நான்கு ஆஸ்கர் வென்று கொரியாவின், 'பாரசைட்' படம் சாதனை

Added : பிப் 10, 2020
Advertisement
 நான்கு ஆஸ்கர் வென்று கொரியாவின், 'பாரசைட்' படம் சாதனை

லாஸ் ஏஞ்சலஸ் : உலக சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத, தென்கொரிய படமான, பாரசைட் சிறந்தப் படமாக தேர்வு செய்யப்பட்டது.

அந்தப் படம், நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ஜோக்கர் படத்தில் நடித்த வாகின் பீனிக்ஸ், சிறந்த நடிகர் விருதையும், ஜூடி படத்தில் நடந்த ரேனி ஜெல்வெஜர், சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில், உலக சினிமாவின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும். அகாதெமியின், 92வது விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் போங்க் ஜோனா ஹூ இயக்கியுள்ள, பாரசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றில், ஆங்கிலம் அல்லாத, மற்ற மொழிப் படம் சிறந்தப் படமாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நான்கு விருதுகளை வென்று, இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்தது.சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம் என, மேலும், மூன்று விருதுகளையும் இந்தப் படம் வென்றுள்ளது.ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட், 1947, த ஐரிஷ்மேன் போன்ற படங்கள் போட்டியில் இருந்தன. ஆஸ்கர் விருதுக்கு முன்பாக, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும், பாரசைட் வென்றுள்ளது.

சிறந்த நடிகர்ஜோக்கர் படத்தில் நடித்துள்ள, ஹாலிவுட் நடிகர் வாகின் பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். நான்காவது முறையாக, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அவர், இந்தாண்டு, பாப்டா, கோல்டன் குளோப், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் ஆகியவற்றின் விருதுகளையும் வென்றார். முதல் முறையாக, ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.பிரபல நடிகர்கள் லியனார்டோ டிகார்பியோ, ஆடம் டிரைவர், அன்டோனியா பென்டரஸ், ஜொனாத்தன் பிரைஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், முதலில் இருந்தே, இந்தாண்டுக்கான விருதை, பீனிக்ஸ் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்காவில் வெளியாகும் காமிக்ஸ் புத்தக கதாபாத்திரமான, ஜோக்கர் வேடத்தில் நடித்த, ஹீத் லெட்ஜர், 2008ல், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் வென்றார். தற்போது, பீனிக்ஸ், சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.சிறந்த நடிகைமறைந்த அமெரிக்க பாடகி, நடிகை ஜூடி கார்லண்ட் வேடத்தில், ஜூடி படத்தில் நடித்துள்ள, ரேனி ஜெல்வெஜர், சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இது, ஜெல்வெஜர் பெறும் இரண்டாவது விருதாகும். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான, கோல்டன் குளோப், பாப்டா, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளையும் ஜெல்வெஜர் வென்றுள்ளார்.சிறந்த துணை நடிகர்கடந்த, 2014ல், சிறந்த படத்துக்கான ஆஸ்கரை, தயாரிப்பாளராக வென்றுள்ள, பிரபல ஹாலிவுட் நடிகர், பிராட் பிட், முதல் முறையாக, நடிப்புக்காக விருது வென்றுள்ளார். ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் படத்துக்காக, அவருக்கு, சிறந்த துணை நடிகர் விருது கிடைத்து உள்ளது.கடந்த, 20 ஆண்டுகளாக நடித்து வரும் பிராட் பிட், இதுவரை ஏழு முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கிய பிட், பிரபல நடிகை ஏஞ்சலீனா ஜோலியை மணந்தார்; பின்னர் விவாகரத்து செய்தார்.மேரேஜ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்த, லோரா டெர்ன், சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். ஐந்து முறை கோல்டன் குளோப் விருது, பாப்டா, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது என, பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள டெர்ன், முதல் முறையாக ஆஸ்கர் வென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X