பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை நாரில் மிதியடிகள் தயாரிக்கும் பெண்கள்

Added : பிப் 11, 2020
Advertisement
 தென்னை நாரில் மிதியடிகள் தயாரிக்கும் பெண்கள்


தென்னை நாரில் இருந்து, அழகான மிதியடிகள் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு, உடுமலை பெண்கள் சாதித்து வருகின்றனர்.
தென்னை மரத்தின் அனைத்துப்பொருட்களும் பயனுள்ளதாக மாறி வருகிறது. தடுக்கு, சீமாறு, தேங்காய், கொப்பரை, தென்னை நார், கயிறு, நார் துகள் என பல பொருட்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது.இதில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு தனி 'மவுசு' உள்ளது. அந்த வரிசையில், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மிதியடிகளும் ஒன்றாகியுள்ளது.
மத்திய கயிறு வாரியத்தின் சார்பில், பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது. தென்னை நாரிலிருந்து தயாரிக்கப்படும், கலைப்பொருட்கள், அலங்கார பொருட்கள் மற்றும் அணிகலன்கள், விற்பனை செய்யப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக, வீடு, அலுவலகம் என பல இடங்களின் துாய்மை பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் மிதியடிகளும் தென்னை நார் கயிறுகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
கயிறு உற்பத்தி தொழிற்சாலைகளில், மிதியடிகளும், இணைப்பொருட்களாக தயாரிக்கப்பட்டு, வேறு மாநிலங்களில் சந்தைப்படுத்தி வருகின்றனர். தென்னைநார் பொருட்கள் தயாரிப்பதில், பெண்கள் பயனடையும் வகையில், மத்திய கயிறு வாரியம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பில், இப்பயிற்சிகள் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக மாறியுள்ளது.
இதுவரை, பழங்குடியின பெண்கள் மட்டுமே இந்த பயிற்சி வகுப்புகளில் பயன்பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.நடப்பாண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு, தென்னை நார் கயிற்றிலிருந்து மிதியடிகள் தயாரிக்கும் கைத்தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.உடுமலை ஏரிப்பாளையத்தில், இப்பயிற்சி வகுப்பு, கடந்த ஆண்டு டிச., துவங்கி, பிப்., முதல் வாரம் வரை நடக்கிறது. சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.பயிற்சிக்கு, உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து, இருபது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தினமும், உணவு இடைவேளை நேரம் போக, காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, இப்பயிற்சியளிக்கப்படுகிறது.கயிறு வாரியத்தின் மூலம் பயிற்சி பெற்ற, பயிற்சியாளர்கள் மகுடீஸ்வரி, ஆனந்தி ஆகியோர் பெண்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.கயிறு வாரியத்தின் மூலம் மூலப்பொருட்களாக கயிறுகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கான ஊக்கத்தொகையாக மாதம் மூவாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மிதியடிகள் வடிவமைக்கும் இயந்திரத்தில், வடிவமைத்துள்ள 'டிசைன்களுக்கு' ஏற்ற வகையில் கயிறுகளை சுற்றுகின்றனர்.சுற்றப்பட்ட கயிற்றை இறுக்கி, முழுமையான மிதியடிகளாக மாற்றுகின்றனர். இறுதியாக, அதன் உறுதியை மேம்படுத்த, வெயிலில் உலர வைக்கின்றனர். மத்திய அரசின் பயிற்சியை பயன்படுத்தி, கைத்தொழில் கற்றுக்கொள்வதோடு, அந்த பொருட்களை சந்தைப்படுத்தி, தொழில் முனைவோராக மாறி வருகின்றனர்
.கயிற்றில் இருந்து, கலை அம்சம் நிறைந்தமிதியடிகள், சந்தைக்கு வருவதற்கும், அரசின் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளது.இப்பொருட்களை சந்தைப்படுத்தவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கையாக உள்ளது.
பயனுள்ள பயிற்சி!
தென்னை நாரிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கவே பயிற்சி எடுத்தோம். இப்போது, மிதியடிகள் பயிற்சி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.கோலம் போடுவது போல், மிதியடிகளுக்கான வடிவமைப்பை தீர்மானித்துக்கொள்கிறோம். அதற்கான வண்ணங்களுக்கு ஏற்ப, கயிறுகளுக்கு சாயமிட்டு, அந்த வடிவத்துக்கு ஏற்ப கயிறுகளை சுற்றுகிறோம். மிதியடிகளை சற்று வித்தியாசமாகவும், மற்றவற்றை விட உறுதியாகவும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, கயிறு மிதியடிகள் கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும்.ராணி, பயிற்சி பெறுபவர்.
அரசு உதவணும்!
பெண்கள், கைத்தொழில் கற்றுக்கொள்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இப்பயிற்சி அதற்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், அருகிலுள்ள வீடுகளில், இதனை பயன்படுத்தி, நல்ல கருத்துகளையே தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிதியடிகளை, 100 - 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் தேவை இருப்பதால், மக்களிடையே வரவேற்பு உள்ளது. ஆனால், வடிவமைக்கும் மிதியடிகளை, சந்தைப்படுத்துவது சிரமமாக உள்ளது. சந்தைப்படுத்துவதற்கு, அரசு உதவ வேண்டும்.ரங்கநாயகி, பயிற்சி பெறுபவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X