ஆத்துார் : சேலம், ஏத்தாப்பூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், விமானம் மூலம் சென்னை சென்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் சுரேந்திரன், 20; வாழப்பாடியில் உள்ள கோழிப் பண்ணையில் மேற்பார்வையாளர். 8ம் தேதி, கள்ளக்குறிச்சியில் இருந்து, ஆத்துார் வழியாக வாழப்பாடி நோக்கி, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார்.மதியம், 12:00 மணியளவில், ஏத்தாப்பூர் அருகே, முன்னால் சென்ற பைக் மீது, இவரது பைக் மோதி, படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததால், பெற்றோர், உறவினர்கள், உடல் உறுப்புகளை தானம் வழங்க முன்வந்தனர்.
சுரேந்திரனின் இதயம், கல்லீரல் உட்பட மொத்தம், ஏழு உறுப்புகள் அகற்றப்பட்டன. கோவை, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு ஒரு சிறுநீரகம், கங்கா மருத்துவமனைக்கு எலும்பு, தோல், சேலம், மணிப்பால் மருத்துவமனைக்கு கல்லீரல், சேலம் அரசு மருத்துவமனைக்கு, ஒரு சிறுநீரகம், கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இதயம், விமானம் மூலம், சென்னை குளோபல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. சுரேந்திரனின் பெற்றோர் ஜெயகுமார் - ராணி கூறுகையில், 'எங்கள் மகனின் உடல் உறுப்புகள், மற்றவர்களை வாழ வைக்க பயன்படுவது ஆறுதல் அளிக்கிறது' என, கண்ணீர் மல்க கூறினர்.