இந்தியா

எதிர்கட்சி தலைவராக கடமையை செய்யாதவர்! ரங்கசாமிக்கு நமச்சிவாயம் பதிலடி

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : 'எதிர்கட்சித் தலைவராக தனது கடமையை செய்யாத ரங்கசாமி, காங்., அரசுக்கு நிர்வாகத் திறமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது' என, மாநில காங்., தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:என்.ஆர். காங்., கட்சி ஆண்டு விழாவில், அக்கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி பேசும்போது, காங்., அரசையும், முதல்வரையும் குறை கூறியுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார். அதை, புதுச்சேரி காங்., வன்மையாக கண்டிக்கிறது.தொடர்ந்து ஆட்சியில் இருந்த ரங்கசாமி, நிர்வாகத்தை சரியாக நடத்தாததுதான், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணமாகும். அதை எல்லாம் மறந்துவிட்டு, மக்களுக்கான திட்டங்களை காங்., அரசு நிறைவேற்றாததுபோல ரங்கசாமி பேசி உள்ளது வேடிக்கையாக உள்ளது.

மத்திய அரசு போதுமான நிதியை தராவிட்டாலும், நிதி கமிஷனில் புதுச்சேரி மாநிலத்தை சேர்க்காமல் இருந்தாலும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்கான இழப்பீட்டை காலத்துடன் தராவிட்டாலும், அரசு நிர்வாகத்தில் கவர்னர் தினமும் தலையிட்டு இடையூறு ஏற்படுத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையிலும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தடையின்றி நிறைவேற்றி வருகிறது.சிறந்த நிர்வாகத்தை அளித்து, பல துறைகளில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நிதி மேலாண்மையை அரசு கடைபிடித்துள்ளது என நிடி ஆயோக் அமைப்பு பாராட்டி உள்ளது.

லோக்சபா தேர்தலிலும், நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்., வெற்றி பெற்றது. தட்டாஞ்சாவடி தொகுதியில் கூட்டணி கட்சியான தி.மு.க., வெற்றி பெற மக்கள் ஆதரவு அளித்தனர். அனைத்து தேர்தல்களிலும் காங்., - தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்தது, அரசு மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது. காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் அமையும்.

இந்நிலையில், நிர்வாக திறமையில்லாத அரசு என ரங்கசாமி பேசியுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. எதிர்கட்சி தலைவராக தனது கடமையை செய்யாமல், மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மத்திய அரசும், கவர்னரும் கருத்து கூறியபோது, ஒப்புக்காககூட கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மவுனம் சாதித்தவர் ரங்கசாமி. காங்., அரசுக்கு நிர்வாகத் திறமையில்லை என்று அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.மக்கள் அவருக்கு தந்த பொறுப்பை உணர்ந்து, எதிர்கட்சி தலைவராக ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். காங்., அரசு மீது பழி சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் மீதான விமர்சனம் நியாயமாக இருந்தால் ஏற்போம்.சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேசி இருக்கலாம்; விவாதத்தில் கலந்து கொண்டு ஆளுங்கட்சி செயல்பாடுகளை எதிர்கட்சி தலைவர் சுட்டிக் காட்டி இருக்கலாம். குறைகளை சுட்டிக் காட்டினால் சரி செய்து கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால், 4 ஆண்டுகள் கழித்து, காங்., அரசை விமர்சனம் செய்துள்ளதைதான் புதுச்சேரி காங்., வன்மையாக கண்டிக்கிறது.

காங்., ஆட்சியை காங்., கட்சியினரே விமர்சனம் செய்வதாகவும் எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளார். என்.ஆர். காங்., ஆட்சியில் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசு அலுவலகத்தை பூட்டி அவரது கட்சி எம்.எல்.ஏ., நேரு போராட்டம் நடத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார். அரசு கொறடா அனந்தராமன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X