சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., பாணியை இ.பி.எஸ்., பின்பற்றுவாரா?

Added : பிப் 10, 2020
Advertisement
 எம்.ஜி.ஆர்., பாணியை இ.பி.எஸ்., பின்பற்றுவாரா?

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர், எஸ்.டி.சோமசுந்தரம். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அ.தி.மு.க.,விலிருந்து விலகி, நமது கழகம் என்ற புதிய கட்சியை துவக்கினார்.

எம்.ஜி.ஆர் மீது, ஊழல் குற்றச்சாட்டுக்களை, 100 பக்கம் தயார் செய்து, தன் கட்சிக்காரர்களுடன், சென்னை அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று, அப்போதைய கவர்னரிடம் வழங்கினார். எஸ்.டி.எஸ்., நடத்திய ஊர்வலத்திற்கு, முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., அனுமதி வழங்கினார். அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.,வினரால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, எஸ்.டி.எஸ்.,சை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினார். எம்.ஜி.ஆர்., நினைத்திருந்தால், தன் வசம் இருந்த காவல் துறையை பயன்படுத்தி, ஜாமினில் வெளிவராத அளவுக்கு, எஸ்.டி.எஸ்.,சை கைது செய்திருக்கலாம்; ஆனால், அப்படி செய்யவில்லை.

சென்னை, நந்தனம், சி.ஐ.டி., காலனியில் இருக்கும் எஸ்.டி.சோமசுந்தரம் இல்லத்திற்கு எம்.ஜி.ஆர்., திடீரென சென்றார். அவரிடம், 'உங்களுக்கு, என் மீது, அப்படி என்ன கோபம் சொல்லுங்கள்; சரி செய்கிறேன். மீண்டும் நீங்கள், அ.தி.மு.க.,வில் சேர வேண்டும். உங்களைப் போல படித்தோர் என்னோடு இருக்க வேண்டும்' என, மனம் விட்டு பேசினார். எம்.ஜி.ஆரே நேரில் வந்து அழைத்ததால், எஸ்.டி.எஸ்., மீண்டும் கட்சியில் சேர்ந்தார். அப்போது, 'எம்.ஜி.ஆரைப் போன்ற தலைவரை, உலகம் இதுவரை கண்டதில்லை' என, புகழ்ந்துரைத்தார்.

இன்று, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க., நலன் கருதியே, 'ஒருங்கிணைப்பாளர்கள் முறையை ரத்து செய்து, பொதுச்செயலர் முறை வேண்டும்' என்கிறார்; இதில், எந்த தவறும் கிடையாது. ஆனால், ஆட்சியின் மீதோ, தனி நபர் மீதோ அவர் எந்த அவதுாறும் சுமத்தவில்லை. அ.தி.மு.க., பதவி குறித்து, அவரது கருத்தை ஏற்க முடியாவிட்டாலும், அதில் இருக்கும் பிரச்னையை, அவரை நேரில் அழைத்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் விளக்கி இருக்க வேண்டும்.அதற்கு மாறாக, பல்வேறு பிரிவுகளில் அவரை கைது செய்திருக்க கூடாது. இது போன்ற பிரச்னைகளை கையாளும் போது, எம்.ஜி.ஆர்., பாணியில், முதல்வர் இ.பி.எஸ்., செயல்பட வேண்டும்!

அரசியல், 'என்ட்ரி'க்கு அனுபவம் அவசியம் கூற்று ஏற்புடையதல்ல!

ஆர்.கிருஷ்ணசுவாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசு பணியில், இருந்தவர், அரவிந்த் கெஜ்ரிவால்; 'ஆம் ஆத்மி' கட்சியை துவக்கி, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ், பா.ஜ., இரு பெரிய தேசிய கட்சிகளை தோற்கடித்து, டில்லி ஆட்சியை கைப்பற்றினார். அவருக்கு அந்த அரசியல் அனுபவம் புதுமையானது.

அதேபோல, முன்னாள் பிரதமர் இந்திரா மறைவுக்கு பின், விமானியாக பணியாற்றிய, அவரது மூத்த மகன் ராஜிவ், நாட்டில் பிரதமராகி, சாதனைகளை படைத்தார். அவருக்கும், அந்த அரசியல் அனுபவம் புதுமையானது. இதே போன்று, பொறியியல், மருத்துவம், சட்டம் பயின்றோர், முதல் முறையாக தொழிலில் பிரவேசிக்கும் போது, அவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என, யாரேனும் கேட்பதுண்டா? அவர்களுக்கும் அனுபவம் புதுமையானது.
தமிழகத்தில், நடிகர் கமல் கட்சி துவக்கி, அரசியல் பிரவேசம் செய்கிறார். நடிகர் ரஜினியும் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். ரஜினிக்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர் என்ற முத்திரையை வேண்டுமானால் குத்தலாம்; அவரால் எதையும் சாதிக்க முடியாது என, அலட்சியமாக பேசலாம். அரசியல் பிரவேசத்திற்கு, 'அனுபவம் அத்தியாவசியம்' என்ற கூற்று ஏற்புடையதல்ல. ஓரளவுக்கு படிப்பும், திறமையும் இருந்தால் போதும்.

தங்கள் கொள்கைகளை, மக்களிடம் தெளிவாக, புதிதாக அரசியலுக்கு வருவோர் கூற வேண்டும். மக்களிடையே அறிமுகம், அபிமானம் பெற்றவர்கள், உண்மையுடனும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் உழைக்க வேண்டும். அப்போது தான், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள், பிரகாசமாக இருக்கும். யாரை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதை, வாக்காளர்கள் தான் தீர்மானித்து முடிவு செய்வர்; அவர்கள் தீர்ப்பே ஆண்டவன் தீர்ப்பு!

அரசால் மட்டுமே உருவாக்கப்படுவது வேலைவாய்ப்பு அல்ல!

க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: அரசுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி, அரசின் செலவினங்களை ஈடுகட்டும் நடைமுறை, 20 ஆண்டுகளாக, எல்லா மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன.மத்திய அரசு பட்ஜெட்டை பொறுத்தவரை, பல நிறைவுகளும், சில குறைவுகளும் உள்ளன என்பதை, மறுப்பதற்கில்லை. அரசின் வருமானத்தை பெருக்க, புதிதாக வழிதேடாமல், அரசுத் துறை பங்குகளை விற்று, நிதி, நிர்வாகம் நடத்துவதும் சரியல்ல.

விவசாயத்திற்கு முக்கிய காரணமான நதிகள் இணைப்பு திட்டத்திற்காக, எந்த ஓர் அறிவிப்பும், மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தனி நபரின் வருமானத்தை உயர்த்தக்கூடிய, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. வருமான வரி செலுத்துவோர் பழைய முறையையும் கையாளலாம் என்பதால், எது லாபமோ, அதை வரி செலுத்துவோர் தேர்வு செய்து கொள்ளலாம்.ஐந்து கோடி வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு, தணிக்கை நியதிகளிலிருந்து விலக்கு அளித்திருப்பது, எண்ணற்ற சிறு நிறுவனங்களுக்கு நேரம், செலவை குறைக்கும்.புதுமையான தொழில்களில் ஈடுபடும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், ஊழியர்களுக்கு தள்ளுபடியில் வழங்கும் பங்குகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு சலுகை அளித்து இருப்பது, சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சி.

பொருளாதார வசதி இல்லாத இளைஞர்கள், தொழில் முனைவோர் விரும்பினால், அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும் திட்டம், பி.எம்.இ.ஜி.பி., திட்ட மதிப்பு, 25 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். உற்பத்தி நிறுவனங்களுக்கு, 25 சதவீத மானியத் தொகை வழங்கப்படுவதால், வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள, வழிவகை செய்கிறது. அரசுத் துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை, 2021க்குள், 32.63 லட்சத்திலிருந்து, 35.25 லட்சமாக்கி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.வேலைவாய்ப்பு என்பது, அரசால் மட்டுமே உருவாக்கப்படுவது அல்ல. நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களும் சேர்ந்து உருவாக்கலாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X