அமளி! இட ஒதுக்கீடு கொள்கை; லோக்சபாவில் பா.ஜ.,வை கொந்தளிக்க வைத்த திமுக

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (42)
Advertisement
அமளி, இடஒதுக்கீடு, கொள்கை, லோக்சபா, திமுக, பார்லி., உச்சநீதிமன்றம், தீர்ப்பு

'அரசு பணிகள் மற்றும் அரசு பணி பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது; இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமை கிடையாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று எதிரொலித்தது.
'ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இட ஒதுக்கீடு கொள்கையை, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ., சீர்குலைக்க முயல்வதாக, மக்களிடையே ஒரு வித கருத்து இருக்கிறது' என, தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர். இது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்களை கொதிப்படையச் செய்தது. இதனால் ஏற்பட்ட அனல் பறக்கும் விவாதத்தால், லோக்சபாவே அமளியால் திணறியது.

உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், விஜய் பகுகுணா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, மாநில அரசின் பொதுப் பணித் துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 'பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அவசியமில்லை


இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, மாநில பா.ஜ., அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, சமீபத்தில் தீர்ப்பளித்தது.

அதன் விபரம்:மாநில அரசுகளின் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கும்படி கோருவது அடிப்படை உரிமை அல்ல. அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கும்படி, மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதி செய்யும் தகவல்கள் இல்லாமல், இட ஒதுக்கீடு அளிக்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது. ஒதுக்கீடு அளிக்கும்படி கோரினால், அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.இந்த விவகாரம், நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், கடுமையாக எதிரொலித்தது.


திணறியது


'ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இட ஒதுக்கீடு கொள்கையை, கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் சீர்குலைக்க முயல்வதாக, மக்களிடையே ஒரு வித கருத்து இருக்கிறது' என, தி.மு.க.,வினர் பா.ஜ.,வை குற்றஞ்சாட்டினர். இது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்களை கொதிப்படையச் செய்தது. இதனால் ஏற்பட்ட அனல் பறக்கும் விவாதத்தால், லோக்சபாவே அமளியால் திணறியது.லோக்சபா நேற்று கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இப்பிரச்னையை விவாதிக்க அனுமதி கேட்டும்தரப்படவில்லை

.இதனால், ஜீரோ நேரத்தின்போது சில நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் சார்பில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, ''இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கப் பார்க்கிறீர்கள். தேசியத்திற்கு மாறாக, மனுவாத அடிப்படையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது,'' என்றார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய, காங்., முயல்கிறது.இது குறித்து, சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், சபையில் விளக்கம் அளிப்பார். அதில் திருப்தி ஏற்படவில்லை எனில், சபையில் விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைக்கலாம்,'' என, தெரிவித்தார்.

லோக் ஜனசக்தி எம்.பி., சிராக் பஸ்வான், ''இட ஒதுக்கீடு என்பது, உரிமையே தவிர சலுகை அல்ல. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

திரிணமுல் காங்., - எம்.பி., கல்யாண் பானர்ஜி, ''உச்ச நீதிமன்ற தீர்ப்பை சரி செய்ய வேண்டியது, பா.ஜ.,வின் பொறுப்பு,'' என்றார். அப்போது, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''பிரச்னையை தீர்ப்பதற்கு, மத்திய அரசு நிச்சயம் முயலும்,'' என்றார்.


முழக்கம்

இந்நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் பேச வாய்ப்பு தரும்படி, பலமுறை கேட்டனர். வாய்ப்பு மறுக்கப்படவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் திரண்டனர்.'சிறிய கட்சியான லோக் ஜனசக்திக்கு வாய்ப்பு தரும்போது, மூன்றாவது பெரிய கட்சியான, தி.மு.க., புறக்கணிப்படுவதை ஏற்க முடியாது' என, முழக்கமிட்டனர். எனவே, வேறு வழியின்றி சபாநாயகர் ஓம் பிர்லா வாய்ப்பளித்தார்.

அப்போது, தி.மு.க., மூத்த எம்.பி., ராஜா பேசுகையில், ''இந்த அரசு, ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இட ஒதுக்கீடு கொள்கையின் மீது, பல்வேறு ரூபங்களில், அடுத்தடுத்து அடிகள் விழுகின்றன. ''சமூக நீதியை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைக்கப் பார்க்கிறீர்களோ என்ற கருத்து, மக்கள் மத்தியில் நிலவுகிறது,'' என்றார்.


என்ன பங்கு


அவ்வளவு தான், பா.ஜ., - எம்.பி.,க்கள் கொதித்து எழுந்தனர்.

அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''நீங்கள் சீனியர் எம்.பி., விபரம் தெரிந்தவரும் கூட. எப்படி இவ்வாறு நீங்கள் கூறலாம். எங்களை ஏன் குற்றம் சுமத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்பில், எங்களுக்கு என்ன பங்கு,'' என, வாதிடவும், சபை அமளிக் காடானது.

அப்போது, ராஜா தொடர்ந்து பேசியதாவது:பொறுமை காத்தால் மட்டுமே என் பேச்சு புரியும். மத்திய அரசும், உத்தரகண்ட் அரசும் வேறு வேறல்ல; அரசியல் ரீதியாக ஒன்று தான். இதை, யாரும் மறுக்க முடியாது.உச்ச நீதிமன்றத்தில், உத்தரகண்ட் மாநில பா.ஜ., அரசின் சார்பில், வைக்கப்பட்ட வாதங்கள் எல்லாமே ஆவணங்களில் உள்ளன. அதை, யாரும் மறைத்து விடவும் முடியாது. மாநில அரசின் மூத்த அட்வகேட் ஜெனரல், 'எஸ்.சி., - எஸ்.டி., இட ஒதுக்கீடு என்பது, அடிப்படை உரிமையும் அல்ல; அரசியல் சட்ட உரிமையும் அல்ல' என்று தெளிவாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறார்.உத்தரகண்டில், பா.ஜ., தலைமையிலான அரசு நடக்கிறது. அப்படியிருக்கையில், இதில் பா.ஜ.,வுக்கு பங்கே இல்லை என கூறிவிட முடியுமா.


தைரியம் உள்ளதாகல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கே இட ஒதுக்கீடு என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஏற்கனவே பவித்ரா வழக்கில், 'இட ஒதுக்கீடு பெற, பிறப்பு மட்டுமே போதுமானது. மாநில அரசு கருத்துகள் உட்பட எதுவும் அவசியமல்ல' என, உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவாக கூறிவிட்டது.இந்த தீர்ப்பு ஏற்கனவே இருக்கையில், இப்போது எதற்கு, இந்த புதிய உத்தரவு என்பது தான் புலப்படவில்லை.அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், இரண்டு வழிகள் தான் உள்ளன.ஒன்று, தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது. இரண்டாவது, புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து, எந்த பிரச்னையும் இனி வராதபடி, அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது. இதை செய்வதற்கு, மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா.இவ்வாறு, ராஜா பேசினார்.

பா.ஜ.,வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான அமளிக்கு மத்தியில், ராஜாவின் பேச்சு முழுவதும் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்தே இருந்ததால், சபை கொந்தளித்தபடியே இருக்க, இறுதியில் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.


எங்களுக்கு சம்பந்தமில்லை: தாவர்சந்தை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஎதிர்க்கட்சிகளின் கோபாவேசத்தை அடுத்து, மதியத்துக்கு மேல், இப்பிரச்னை அரசின் நிலையை விளக்கி, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அறிக்கை சமர்ப்பித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ''பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை என்று, 2012ல் முடிவெடுத்தபோது, உத்தரகண்டில்இருந்தது காங்கிரஸ் அரசு. இவ்வழக்கில், எந்த வகையிலும் மத்திய அரசு தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. இவ்விஷயம் தொடர்பாக, மத்திய அரசின் உயர் மட்டக்குழு, ஆலோசனை மேற்கொண்டு வருகிறது; உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.
இந்த பதிலை ஏற்க முடியாதென கூறி, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


'இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சின் மரபணு!'உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மோகன் பாகவத்தும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க, எவ்வளவு கனவு கண்டாலும், அது நிறைவேற அனுமதிக்க மாட்டோம். இந்த இட ஒதுக்கீடு விவகாரம், காலம் காலமாக அவர்களை எரிச்சலடையச் செய்கிறது. எனவே தான், இட ஒதுக்கீடு கோர, அவர்களுக்கு உரிமை இல்லை என்ற வாதத்தை, பா.ஜ., அரசு, நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மரபணுவிலேயே, இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


'பலவீனப்படுத்தும் முயற்சி'பிரியங்கா குற்றச்சாட்டுகாங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறியதாவது:இட ஒதுக்கீடுக்கு எதிராக, பா.ஜ., அரசு தொடர்ந்து செய்து வரும் முயற்சிகளை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடுக்கு எதிராக, தொடர்ச்சியான கருத்துகளை, ஆர்.எஸ்.எஸ்., முன்வைத்து வருகிறது. உத்தரகண்டில் ஆளும் பா.ஜ., அரசு, இட ஒதுக்கீடு கோரும் அடிப்படை உரிமையை ரத்து செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை, உ.பி., அரசும் ஆதரிக்கிறது. முதலில், எஸ்.சி., -எஸ்.டி.,க்கு ஆதரவான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., அரசு இறங்கியது. தற்போது, தலித் மக்களுக்கு அளிக்கப்படும் சம உரிமையை பறிக்க முயல்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-பிப்-202021:38:56 IST Report Abuse
Natarajan Ramanathan வேலையில் சேர்ந்தபின்னும் ஒரு எழவும் தெரியாத முட்டாளுக்கு எதுக்கு ஒதுக்கீடு? இந்த வழக்கு போட்டது காங்கிரஸ் ஆட்சி... தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றம்... இதில் பாஜக அரசு என்ன செய்யும் மூடர்களே...
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-202021:12:29 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இடஒதுக்கீட்டை பயன்படுத்த நாம் தான் ஊக்கமளிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன படிக்கிறார்கள் என்ன வேலைக்கு போகிறார்கள் என்பதை பார்க்காமல், ஏதாவது ஒரு பாடத்தில்/துறையில் பள்ளியிலிருந்து ஆர்வத்தை உண்டாக்கி அதற்கு உண்டான இடஒதுக்கீட்டை பயன்படுத்த ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும். குறிப்பிட்ட சிலரே மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தக்கூடாது. இப்பொழுது இடஒதுக்கீட்டை பயன்படுத்துபவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் "பல தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை பற்றி தெரியாமல் இருந்தாலே, இவர்கள் இடஒதுக்கீட்டில் போட்டியில்லாமல் முயற்சி இல்லாமல் இடம் பெறலாம் என்பதே." இது மற்ற தாழ்த்தப்பட்டவர்களை தலைமுறை தலைமுறையாக பாதிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
11-பிப்-202020:48:07 IST Report Abuse
Rafi தி மு கா சமூக நீதிக்காக முழுக்க, முழுக்க இந்துக்கள் அனைவரும் சம நிலையில் இட ஒதுக்கீடு முறையில் பயன் அடைய காலங்காளம்மாக போராடி அதில் ஓரளவு தமிழகத்தில் வெற்றியாக்கியது. இந்துக்களுக்கு துரோகம் இளைத்து ஒரு பிரிவினர்கள் மட்டுமே பயன் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றம் ஏற்க முன்வந்தபோது, அப்போதைய திரு வி பி சிங்க் ஆட்சியை கவிழ்த்து பெரும்பான்மையான இந்துக்களின் நலத்திற்கு துரோகம் இளைத்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X