சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 200 சவரன் கொள்ளை: பீர்க்கன்காரணை போலீஸ் , 'கொர்ர்'

Added : பிப் 11, 2020
Advertisement

சென்னை புறநகரில் உள்ள பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லையில், ஒரே மாதத்தில், 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை, பரங்கிமலை காவல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பீர்க்கன்காரணை காவல் நிலையம். இதன் கட்டுப்பாட்டில், பீர்க்கன்காரணை, பழைய பெருங்களத்துார் பேரூராட்சிகள், முடிச்சூர், நெடுங்குன்றம் ஊராட்சிகள், அகரம்தென் ஊராட்சியின் ஒரு பகுதி, தாம்பரம் நகராட்சியின் ஒரு பகுதி ஆகியவை வருகின்றன.மொத்தம், 22 சதுர கி.மீ., பரப்பளவுள்ள இக்காவல் நிலைய எல்லைக்குள், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், இந்த காவல் நிலைய எல்லைக்குள் அதிகம் உள்ளன. இக்காவல் நிலைய எல்லைக்குள், கடந்த ஒரே மாதத்தில் மட்டும், எட்டு இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 200 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளன.
குறிப்பாக, ஜன., 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, தொடர்ந்து ஐந்து நாட்கள், இரவு தோறும், அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து, நகை, பணம் கொள்ளை அடிக்கபட்டது.சீனிவாசா நகர் உட்பட பல இடங்களில், 11 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த தொடர் திருட்டு சம்பவங்களால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, கொள்ளையர்களை பிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'‛பலே' திருடன்!
கொள்ளை நடந்த வீடுகளில், ஒரு வீட்டில் கிடைத்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளில், திருடனின் உருவம் பதிவாகி இருந்தது.அதை பார்த்தபோது, அவர், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும், திருட்டில் ஈடுபட்டவர் என்றும், சாலவாக்கத்தைச் சேர்ந்த மன்னார் என்றும் தெரியவந்தது. அவர் மீது, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல காவல் நிலையங்களில், திருட்டு வழக்குகள் உள்ளன. அவ்வப்போது, போலீசாரால் கைது செய்யப்படும் அவர், சமீபத்தில் தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க, ஒரு மாதத்திற்கும் மேல், பீர்க்கன்காரணை போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று வரை, மன்னார் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் வீட்டில் எவ்வளவு?
ஜன., 4ல் புது பெருங்களத்துார், என்.ஜி.ஓ., காலனி, முதல் தெருவைச் சேர்ந்த மென்பொறியாளர் கார்த்திகேயன், 30, வீட்டில், 53 சவரன் நகைகள் கொள்ளை.
ஜன., 6 முதல் 10 வரை, அடுத்தடுத்து ஐந்து நாட்களில், பழைய பெருங்களத்துார் மற்றும் அத, சுற்றியுள்ள பகுதிகளில், இரவு நேரங்களில், வீடுகளின் பூட்டை உடைத்து, 96 சவரன் நகைகள் கொள்ளை.
ஜன., 20ம் தேதி, சீனிவாசா நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் வீட்டில், 24 சவரன் நகைகள் கொள்ளை.
ஜன., 28ம் தேதி, நெடுங்குன்றம், தேவராஜ் நகரைச் சேர்ந்த துரைமுருகன், 35, என்பவர் வீட்டில், 27 சவரன் நகைகள் கொள்ளை.
- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X