பணி துவங்கி 4 ஆண்டாச்சு... இன்னும் முடியல:தவியாய் தவிக்கும் தங்கையா தெரு மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணி துவங்கி 4 ஆண்டாச்சு... இன்னும் முடியல:தவியாய் தவிக்கும் தங்கையா தெரு மக்கள்

Added : பிப் 11, 2020
Share

சிவகாசி,:சிவகாசி தங்கையா தெரு, தட்டு மேட்டு தெருவில் எண்ணற்ற பிரச்னைகளால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி தங்கையா தெரு, தட்டு மேட்டு தெருவில் வாறுகால், ஓடை துார்வாரப்படாதது, வாறுகால் சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. தங்கையா தெரு பின்புறம் உள்ள இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதே பகுதியில் செல்லும் கிருதுமால் ஓடை துார்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி உள்ளது. தங்கையா தெரு மற்றும் தட்டு மேட்டு தெரு பகுதியில் எந்த தெருக்களிலும் வாறுகால் துார்வாரப்படவில்லை. மழைக் காலங்களில் மழைநீரோடு கழிவு நீரும் தெருவில் ஓடுவதோடு வீட்டிற்குள்ளும் வந்து விடுகிறது. வாறுகால் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. குப்பை வாங்க நகராட்சி பணியாளர்கள் முறையாக வருவதில்லை. இப்பகுதியில் குப்பை தொட்டியும் இல்லை. இதனால் குப்பையை வாறுகாலிலே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அம்பேத்கர் மணி மண்டபம் அருகே பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


வாறுகால் முழுவதும் மண்
தங்கையா தெரு, தட்டு மேட்டு தெருவில் எந்த தெருக்களிலும் வாறுகால் துார்வாரப்படவில்லை. வாறுகால் முழுவதும் மண் மேவி காணப்படுகிறது. கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது பகலிலும் கடிக்கிறது. சாக்கடையால் ஏற்படும் துர்நாற்றத்தால் வீட்டில் இருக்க முடியவில்லை. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் நீண்ட நாட்களாக துார்வாரப்படவில்லை.- சாந்தி, மகளிர் குழு தலைவி.


விரைந்து முடியுங்க
தங்கையா தெரு பின்புறம் 2015 ல் 4.50 லட்சம் லிட்டர் அளவிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பணி தொடங்கிய பின்னர் பாதியில் நிற்கிறது. இப்பகுதியில் மானுார் கூட்டு குடிநீர், வெம்பக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவற்றினை தேக்கி வைத்து முறையாக சப்ளை செய்ய மேல்நிலை தொட்டி இல்லை. எனவே தொட்டி கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.--ரவிசங்கர், சமூக ஆர்வலர்.


கழிவுநீர் வெளியேற வழியில்லை
அம்பேத்கர் மணி மண்டபத்திலிருந்து என்.ஆர்.கே.ஆர். ரோடு வரை உள்ள கிருதுமால் ஓடையை துார்வார நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் முறையாக பணி நடைபெறவில்லை. ஓடை முழுவதும் முட்புதர்களும், கருவேல மரங்களும் நிறைந்துள்ளது. நகரின் அனைத்து கழிவுகளும் ஓடையில் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லை. ஓடையை முறையாக துார்வார வேண்டும்.- வத்சலன், தொழிலதிபர்.


ஓடைகளை துார்வாருங்கஇப்பகுதியில் உள்ள பெரும்பாலான வாறுகால் சேதமடைந்துள்ளது. கழிவுநீர் வெளியேறி வீட்டிற்குள் வந்து விடுகிறது. குப்பை வாங்க முறையாக பணியாளர்கள் வருவதில்லை. இப்பகுதியிலிருந்த குப்பை தொட்டியினையும் அகற்றி விட்டனர். பொத்தமரத்து ஊரணி செல்லும் ஓடையும் துார்வாரப்படாமல் உள்ளது. குடியிருப்புகளை சுற்றிய ஓடைகளை துார்வார வேண்டும்.- முத்துவேல், பட்டதாரி இளைஞர்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X