மதுரை :'மதுரை பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுகளில் 'ஸ்மார்ட் சிட்டி' பணி எப்போது நிறைவடையும்,' என கேள்வி எழுப்பி, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் ஒருங்கிணைந்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் தாக்கல் செய்த மனு:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஸ்டாண்டுகளில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இங்கு கடைகள் நடத்திய 446 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. எங்கள் தரப்பில், 'மாற்று கடைகள் ஒதுக்க வேண்டும். அதுவரை கடைகளை காலி செய்ய தடை விதிக்க வேண்டும்,'என இந்நீதிமன்றத்தில் மனு செய்தோம்.
2018 டிசம்பரில் நீதிபதிகள் அமர்வு, 'பஸ் ஸ்டாண்டுகளின் கட்டுமான பணியை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். அதுவரை 446 கடைக்காரர்களுக்கும் தற்காலிக மாற்றுக் கடைகளை மாநகராட்சி அமைத்து கொடுக்க வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' பணி முடிந்ததும், பஸ் ஸ்டாண்டுகளில் கடைகள் நடத்தியவர்களுக்கு மறு ஏலமின்றி முன்னுரிமை அளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ் நகரில் எங்கள் உறுப்பினர்களில் சிலர் தற்காலிக கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதித்தது.ராதாகிருஷ்ணன் என்பவர், 'எல்லீஸ்நகர் பஸ் ஸ்டாண்ட் முன் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதிகள் அமர்வு, 'கடைகளை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,' என 2019ல் உத்தரவிட்டது. அதிக முதலீடு செய்துள்ள தற்காலிக கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும். இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜாராம் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு: இரு பஸ் ஸ்டாண்டுகளிலும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணி எப்போது நிறைவடையும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், மாநகராட்சி கமிஷனர் பிப்.,17ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE