புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் ஊனம் அடைந்த காளைக்கு, அதன் உரிமையாளர் செயற்கைக்கால் தேடி வருகிறார்.
புதுக்கோட்டை, கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாபு, 45; ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், தற்போது, 'நத்தம் 9 ஏ' பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர், மாணிக்கம் என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். இந்தக் காளை, அலங்காநல்லூர் துவங்கி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று, பைக், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளது. காளையின் உரிமையாளரான பாபு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார். வாடிவாசலில் இருந்து சீறி வரும் மாணிக்கம், மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல், லாவகமாக தப்பிச் செல்லும் திறன் கொண்டது. இந்தக் காளை, கடந்த ஆண்டு, புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் பரிசு வென்றது. ஆனால், அந்தப் போட்டியில், காளையின் வலது பின்னங்காலில் முறிவு ஏற்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், முறிவை சரி செய்ய முடியவில்லை. இதனால், காலில் குளம்புடன் உள்ள ஒரு பகுதி, சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தனக்கு பெயர் மற்றும் புகழை பெற்று தந்து, ஊனம் அடைந்த காளை மாணிக்கத்திற்கு, மனிதர்களுக்கு பொருத்துவது போல், செயற்கைக் கால் பொருத்த முடியுமா என, பாபு விசாரித்து வருகிறார். கால்நடைகளுக்கான செயற்கை கால்கள் எங்கே தயாரிக்கப்படுகிறது எனவும், தேடி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE