போலி சான்றிதழ் பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்ய முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழ் பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்ய முடிவு

Added : பிப் 10, 2020
Share

சென்னை : அரசு பணிகளுக்கும், போலீஸ் வேலைக்கும் நடந்த முறைகேடுகள் போல, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி சான்றிதழ் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்துள்ளனர்.

அந்த பேராசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று, அரசு பணியில் சேர, பலர் தில்லுமுல்லு செய்துள்ளனர். விடைத்தாளில் திருத்தம், ஆள்மாறாட்டம் போன்ற, தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர்கள், தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறைகேடு ஆசாமி களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், வலை வீசி பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்விலும், 1,000க்கும் மேற்பட்டவர்கள், போலி சான்றிதழ் கொடுத்து, போலீஸ் வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. அதேபோல், டி.என்.பி.எஸ்.சி.,யில் முறைகேடு செய்த, 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.இதை தொடர்ந்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், போலி சான்றிதழ் கொடுத்து, பலர் உதவி பேராசிரியர் பணிகளில் சேர்ந்துள்ளதை, அண்ணா பல்கலை கண்டுபிடித்துள்ளது;

அவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அனைத்து கல்லுாரிகளும், தங்கள் பேராசிரியர்களின் உண்மையான சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. இந்த விபரங்கள் வந்ததும், போலி சான்றிதழ் அளித்து, பணியில் சேர்ந்த வர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X