மண்ணும், மானும் மாயம்... வெளுக்குது அதிகாரிக சாயம்!

Added : பிப் 11, 2020 | |
Advertisement
ப்பூச தேரோட்டம் பார்க்க, சித்ராவும், மித்ராவும், வெயிலும், காற்றும் மிதமாக இருக்க, சூழலை அனுபவித்த வண்ணம், சிவன்மலைக்கு வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.''ஆர்வமா வேலை பார்த்தவர்க்கு இந்த சோதனையா?ன்னு, ஆபீசர்கள் வருத்தப்பட்டாங்களாம்?''என ஆரம்பித்தாள் சித்ரா.''சோதனை இல்லாம, யார்தான் சாதிக்க முடியுங்க்கா,''''நீ... தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டீயா, நானே
 மண்ணும், மானும் மாயம்... வெளுக்குது அதிகாரிக சாயம்!

ப்பூச தேரோட்டம் பார்க்க, சித்ராவும், மித்ராவும், வெயிலும், காற்றும் மிதமாக இருக்க, சூழலை அனுபவித்த வண்ணம், சிவன்மலைக்கு வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.''ஆர்வமா வேலை பார்த்தவர்க்கு இந்த சோதனையா?ன்னு, ஆபீசர்கள் வருத்தப்பட்டாங்களாம்?''என ஆரம்பித்தாள் சித்ரா.''சோதனை இல்லாம, யார்தான் சாதிக்க முடியுங்க்கா,''''நீ... தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டீயா, நானே சொல்லிடறேன். அலகுமலை ஜல்லிக்கட்டுக்கு, பல அரசுத்துறைகளை இணைச்சு, முழு ஏற்பாடுகளையும் ஒரு அதிகாரி செஞ்சாரு. ஆனா, அவரை போலீஸ் உள்ளே விடாம நிறுத்திட்டாங் களாம்,''''அப்புறம் என்னாச்சுங்க்கா?''''அந்தவழியே வந்த, கூடுதல் எஸ்.பி.,தான் இவரை பார்த்துட்டு கூட்டிட்டு போனாராம்,''''அடடே... அவருக்கே இந்த நிலையா? அதேமாதிரி, ஜல்லிக்கட்டுக்கு அப்புறம் அலகுமலை, அலங்கோல மலை ஆயிடுச்சாம்,''''உண்மைதான்டி. கடைசியா, கிராம சுகாதார பணியாளர்கள வச்சுத்தான் சுத்தம் செஞ்சிருக்காங்க. இந்த செலவு முழுவதும் பொங்கலுார் யூனியன் நிர்வாகம்தான் பார்த்துக்கிட்டாங்களாம். அதனால, இனிமேல் ஜல்லிக்கட்டு நடத்த, சம்பந்தப்பட்ட ஊராட்சியிலும், அனுமதி வாங்கணும். ஒரு லட்சம் ரூபா சிறப்பு நிதியும் ஒதுக்கணும்னு, புதிய கோரிக்கையை கையில எடுத்திருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.''கரெக்ட்தாங்க்கா,'' என்ற மித்ரா, அவ்வழியே சுவற்றில் ஒட்டியிருந்த ஒரு போஸ்டரை பார்த்து சிரித்தாள்.''என்னடி, தன்னப்போல சிரிக்கறே?''''வெல்டிங் ஒர்க் ஷாப் வேலைக்கு, ஆட்கள் தேவைன்னு விளம்பரம் செஞ்சு, 'சரக்கு உடன் பிரியாணி' இலவசம்னு, இருக்குதுங்க்கா,''''ஓ... அதுவா? அதுதான் பிரச்னையாயிடுச்சே?''''என்ன பிரச்னைங்க்கா?''''போஸ்டரை போட்டோ எடுத்து, 'சோஷியல் மீடியா'வில் வைரலாயிடுச்சு. உடனே, திருப்பூர் ஒர்க் ஷாப் உரிமையாளர் சங்கத்துல பேசி, இப்படியெல்லாம், விளம்பரம் செய்யக்கூடாதுனு, எல்லா மெம்பர்களுக்கும் எச்சரிக்கை பண்ணிட்டாங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.அப்போது, மண் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வேகமாக சென்றது. அதைப்பார்த்த மித்ரா, ''மண் திருட்டுக்கு உடந்தையா இருந்த அதிகாரியை, 'வெயிட்டிங் லிஸ்டி'ல் வச்சுட்டாங்களாம்,''''அடடே... என்னாச்சு?''''பொங்கலுார் யூனியனில், மண் கடத்தல் லாரியை பறிமுதல் செய்ததில், வி.ஏ.ஓ.,வை, ஆர்.ஐ., மிரட்டும் ஆடியோ மேட்டரில், கலெக்டர் பேரையும் இழுத்து விட்டுட்டாங்க. அதனால, டென்ஷன் ஆன அவரு, கடும் நடவடிக்கை எடுத்ததான் சரிப்பட்டு வரும்னு, கனிம வள ஏ.டி.,யை டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு,''''ஆமாங்க்கா... பர்மிட் முறைகேட்டை எப்படி கண்டுபிடிச்சாங்க?''''பர்மிட்டில், மண் லோடு எடுக்க வேண்டிய, நேரம் கூட குறிப்பிட்டிருக்கும். அதிகாரி கையெழுத்து போட்ட இடத்தில, சிங்கப்பூர் பேனாவ வச்சு, அழிச்சிட்டு, மறுபடியும் வேற டைம் எழுதியிருக்காங்க,''''இப்படி தில்லுமுல்லு பண்ணி, ஆயிரக்கணக்கான லோடு மண்ணை எடுத்து, திருட்டுத்தனமாக பல லட்சம் பார்த்துட்டாங்களாம். இப்பதான் இது வெளியே வந்திருக்கு,''''அக்கா... அங்க மட்டுமில்ல. டிஸ்ட்ரிக்ட்டில் பல இடங்களில், மண் திருட்டு நடந்துட்டுதான் இருக்கு. போனவாரம் கூட, பல்லடம் பக்கத்துல, இச்சிப்பட்டியில, 'நைட்' நேரத்துல, மண் எடுத்து கடத்தறாங்க. ஆனா, அதைப்பத்தி லோக்கல் அதிகாரிங்க யாரும், மூச்சு விடலையாம்,''''அதெப்படி விடுவாங்க. அவங்களை 'நல்லா' கவனிச்சிட்டா, இவங்க 'புல்லா' மண்ணை திருடி வித்திடறாங்க மித்து. ஒரு பக்கம் மண் திருட்டுன்னா... இன்னொரு பக்கம் மான் திருட்டும் நடக்குது'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்றீங்க... மான் திருட்டா?''அதிர்ச்சியுடன் கேட்டாள் மித்ரா.''யெஸ். அவிநாசிக்கு பக்கத்துல, கோதபாளையம், புதுப்பாளையம் குளத்துக்குள்ள, நுாத்துக்கணக்கான புள்ளி மான்கள் இருக்குது. போன வாரம், ஒரு மானை அடிச்சு, சாப்பிட்டாங்களாம். தகவல் தெரிஞ்ச வனத்துறையினர் விசாரிச்சாங்களாம். ஆனா, தகவலை உறுதிப்படுத்த முடியாம திணறிட்டு விட்டுட்டாங்க,''''ஆனா, அதில் சம்பந்தப்பட்ட ஆறுபேரும் மாவட்ட வி.ஐ.பி., மூலமா, 'கவனிச்சதால' அப்படியே அமுக்கிட்டாங்களாம். இப்படி, எல்ேலாரும் செய்தால், மான் கூட்டம், மண் மாதிரி காணாம போயிடும் போல,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.தொலைவில் சிவன்மலை தெரியவே, ''இன்னும் மூணு கி.மீ., போனா மலை வந்துடும்டி. ஒரு காபி குடிச்சுட்டு போலாமா?'' என்ற சித்ராவின் கேள்விக்கு, ''ஓ... யெஸ்,'' என உடனே பதில் கொடுத்தாள் மித்ரா.இருவரும், பேக்கரி ஒன்றில், காபி ஆர்டர் கொடுத்து விட்டு உட்கார்ந்தனர்.''திருப்பூர் காலேஜ் ஒன்றில், ஒரு மாணவி 'சூைஸட்' பண்ணிப்பேன்' சொல்லி மிரட்டினாங்க, தெரியுங்களா?''''இல்லையே... என்ன பிரச்னை மித்து,''''அக்கா. காலேஜ் 'லேப்'புக்கு லேட்டா வந்த மாணவி, ஏற்கனவே அங்கிருந்தவங்கிட்ட போயி, 'இது என்னோட இடம். நீ வேற பக்கம் போ,'ன்னு சத்தம் போட்டிருக்காங்க. பதிலுக்கு இந்த பொண்ணும் சத்தம்போட, பெரிய பிரச்னையாயிடுச்சு,''''உடனே, பிரின்ஸிபால் ரூமுக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய், பஞ்சாயத்து பண்ணாங்க. அப்ப திடீர்ன்னு ஒரு பொண்ணு, ''யாராவது என்னை பேசினீங்கன்னா, உங்க எல்லாரோட பேரை எழுதி வச்சிட்டு, சூைஸட் செஞ்சுப்பேன்'னு மிரட்டுச்சாம்,''''இதைக்கேட்டு, 'ஷாக்' ஆன, பிரின்ஸிபால், போலீசுக்கு சொன்னதும், அவங்க வந்து, சம்பந்தப்பட்ட மாணவிக்கு 'கவுன்சிலிங்' கொடுத்தாங்களாம்,''''அது சரிடி... எதுக்கு ரெண்டு பேரும் சண்ட போட்டாங்களாம்,''''ஏதோ... 'லவ் அபேர்'னு சொல்றாங்க. காலேஜ் பொண்ணுங்க, படிப்பில கவனம் செலுத்தினா பரவாயில்ல. இப்டி பல தேவையில்லாத விஷயங்களை தேடிப்போனா பிரச்னைதான்'' என்ற மித்ரா காபி பருக ஆரம்பித்தாள்...அப்போ, ''மித்து, ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை லவட்ட ஆளும்கட்சிக்காரங்க முயற்சி பண்றாங்க, தெரியுமா?''''தெரியாதுங்க்கா...''''திருப்பூரின் அடையாளமாக இருந்து புஷ்பா தியேட்டரை ஒரே ராத்திரியில இடிச்சு தரைமட்டமாக்கிட்டாங்க. அந்த இடம் பலருக்கு சொந்தங்கிற நிலையில, முக்கியமான நபர் வெளியூர் போன போது, ஆளுங்கட்சிக்காரங்க கச்சிதமா இடிச்சிட்டாங்களாம்,''''சிட்டியின் இதயப்பகுதியில, இந்த இடம் இருக்கிறது ஆளும்கட்சியினரின் கண்ணை உறுத்திதான் இந்த வேலையை பண்ணிட்டாங்க. ஆனாலும், ஒரு பார்ட்னர் பெட்டிஷன் கொடுத்ததில், ஆளும்கட்சியை சேர்ந்த, நான்கு பேர் மீது எப்.ஐ.ஆர்., போட்டாச்சு'''வெரிகுட்... ஆனா, நடவடிக்கை எடுக்க மாட்டாங்களே''''அதென்ன உண்மைதான். இருந்தாலும், எப்.ஐ.ஆர்., போட்டதே சாதனைதான். அதிலும், கருவம்பாளையத்தை சேர்ந்த 'பெல்லும்', 'சவுத்'தும்தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம்னு, பெட்டிஷன் கொடுத்த வர் சொல்றாராம். ஏற்க னவே, 'பெல்'காரர் பல இடங்களில் இதேமாதிரி கட்டப்பஞ்சாயத்து இடத்தை அபகரிச்சிட்டாராம்,''''ஏற்கனவே, ஒரு நம்பர் லாட்டரி மேட்டரிலும் இவர் பேர அடிபட்டது அக்கா...''''ஆமான்டி அவருதான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஆண்டிபாளையம் பிரிவில், ஒரு டையிங் கம்பெனியை, இவரோட தலைமையிலான ஆட்கள் அடிச்சு நொறுக்குனாங்களாம். இந்த மாதிரி ஆளும்கட்சிக்காரங்க நடந்துகிட்டா, மேயர் கனவு கண்டிப்பா பலிக்காதுன்னு, அவங்க கட்சிக்காரங்களே சொல்றாங்களாம்,''''அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படறதே வேலையா போச்சு. அந்தம்மா இருந்தா, இவங்க எல்லாம் 'கப்...சிப்'னு இருப்பாங்க. இப்ப தடி எடுத்தவங்க எல்லாம் தண்டக்காரங்க ஆகிட்டாங்க,'' என்ற மித்ரா, காபிக்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்ததும், சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.''வசூல்வேட்டை செய்த ஒருத்தரை, 'மைக்கில்' அதிகாரி வெளுத்து வாங்கிட்டாரு,''''யாருங்க்கா, 'டி.சி.,' தானே...''''கரெக்டா கண்டுபிடிச்சிட்டயே... நார்த் ரேஞ்சுக்கு உட்பட்ட ஸ்டேஷன் ஒன்றில், லாட்டரி குட்கா மேட்டரில், ஜோரா வசூல் பண்ணிட்டு இருந்தாராம்,''''இந்த விஷயம், டி.சி.,க்கு போனதும், 'என்ன வேலை செஞ்சுட்டு இருக்கீங்கன்னு சொல்லி சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை வெளுத்து வாங்கிட்டாரு. ஸ்டேஷன் அதிகாரியும் அவரோட பாய்ச்சலுக்கு தப்பலையாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... பல்லடம் ரோட்டில், மசாஜ் சென்டர்னு பேரை வச்சிட்டு, ஒரே பிரச்னையாம். இதுதொடர்பா ஒரு வீடியோ வலம் வருதுன்னு, ஒரு பேச்சு உலா வருது. ஆனா, இது தெரிஞ்சும், 'சவுத்'ஆபீசர்ஸ் கண்டுக்கறதே இல்லையாம். இந்த விஷயம் பெரிசா போய் முடிஞ்சாதான், நடவடிக்கை எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்,'' மித்ரா, படபடவென கூறினாள்.மிகவும் அருகில், சிவன்மலைக்கு அடையாளமாக, 'கந்தன் பாதம் கனவிலும் காக்கும்' என்ற பேனர் வரவேற்றது. வண்டியை பார்க் செய்த சித்ராவும், மித்ராவும், மலையடிவாரத்துக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X