ஒன்னு இல்லே மூனு... யாராச்சும் கேட்டாங்களா ஏன்னு?| Dinamalar

ஒன்னு இல்லே மூனு... யாராச்சும் கேட்டாங்களா ஏன்னு?

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 11, 2020
Share
தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' குறுஞ்செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.இஞ்சி டீ, முந்திரி பக்கோடா கொடுத்து உபசரித்த சித்ரா, ''தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு மருதமலை போயிருந்தியே; ஏகப்பட்ட கூட்டம்னு கேள்விப்பட்டேன்,'' என கேட்டாள்.''ஆமாக்கா, வழக்கத்தை விட, இந்த வருஷம் ஏகப்பட்ட கூட்டம். சரியான ஏற்பாடு செய்யாததால, நெரிசலில் சிக்கி,
 ஒன்னு இல்லே மூனு...  யாராச்சும் கேட்டாங்களா ஏன்னு?

தனது மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்அப்' குறுஞ்செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

இஞ்சி டீ, முந்திரி பக்கோடா கொடுத்து உபசரித்த சித்ரா, ''தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு மருதமலை போயிருந்தியே; ஏகப்பட்ட கூட்டம்னு கேள்விப்பட்டேன்,'' என கேட்டாள்.

''ஆமாக்கா, வழக்கத்தை விட, இந்த வருஷம் ஏகப்பட்ட கூட்டம். சரியான ஏற்பாடு செய்யாததால, நெரிசலில் சிக்கி, பக்தர்கள் ரொம்பவே அவஸ்தைப்பட்டாங்க. மயங்கி விழுந்து, ஒரு லேடி இறந்துட்டாங்களாம். கோவில் வளாகத்துல பக்தர் உயிரிழந்தது இதுதான் முதல்முறையாம்.

''எப்பவும் விழா நடத்துறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி, கூட்டுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்வாங்க. கார்ப்பரேஷன், ஹெல்த், போலீஸ், ஊராட்சி அதிகாரிகளை அழைத்து, 'மீட்டிங்' போட்டு, ஒவ்வொரு துறைக்கும் வேலையை பிரிச்சுக் கொடுப்பாங்க. இந்த மாதிரி கூட்டம் நடத்தலைன்னு போலீஸ்காரங்க புலம்புனாங்க. விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்த மினிஸ்டரும், நெரிசலில் சிக்கி தவிச்சாரு,''

''அதிருக்கட்டும், 72 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப் போறாராமே...''''வர்ற, 24ம் தேதி ஜெ., பிறந்த நாள். ஆளுங்கட்சி தரப்புல, கோவை முழுக்க தடபுடலா கொண்டாட முடிவு செஞ்சிருக்காங்க. எல்லா வார்டிலும் நலத்திட்ட உதவி வழங்கணும்னு சொல்லியிருக்காங்க. உள்ளாட்சி தேர்தல் களத்துல இறங்குறவங்க கண்டிப்பா விழா நடத்தணும்னு அறிவுரை வழங்கியிருக்காங்க.

''அமைச்சர் தரப்புல, தெலுங்குபாளையத்துல திருமண நிகழ்ச்சி நடக்கப் போகுது. 72 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப் போறாங்க. விரும்புறவங்க, ஆர்.எஸ்.புரத்துல இருக்கற எம்.எல்.ஏ., ஆபீஸ், சுகுணாபுரத்துல இருக்கிற மினிஸ்டர் வீட்டுல பதிவு செய்யணும்னு அறிவிச்சிருக்காங்க. உள்ளூர் நிர்வாகிகள் பலரும், தங்களுக்கு வேண்டப்பட்ட ஜோடிகளை பரிந்துரை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. சீர்வரிசையா, கட்டில், பீரோ, மெத்தை, தாலிக்கு தங்கம்னு, 72 பொருட்களை கொடுக்க போறாங்களாம்,''

''பூஜை நடத்தி, கலசம் கொடுத்தாங்களாமே,'' என, கிளறினாள் சித்ரா.

''அதுவா, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிேஷகம் நடந்துச்சே. தங்க முலாம் பூசிய கலசங்களை, மினிஸ்டர் குடும்பத்தினர் செஞ்சு கொடுத்தாங்க. அதனால, சிறப்பு பூஜை நடத்தி, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைச்சிருக்காங்க,''

''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''தி.மு.க.,வுல கட்சி நிர்வாகத்தை கிழக்கு, மேற்குன்னு பிரிச்சிருக்காங்களே, எதுக்கு'' என, கேட்டாள்.

''வர்ற, 21ம் தேதியில இருந்து, தி.மு.க.,வுல உட்கட்சி தேர்தல் நடக்கப் போகுது. கார்ப்பரேஷன் லிமிட்டுல வார்டு மறுவரையறை செஞ்சிருக்கிறதுனால, ஏரியாக்கள் பலவும் மாறியிருக்கு. பழைய ஒரு வார்டு, புதுசா பிரிச்சிருக்கிற மூன்று வார்டுக்குள்ள வருது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறதுக்கு சிரமம் வரும்னு, வார்டு அடிப்படையில் பொறுப்பு பிரிச்சுக் கொடுத்திருக்காங்க,''

''அப்ப, கார்ப்பரேஷனுக்கு தேர்தல் நடத்தப் போறாங்களா, என்ன?,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஆளுங்கட்சி நிர்வாகிகளை மாவட்டம் வாரியா, சி.எம்., நேரில் சந்திச்சு பேசுறாரு. நேத்து நடந்த கூட்டத்துல, ஏப்., கடைசியில எலக் ஷன் வர்றதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்காரு. இன்னைக்கு அதிகாரிகளுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில, ஆய்வு கூட்டம் நடக்குது. கண்டிப்பா, தேர்தல் நடத்திடுவாங்கன்னு பேசிக்கிறாங்க,

''அப்போது, வீட்டுக்கு தபாலில் திருமண பத்திரிகை வந்தது. அதை வாங்கி பிரித்த சித்ரா, 'அடுத்த மாசம் சித்தி மகளுக்கு திருமணம்' என்றபடி, ''தபால் துறைக்கு புதுசா வந்திருக்கிற அதிகாரி, ஊழியர்களிடம் கடுமையா நடந்துக்கிறாராம்.

அலுவல் ரீதியா பேசுறதுக்கு, இவரது அறைக்கு வர்றவங்கள, இருக்கையில உட்கார அனுமதிக்கிறதில்லையாம். துணை அதிகாரியா இருந்தாலும், நிக்கத்தான் செய்யணுமாம். எவ்ளோ நேரமானாலும், நின்னுக்கிட்டே பதில் சொல்லணுமாம். ஊழியர்கள் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள்.

''கார்ப்பரேஷனை பத்தி எதுவுமே சொல்லலையே...'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''மித்து, கார்ப்பரேஷன்ல இல்லாத சங்கதியா? சென்ட்ரல் ஜோன்ல உதவி வருவாய் அலுவலரா இருந்தவரு, மெடிக்கல் லீவுல இருக்காரு. புதுசா ஒரு அதிகாரி நியமிக்கிறதுக்கு பதிலா, உதவி கமிஷனருக்கே கூடுதல் பொறுப்பா கொடுத்திருக்காங்களாம்.

''நிர்வாக அலுவலர் பதவிதான் அவரது தகுதி. உதவி கமிஷனர் பொறுப்பு, கூடுதலா வழங்கியிருக்காங்க. இப்ப, உதவி வருவாய் அலுவலர் பணியிடமும் கொடுத்திருக்காங்க. ஒருத்தருக்கு மூணு பதவி கொடுக்கலாமான்னு, கார்ப்பரேஷனுக்குள்ள கசமுசா ஓடிட்டு இருக்கு,''

''கார்ப்பரேஷன்ல இதெல்லாம் சகஜம்தானே. நேர்மையா இருக்கறவங்களுக்கு மரியாதை இல்லையே,'' என்ற சித்ரா, ''தொழில் உரிமம் புதுப்பிக்கிறதுக்கு, ஆயிரக்கணக்குல லஞ்சம் கேக்குறாங்களாம்,'' என, பொடி வைத்தாள்.

''என்னக்கா சொல்றீங்க, ரேட் பிக்ஸ் பண்ணி, லஞ்சம் கேக்குறாங்களா,''''ஆமா மித்து, கார்ப்பரேஷன்ல வேலை பார்க்குற சுகாதார ஆய்வாளர்கள் சிலர், வரம்பு மீறி கலெக்சன் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. பிளாஸ்டிக் ரெய்டுங்கிற பெயரில் டீக்கடைக்கு போறாங்க. பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாம இருந்தா, தொழில் உரிமம் நகல் கேக்குறாங்க.

''சான்றுகளை எடுத்துக் காண்பித்தா, நீங்க இன்னமும் புதுப்பிக்காம இருக்கீங்க; புதுப்பிக்கறதுக்கு அஞ்சாயிரம் ரூபாய் செலவாகும்னு சொல்றாங்க. கட்டணம் அதிகமா இருக்கேன்னு கேட்டா, அதிகாரிகள் பலருக்கும் பங்கு கொடுக்கணும்.

இருந்தாலும், ஆபீசுக்கு வாங்க பேசிக்கலாம்னு சொல்லி, மிரட்டுறாங்க. கார்ப்பரேஷன் மேல வியாபாரிகள் பலரும் அதிருப்தியில இருக்காங்க. இதெல்லாம் உள்ளாட்சி தேர்தல்ல ஆளுங்கட்சிக்கு எதிரா திரும்புறதுக்கு வாய்ப்பிருக்காம்,''அப்போது, தனது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியை படித்த மித்ரா, ''இறப்பு சான்று கொடுக்குறதுக்கு மூவாயிரம் ரூபாய் வாங்குறாங்களாம்,'' என்றாள்.

''என்னப்பா சொல்ற, பிறப்பு சான்றா இருந்தாலும், இறப்பு சான்றா இருந்தாலும் இலவசமா தானே கொடுக்கணும்,'' என, அதிர்ச்சியாக கேட்டாள் சித்ரா.''அக்கா, யாராவது வீட்டுல இறந்தால், அதை உறுதிப்படுத்தி, டாக்டர் சான்று வாங்கணும். அச்சான்று இருந்தால் மட்டுமே, கார்ப்பரேஷன் சர்ட்டிபிகேட் தருவாங்க. 'பிரீசர் பாக்ஸ்' கொடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் நடத்துவோர், சில டாக்டர்களிடம் பழக்கம் வச்சிருக்காங்க. இறப்பு நேர்ந்த வீட்டில் இருப்பவர்களிடம், மூவாயிரம் ரூபாய் வரை வசூலிச்சு, சான்று வாங்கிக் கொடுக்குறாங்க,''

''என்னப்பா, நீ, இதுக்கே அலுத்துக்கிறே, மதுக்கரை ஏரியாவுல ஒருத்தரு, வருமான சான்று கேட்டு இ-சேவை மையத்துல, 'அப்ளை' செஞ்சிருக்காரு. வி.ஏ.ஓ.,வுக்கு பரிந்துரை செய்யாம, மேலதிகாரியே சர்ட்டிபிகேட் கொடுத்திட்டாரு. இந்த விஷயம் கேள்விப்பட்ட வி.ஏ.ஓ., ஆபீசுக்கு போயி பொங்கியிருக்காரு. 'மேலிடத்து உத்தரவு'ன்னு சொல்லியிருக்காங்க. அதை நம்பாமல், அவரை விட மேலதிகாரியிடம் முறையிட்டிருக்காரு. மறுநாள், வி.ஏ.ஓ.,வை ஏரியா விட்டு ஏரியா மாத்திட்டாங்கன்னா, பாரேன்,'''

'கலிகாலம் முத்திப்போச்சுன்னு சொல்றது இதைதானோ,'' என்ற மித்ரா, ''அரசாங்க ஆஸ்பத்திரியில ஏகப்பட்ட நர்ஸ் பணியிடம் காலியா இருக்காமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எம்.எல்.ஏ., - அம்மன் அர்ச்சுனன், அரசு ஆஸ்பத்திரிக்கு போனாரு. அப்ப, சில நர்ஸ்கள் அவரை சந்திச்சு, '600 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 215 பேரே இருக்கோம்; எத்தனை தடவை சொல்றது, எங்க பிரச்னைக்கு தீர்வு காண மாட்டீங்களா'ன்னு,சொல்லியிருக்காங்க.அதற்கு எம்.எல்.ஏ.,

''அப்படியா, இப்படியொரு பிரச்னை இருக்கறதே எனக்கு தெரியாதுங்க. யாருமே சொல்லலைங்க; நீங்க, இப்ப சொல்லித்தாங்க தெரியும். விடுங்க, இனி, புதுசா நர்ஸ் நியமிக்க பேசுகிறேன்னு சொல்லிட்டு, எஸ்கேப் ஆகியிருக்காரு,''அப்போது, 'வாட்ஸ்அப்'பில் வந்திருந்த மீம்ஸ்சை பார்த்து சிரித்த மித்ரா, ''மதுபானம் விலையை உயர்த்திட்டாங்கள்ல, குடிமகன்கள் பலரும் புலம்புற மாதிரி, 'மீம்ஸ்' வந்திருக்கு,'' என்றாள்.

''விலையை உயர்த்துனா மதுபானம் குடிக்கமா இருக்காங்களா, கொஞ்ச நாளைக்கு புலம்புவாங்க. அப்புறம் எப்பவும்போல குடிக்க ஆரம்பிச்சிடுறாங்க. பிச்சனுார் ஏரியாவுல, ஒரு பேக்கரியில 'சில்லிங்' விக்கிறாங்க. அதுல கெடைக்குற லாபத்துல சரி பாதி, க.க.சாவடி ஸ்டேஷன்ல இருக்கற எஸ்.எஸ்.ஐ.,க்கு பங்கு கொடுக்குறாங்களாம். அவருக்கும், ரெண்டெழுத்து பெண் போலீசுக்கும் நெருக்கமான உறவு இருக்காம்,''அப்போது, வீட்டுக்கு வந்த நாளிதழை வாங்கி, புரட்டிய மித்ரா, விளையாட்டு பக்கத்தை படிக்க ஆரம்பித்தாள்.

''என்ன மித்து, ஒனக்கு தெரிஞ்சவங்க யாராவது விளையாடுனாங்களா,'' என கிளறினாள் சித்ரா.

''அக்கா, நம்மூர்ல விளையாட்டுல ஏகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ் ஆர்வத்தோடு ஈடுபடுறாங்க. ஆனா, பயிற்சி எடுக்குறதுக்கு போதுமான மைதான வசதி இருக்கறதில்லை. நேரு ஸ்டேடியத்துல, ரெண்டு மாசமா ஹீரோ ஐ - லீக் கால்பந்து போட்டி நடக்குது. போட்டி நடக்குறதா இருந்தா, மூணு நாளைக்கு வேறு யாரும் பயிற்சி எடுக்க விடுறதில்லை. அதனால, மத்தவங்க, ஸ்டேடியத்தின் வெளிப்பகுதியில பயிற்சி எடுக்குறாங்க,''

''நம்மூரு மினிஸ்டரும் ஸ்போர்ட்ஸ்மேன்தானே; அவரிடம் சொன்னா, புதுசா மைதானமே உருவாக்கிக் கொடுக்கப் போறாரு,''''நீங்க சொல்றதும் சரிதான். அவரு, கிரிக்கெட் பிளேயர். வாரந்தவறாம கிரிக்கெட் விளையாடுவாரு. ஆனா, சில வருஷத்துக்கு முன்னாடி, கிரிக்கெட் மைதானம் அமைக்க போறதா, கார்ப்பரேஷன் பட்ஜெட்டுல அறிவிச்சாங்க. வருஷங்கள் ஓடிப்போயிருச்சு; இன்னும் அமைக்கலை,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் சித்ரா.

புழல் சிறையில் மொபைல் போன் பறிமுதல் செய்தது தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதை பார்த்த மித்ரா, ''அக்கா, கொஞ்ச நாளா, மொபைல் போன் திருடுபோறது அதிகமாகிடுச்சு. திருட்டு மொபைல் வாங்குறதுக்காகவே, காந்திபுரம் பகுதியில கடை திறந்திருக்காங்களாம். அங்க, திருட்டு மொபைல் போன்ல, புதுசா ஐ.எம்.இ.ஐ., எண் ஒட்டி, ஆன்லைன்ல விக்கிறாங்களாம். போலீஸ்காரங்க பேசிக்கிட்டாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X