சபரிமலை கோவில் வழக்கு: பிப். 17 முதல் தினசரி விசாரணை

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
Sabarimala, temple, Supreme_Court, சபரிமலை, சுப்ரீம்கோர்ட், தீர்ப்பு, ஐயப்பன்_கோவில், பெண்கள்_அனுமதி

புதுடில்லி: 'கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உட்பட, மதங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்த வழக்குகள், வரும், 17 முதல், தினமும் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில், ஐந்து நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ள, ஏழு கேள்விகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


அனுமதி

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயது பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, செப்., 2018ல் தீர்ப்பு அளித்தது.'அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை, ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 'சபரிமலை விவகாரம் மட்டுமல்லாமல், மற்ற மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். 'இந்த பிரச்னைகள் குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது' என, கடந்தாண்டு, நவம்பரில் கூறியது.

மேலும், ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்தும், ஐந்து நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.'எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு பரிந்துரைக்க முடியுமா' என, ஒன்பது நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது. அதனால், சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை தாமதமடைந்தது.


பிரச்னை


இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான, ஒன்பது நீதிபதிகள் அமர்வு, நேற்று இந்தப் பிரச்னை குறித்து விசாரித்தது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், எம்.எம். சந்தனகவுடர், எஸ்.ஏ. நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவால், சூர்ய காந்த் ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுஉள்ளனர்.

அமர்வு கூறியுள்ளதாவது:சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு, ஐந்து நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு பரிந்துரைக்கும்போது, என்னென்ன கேள்விகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்க, அந்த அமர்வுக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி, இந்த வழக்கில், மத சுதந்திர உரிமை குறித்தும், நம்பிக்கையின் அடிப்படையிலான மத நடைமுறைகள் குறித்தும் விசாரிக்கப்படும். அனைத்து மதங்களில் உள்ள மத சுதந்திரம் குறித்து விவாதிக்கப்படும். மொத்தம், ஏழு கேள்விகள் குறித்து, வரும், 17ல் இருந்து, தினசரி விசாரிக்கப்படும்.


நேரம் ஒதுக்கப்படும்


இந்த வழக்கில் ஆஜராகும் அனைவரும், தாங்கள், எந்த மதத்துக்காக வாதாடப் போகிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். வரும், 17ம் தேதி, மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முதலில் வாதிடுவார். அவருக்கு அடுத்ததாக, மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் வாதிடுவார்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.7 கேள்விகள் என்ன?உச்ச நீதிமன்றத்தின்,


ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ள, ஏழு கேள்விகள்:


அரசியல் சாசனத்தின், 25வது பிரிவின்படி, மத சுதந்திர உரிமம் என்பதன் நோக்கம் மற்றும் வரம்பு என்ன அரசியல் சாசனத்தின், 25வது பிரிவு அளித்துள்ள மத சுதந்திர உரிமை மற்றும் 26வது பிரிவில் குறிப்பிட்டுள்ள மத நம்பிக்கைகள், ஒன்றுக்கொன்று சார்புடையதா

அரசியல் சாசனத்தின், 26வது பிரிவு அளித்துள்ள மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் உரிமையானது, அரசியல் சாசனத்தின், மூன்றாவது பட்டியலுக்கு உட்பட்டதா

அரசியல் சாசனத்தின், 25 மற்றும் 26வது பிரிவுகள் குறிப்பிடும், அறநெறி என்ற வார்த்தைக்கான வரம்பு, விளக்கம் என்ன. அது அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்ற அறநெறியையும் உள்ளடக்கியதா

அரசியல் சாசனத்தின், 25வது பிரிவு குறிப்பிட்டுள்ள, மத சுதந்திர நடைமுறைகள் தொடர்பாக, நீதி விசாரணையின் வரம்பு என்ன

அரசியல் சாசனத்தின், 25 (2) (பி) பிரிவில் குறிப்பிட்டுள்ள, 'ஹிந்துக்களின் ஒரு பகுதி' என்ற வார்த்தைக்கான அர்த்தம், விளக்கம் என்ன

ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது மதப் பிரிவை சாராதவர், அந்த மதப் பிரிவின் நடைமுறைக்கு எதிராக, பொது நலன் வழக்கு தொடர முடியுமா.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
11-பிப்-202007:47:52 IST Report Abuse
blocked user நாட்டில் எவ்வளவோ எரியும் பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போன்ற அக்கப்போர் வழக்குகளை எடுத்து நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிப்பது கண்டனத்துக்கு உரியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X