சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறித்தோருக்கு, 'காப்பு!'

Added : பிப் 11, 2020
Advertisement

புளியந்தோப்பு: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் சேட்டு, 42; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, 8:00 மணி அளவில், பட்டாளம் மார்க்கெட் அருகே சென்றார். அப்போது, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த அவினாஷ், 28, பெரியார் நகரைச் சேர்ந்த சிலம்பரசன், 21, ஆகியோர், சேட்டுவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாயை பறித்தனர். விசாரித்த புளியந்தோப்பு போலீசார், நேற்று மாலை, அவர்களை கைது செய்தனர்.
ஈரான் கைதியிடம் மொபைல் பறிமுதல்
புழல்: ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது ஜிபானி, 35. இவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, 2018ம் ஆண்டு முதல், புழல் சிறையில், தண்டனை கைதியாக உள்ளார். நேற்று காலை, கழிப்பறையில் இருந்து, மொபைல் போன் பயன்படுத்தியபோது, சிறைக்காவலர்களிடம் சிக்கினார். அவரிடம் இருந்து போன், 'ப்ளூடூத்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாலிபருக்கு கும்மாங்குத்து
பீர்க்கன்காரணை: பீர்க்கன்காரணை, சதானந்த புரத்தைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், பால் வாங்க வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று திரும்பினார். அவரை, வழிமறித்த, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர், பன்னீர்செல்வம், 35, என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பன்னீர்செல்வத்தை நையப்புடைத்து, பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படைத்தனர். முதலில் வழக்கு பதிய, போலீசார் மறுத்தனர். பின், நேற்று காலை, இளம்பெண் துணிந்து புகார் அளித்ததால், பன்னீர்செல்வத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
19 சவரன் நகை, 'அபேஸ்'
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; மளிகைக்கடை உரிமையாளர். இவரது மனைவி சுமதி, வீட்டில் உறங்கி கொண்டிருந்ததால், நேற்று முன்தினம் காலை, ராஜேந்திரன் கதவை பூட்டாமல், நடை பயிற்சிக்கு சென்றார். மதியம் எதேச்சையாக சுமதி பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த, 19 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் மாயமானது தெரியவந்தது. ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மோசடியில் ஈடுபட்டவருக்கு வலை
அண்ணாசாலை: துாத்துக்குடியைச் சேர்ந்தவர் சேர்மராஜ், 21. இவர், சில மாதங்களுக்கு முன், அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விசா பெறுவதற்காக, 70 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருந்தார். பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர், முகமது திடீரென அலுவலகத்தை காலி செய்து தலைமறைவாகிவிட்டார். சேர்மராஜ் அளித்த புகாரின்படி, அண்ணாசாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்
கே.கே.நகர்: கே.கே.நகர் - அண்ணாசதுக்கம் செல்லும் வழித்தடம் எண்: 12ஜி பஸ்சை, நேற்று காலை மனோகரன், 50, என்பவர் ஓட்டிச் சென்றார். கே.கே.நகர், காமராஜர் சாலையில் சென்றபோது, படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களை, மேலே ஏறும்படி கூறியுள்ளார். இதில் அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஓட்டுனரை சரமாரியாக தாக்கி தப்பினர். இதில், காயமடைந்த மனோகரன், கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், சக பணிமனை ஊழியர்களுடன் இணைந்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.கே.நகர் போலீசார், ஊழியர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பள்ளி மாணவி மாயம்
திருவல்லிக்கேணி: சேப்பாக்கம், பெல்ஸ் சாலையைச் சேர்ந்த, 12 வயது சிறுமி, நேற்று காலை பள்ளிக்கு சென்று, பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.சில்மிஷ ஆசாமியிடம் விசாரணைவடபழநி: வேளச்சேரியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், நேற்று வடபழநியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். அப்போது, 55 வயது மதிக்கத்தக்க நபர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்த நபரை பிடித்த மாணவி, வடபழநி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர், வடபழநியைச் சேர்ந்த லட்சுமணன், 55, என்பதும், பிரபல தனியார் ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X