பொது செய்தி

தமிழ்நாடு

.உலகம் சுற்றிய தமிழர் சோமல: இன்று நூற்றாண்டு விழா துவக்கம்

Added : பிப் 11, 2020
Advertisement
 .உலகம் சுற்றிய தமிழர் சோமல: இன்று நூற்றாண்டு விழா துவக்கம்

'சோமலெ' என்றால் 'தெரியலெ' என்று தமிழ்நாட்டில் யாரும் சொல்லமாட்டார்கள்” என்று அறிஞர்களால் பாராட்டப்பெற்ற பெருமைக்கு உரியவர் 'சோமலெ' எனப்படும் சோம.இலக்குமணச் செட்டியார்.

தம் வாழ்நாளெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காகப் பற்பல துறைகளிலும் ஒரு தேனீயைப் போல் தொண்டாற்றியவர். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 1921 பிப்ரவரி 11 ல் பிறந்தவர் சோமலெ. அவருடைய நுாற்றாண்டு விழா இன்று துவங்குகிறது.

தந்தை சோமசுந்தரம் செட்டியார்; தாயார் நாச்சம்மை. சோமலெ சென்னை மாநிலக் கல்லுாரியில் பட்டப் படிப்புப் பயின்றவர்; பத்திரிகைத் துறையில் நிறை சான்றிதழ் பெற்றவர்; கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், இதழியல், சுற்றுலா, வாழ்க்கை வரலாறு, பல்கலை வரலாறு, கோயில் வரலாறு, மொழி வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளிலும் நுால்கள் இயற்றி முத்திரையைப் பதித்தவர் சோமலெ. பதின்மூன்று வயது தொடங்கி எழுதப் புகுந்த அவர், தம் வாழ்நாள் இறுதிவரை ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தார்; தமிழில் அறுபதுக்கும் மேற்பட்ட நுால்களும், ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நுால்களும் இயற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்.

உலகம் சுற்றியவர்'ஓர் எழுத்தாளர் மேற்கொள்ளும் பயணம், சமுதாயம் முழுவதுக்குமே பயனளிப்பதாக அமைந்து விடுகிறது' என்பர். இவ்வகையில் 'சோமலெ' உலகம் சுற்றி வந்து படைத்த நுால்கள் எல்லாம் பயண இலக்கியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்தன. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் திருமூலர் கூற்றுப்படி, அவர் தாம் கண்ட வெளிநாட்டுக் காட்சிகளை எல்லாம் மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டினார்; தாம் கண்டு அனுபவித்த அமெரிக்காவை 'அமெரிக்காவைப் பார்' என மற்றவருக்கும் காட்டினார்; 'ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்' கழிக்கவும் களிக்கவும் செய்தார். உலக நாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்;

'இமயம் முதல் குமரி வரை' வாழும் இந்திய நாட்டு மக்களையும் அவர்களின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்; வடமாநிலங்களில் வாழும் தமிழர் நிலையினை ஓர் ஆய்வறிக்கையாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கு அளித்தார். 'தமிழர் எங்கு இருந்தாலும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; தம் பண்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும்; பிற நாட்டினருக்கும் தம் பெருமையை உணர்த்த வேண்டும்' என்னும் நோக்கத்தில் அந்நுாலை எழுதினார் சோமலெ.

கவிமணியின் பாராட்டு“எல்லா நாடும் தன்நாடாய் எங்கும் சுற்றி ஆராய்ந்து நல்லார் பலரின் கருத்தையெல்லாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன்”என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, சோமலெயைப் பாராட்டியுள்ளார்.'வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைச் செய்து பார்' என்ற பழமொழி, அந்தச் செயல்களிலே உள்ள தொல்லைகளைக் குறிப்பிடுவதற்காகத்தான் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றோடு 'உலகத்தைச் சுற்றிப் பார்' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பயணம் செய்வதில் உள்ள சிக்கலை எடுத்துக்-காட்டுகிறார் சோமலெ. “சோமலெயின் பயண நுால்களைப் படித்த பின்னர் தான் எனக்கு அமெரிக்கா போக வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது” என்று அமெரிக்கா சென்று, அங்கே பல்லாண்டுகள் திறம்படப் பணிபுரிந்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி குறிப்பிட்டிருப்பது ஒன்றே, சோமலெயின் பயண இலக்கியத்திறனை நமக்கு உணர்த்திவிடும்.

நீங்களும் துாதுவர் ஆகலாம்பயணக் கட்டுரைகளும் நுால்களும் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவாக இருந்த காலத்தில் சோமலெயின் நுால்கள் பயண இலக்கியத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தன. 'நீங்களும் துாதுவர் ஆகலாம்' என்று அனைவரையும் படிக்கத் துாண்டும் வகையில் தலைப்பிட்டுத் துாதுவர்களின் தகுதி, நியமனம், கடமைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்கள் வேலை செய்ய வேண்டிய முறைமை, அவர்களுக்கு நேரிடும் இன்னல்கள் என்று தமிழில் ஒரு புதுத் துறையையே படைத்துக் காட்டிய சோமலெ, தம் சுற்றுப்பயணங்களில் ஒரு நல்லெண்ணத் துாதுவராகவும் விளங்கினார்.சோமலெ 1958ல் எழுத்துத் துறையில் முழுமையாக ஈடுபடலானார்; தமிழ்நாட்டிலுள்ள

ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் ஒரு நுால் எழுத முடிவு செய்தார். இவ்வரிசையில் சேலம், கோயம்புத்துார், மதுரை உட்பட பத்து மாவட்டங்கள் பற்றிய நுால்கள் வெளிவந்துள்ளன. இதற்கு சோமலெ எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலப்பல.ஓர் எடுத்துக்காட்டு: “எங்கள் ஊர் நெற்குப்பை. 'குப்பை' என்ற சொல் சிலப்பதிகார காலத்திலும், அதற்கு முன்பும் குவியலையே குறித்தது; பயன்படாத குப்பையை அல்ல. பொன்னின் குப்பை, மணியின் குப்பை, அகிலின் குப்பை, சந்தனத்தின் குப்பை என்ற தொடர்களைக் காணலாம்.
அப்படியானால் எங்கள் ஊர் மிகப் பழமையான ஊர் என்றாகிறது. அதாவது 'குப்பை' என்ற சொல் குவியலைக் குறித்த காலத்திலேயே குவியல் குவியலாக நெல் விளையும் ஊர் 'நெற்குப்பை' என அழைக்கப்பட்டது” என்று தமிழண்ணல் கூறியதை எடுத்துக்காட்டுகிறார். வாழ்க்கை வரலாற்று நுால்சோமலெ எழுதிய வாழ்க்கை வரலாற்று நுால்கள் மூன்று. அவை 1. பண்டிதமணி 2. விவசாய முதலமைச்சர் (ஓமந்துாரார் வாழ்க்கை வரலாறு) 3. சர்தார் வேதரத்தினம்பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் தமிழிலும் வடமொழியிலும் மிகுந்த புலமை பெற்றவர்; உழைப்பால் வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர்; 'விடாமுயற்சியும், மனஉறுதியும் இருந்தால் உடல் ஊனம் ஒரு தடை அல்ல,

வாழ்க்கையில் சாதிக்க முடியும்' என்று மெய்ப்பித்துக் காட்டியவர். அவருடைய புலமைக்குத் தலைவணங்கி அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார் சோமலெ. 'எல்லோரும் வள்ளலைப் பற்றி வரலாறு எழுதியபோது, இவர் மட்டும் புலவரைப் பற்றி எழுதுகிறாரே' என்று சோமலெயைக் கேலி செய்தவர்களும் உண்டு.விவசாய முதலமைச்சராக விளங்கிய ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் காந்தியடிகளின் அடியொற்றி நடந்த தலைவர்களுள் ஒருவர்.
'அவர் அஞ்சா நெஞ்சர்; ஒழுக்க சீலர்; கொள்கைப் பிடிப்பு உள்ளவர்; சத்தியம் தவறாதவர்; எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்; ஆற்றல் மிக்கவர். இப்பேர்ப்பட்ட உத்தமர்களைப் பற்றி அடிக்கடி சொல்லி வந்தால்தான், இந்த நாட்டில் மேலும் உத்தமர்கள் தோன்றுவார்கள். அதனால் தான் நம் காலத்தில் வாழ்ந்த இந்தப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளிப்படச் செய்யவேண்டும்' என்னும் எண்ணம் கொண்ட தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் துாண்டுதலால், சோமலெ எழுதியது தான் 'விவசாய முதலமைச்சர்'.

சோமலெ எழுதிய இன்னொரு வாழ்க்கை வரலாற்று நுால் 'சர்தார் வேதரத்தினம்' ஆகும். மூதறிஞர் ராஜாஜியுடன் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் முனைப்புடன் பங்கு கொண்டவர் அவர். நாடு இன்று அறிந்து கொள்ள வேண்டிய நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியே சோமலெ எழுதியிருக்கிறார் என்பதை அறியலாம்.

திறனாய்வாளர்சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் திகழ்ந்தார். 'வளரும் தமிழ்' என்னும் நுாலில் 19ம் நுாற்றாண்டு உரைநடைக்கும், 20ம் நுாற்றாண்டு உரைநடைக்கும் வேறுபாடு இருப்பதை விளக்கி இருப்பார். நுாலின் இடையிடையே அவருக்கே உரிய கேலியும் கிண்டலும் தலைகாட்டுகின்றன.விழா மலர்களை நேர்த்தியாக உருவாக்குவதில் சோமலெவுக்கு ஈடுஇணை அவரே. இருபதுக்கும் மேற்பட்ட மலர்களை உருவாக்கியுள்ளார் அவர். காசி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், பழநி ஆகிய திருக்கோயில் மலர்களும், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க மலரும் மிகச் சிறந்த ஆராய்ச்சி வெளியீடுகளாக அமைந்து இன்றளவும் சோமலெயின் கைவண்ணத்தைப் பறைசாற்றி நிற்கின்றன எனலாம்.அன்பும், பண்பும், அருமையும், எளிமையும், ஆர்வமும், இன்சொல்லும், துடிப்பும், கூர்மதியும் கொண்ட சோமலெயின் தமிழ்ப்பணி தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
பேராசிரியர் நிர்மலா மோகன், எழுத்தாளர், மதுரை, 94436 75931

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X