பொது செய்தி

தமிழ்நாடு

பரிதவிப்பு! திருத்தணியில் வசதிகள் இன்றி இருளர்கள்...குடிநீருக்காக 1 கி.மீ., நடக்கும் அவலம்....ஒன்றிய நிர்வாகம், வருவாய் துறை மெத்தனம்

Added : பிப் 11, 2020
Advertisement
 பரிதவிப்பு!  திருத்தணியில் வசதிகள் இன்றி இருளர்கள்...குடிநீருக்காக 1 கி.மீ., நடக்கும் அவலம்....ஒன்றிய நிர்வாகம், வருவாய் துறை மெத்தனம்

திருத்தணி:வீரகநல்லுார் ஊராட்சியில் வசிக்கும், 65 இருளர் குடும்பத்தினர், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக, 1 கி.மீ., நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கான வசதிகளை நிறைவேற்றாமல், இரு ஊராட்சிகள் மெத்தனம் காட்டுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சி, எல்.என்.கண்டிகை குளக்கரையில், 100 இருளர் குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கு மேலாக, குடிசை மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.நிலம் ஒதுக்கீடுஇந்நிலையில், நீர்நிலைப் பகுதிகளில், வீடுகள் கட்டி வசிப்போருக்கு, வருவாய் துறையினர், மாற்று இடம் வழங்கி, அங்கு, அடிப்படை வசதி செய்து தருகின்றனர்.அந்த வகையில், எல்.என்.கண்டிகை குளக்கரையில் இருந்த, 65 இருளர் குடும்பத்தினருக்கு, வீரகநல்லுார் ஊராட்சி, பகத்சிங் நகரில், வருவாய் துறைக்கு சொந்தமான, பாறை புறம்போக்கு, 4 ஏக்கர் நிலத்தில், வீடு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, கண்டிகை இருளர்கள், பகத்சிங் நகரில், குடிசை அமைத்து, ஆறு மாதங்களாக வசிக்கின்றனர். இதில், ஒன்பது பேர், அரசு உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டி வருகின்றனர். கல்குவாரிஆனால், குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதாரம், அங்கன்வாடி போன்ற அடிப்படை வசதிகளை, ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம், இதுவரை செய்து தரவில்லை.குறிப்பாக, குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், தினமும், 1 கி.மீ., நடந்து சென்று, கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நீர், வீட்டு உபயோகத்திற்கானது. சமையலுக்காக, அரை கி.மீ., சென்று, வயலில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து, பகத்சிங் நகரில் வசிக்கும் இருளர்கள் கூறியதாவது:வீடு கட்ட இடம் ஒதுக்கிய திருத்தணி வருவாய் துறையினர், மின்சாரம், குடிநீர், குழந்தைகள் படிக்க அங்கன்வாடி மையம், சாலை போன்ற, எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை.போதிய வசதி கேட்டு, ஒன்றியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.முதற்கட்டமாக, குடிநீர், மின்சாரம் மற்றும் பட்டா வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவள்ளூர் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், ஒருமுறை பகத்சிங் நகர் இருளர் காலனிக்கு வந்து பார்வையிட்டால், எங்களின் பரிதவிப்பு புரியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
.வசதிகள் ஏற்படுத்தப்படும்
பகத்சிங் நகரில் குடியேறியுள்ள, 65 இருளர் குடும்பத்தினருக்கு, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன், ஒன்றிய நிர்வாகம், வருவாய் துறை மற்றும் மின்வாரிய துறை ஆகியவற்றின் மூலம், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். முன்னதாக, ஓரிரு நாளில் முக்கிய அதிகாரிகளுடன் இருளர் வசிப்பிடம் சென்று, அவர்களின் பிரச்னை கேட்கப்படும்.-ஆர்.கார்த்திகேயன்பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர்,திருத்தணி.
ஊராட்சிகள் இடையே போட்டி
பகத்சிங் நகர், வீரகநல்லுார் ஊராட்சிக்குட்பட்டது. ஆனால், இங்கு குடியேறிய இருளர் குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவை, தாடூர் ஊராட்சியில் உள்ளது.இதனால், அந்த ஊராட்சி தான், இருளர்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, வீரகநல்லுார் ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. இரு ஊராட்சிகள் இடையே போட்டி நிலவி வருவதால், இருளர்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X