30 ஆயிரம் மூட்டைகளால் மார்க்கெட் கமிட்டி திணறியது! அரகண்டநல்லூரில் விவசாயிகள் சாலை மறியல்| Dinamalar

தமிழ்நாடு

30 ஆயிரம் மூட்டைகளால் மார்க்கெட் கமிட்டி திணறியது! அரகண்டநல்லூரில் விவசாயிகள் சாலை மறியல்

Added : பிப் 11, 2020
Share
30 ஆயிரம் மூட்டைகளால் மார்க்கெட் கமிட்டி திணறியது! அரகண்டநல்லூரில் விவசாயிகள் சாலை மறியல்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் குவிந்ததால் நிர்வாக வசதிக்காக 2 நாட்கள் விவசாயிகள் விளை பொருட்களை கமிட்டிக்கு கொண்டு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நேற்று உளுந்து விலை மிகவும் குறைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரம் மூட்டை நெல், 8000 மூட்டை உளுந்து, 2000 மூட்டை மக்காச்சோளம் உள்ளிட்ட 30 ஆயிரம் மூட்டை அளவிற்கு திருப்பாலப்பந்தல், ஜி.அரியூர், முகையூர்,கண்டாச்சிபுரம் உட்பட 200 கிராமங்களில் இருந்தும் விளைபொருட்கள் குவிந்தன.நிர்வாக வசதிக்காக 5000 மூட்டை நெல், 2500 மூட்டை உளுந்து மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிறு வகைப் பொருட்கள் மட்டுமே ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

உளுந்து குறைந்த விலையாக 5,800 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6,300 ரூபாய் வரை விலை போனது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது ஒரு மூட்டைக்கு 1,000 ரூபாய் வரை குறைந்தது.இந்த அதிரடி விலை குறைப்பால் அதிருப்தியடைந்த விவசாயிகள் நேற்று மாலை 3:00 மணியளவில் திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் மார்க்கெட் கமிட்டி செயலர் ஆறுமுகராஜா, கண்காணிப்பாளர்கள் செல்வம், செந்தில் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விலையில் திருப்தியடையாத விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை திரும்பப்பெற்று நாளை (இன்று) ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார். இதனையடுத்து மாலை 6:00 மணிக்கு மணிக்கு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இதன் காரணமாக திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

ஒரே நாளில் 30 ஆயிரம் மூட்டை கமிட்டி வளாகத்தில் குவிந்தாலும், ஏற்கனவே வியாபாரிகள் கொள்முதல் செய்த பொருட்களை வெளியே எடுக்காமல் இருந்ததுடன் நேற்று மறியல் நடந்ததால் எடைபோடுவது, சாக்கு மாற்றுவது போன்ற நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது.இதன் காரணமாக இன்றும், நாளையும் ஏற்கனவே கொண்டு வந்த விளைபொருட்களை ஏலத்தில் வைக்க வேண்டும் என்பதால் விவசாயிகள் யாரும் புதியதாக விளைபொருட்களை கமிட்டி வளாகத்திற்குள் நேற்று இரவு முதல், 12ம் தேதி மாலை வரை கொண்டுவர வேண்டாம். 12ம் தேதி இரவு 8:00 மணிக்கு மேல் மட்டுமே விவசாயிகள் விளைபொருட்கள் கமிட்டிகள் அனுமதிக்கப்படும் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர்கள் அறிவித்தனர்.

சீரான மழைப்பொழிவு காரணமாக நெல் மற்றும் உளுந்து விளைச்சல் அபரிமிதமாக இருப்பதே மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து அதிகரிக்க காரணம். மேலும் சம்பா நெல் அறுவடை தீவிரமடைந்து இருப்பதன் காரணமாக மாவட்டத்திலேயே அதிக பட்ச விளைபொருட்கள் வரத்துவங்கி இருப்பது விவசாயிகள், வியாபாரிகள், கமிட்டி நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே விளைபொருட்களின் விலை குறையவும் காரணமாக அமைந்துள்ளது. விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பதன் மூலம் பொருட்களின் விலை குறைப்பை தடுப்பதுடன் சிரமத்தையும் தவிர்க்கலாம் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை....

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் அதிகளவில் விளை பொருட்கள் குவிந்தது மற்றும் உளுந்து விலை குறைந்ததால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டது குறித்து அறிந்த விழுப்புரம் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், கண்டாச்சிபுரம் தாசில்தார் ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் வந்து கமிட்டி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கண்காணிப்பாளர்கள் செல்வம், செந்தில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் பங்கேற்றனர். விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்தும், திடீர் விலை குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X