீசாரும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக மாணவி ஒருவர் கூறுகையில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல. 30 முதல் 35 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மது போதையில் இருந்தனர். அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகைப்பிடித்த படங்களும் எங்களிடம் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவிகள் பலர் மயங்கி விழுந்தனர். பல மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினர். மருத்துவ உதவி தேவைப்பட்ட போதிலும் கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கும்பலாக அதிகமானவர் வந்ததால் எங்களால் நகர்ந்து போக முடியவில்லை என்றார்.
இச்சம்பவம் நடந்த அன்று தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கல்லூரி மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை எவரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என கல்லூரி முதல்வர் பிரமிளா குமார் தெரிவித்துள்ளார். தன்னிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும், கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியிலேயே பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE