சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் இருதயம் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

ஆத்தூர்: ஏத்தாப்பூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்நாரியப்பனூர் ஊராட்சி, பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சுரேந்தரன், 20. இவர், வாழப்பாடியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 8ல், கள்ளக்குறிச்சியில் இருந்து, ஆத்தூர் வழியாக வாழப்பாடி நோக்கி, 'பஜாஜ் - பல்சர்' பைக்கில் சென்றார். மதியம், 12:00 மணியளவில், ஏத்தாப்பூர் அருகே, மத்தூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற 'டிவிஎஸ்- ஸ்டார் சிட்டி' பைக் மீது, இவரது பைக் மோதியதில் தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ஏத்தாப்பூர் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை, 4:00 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததால், அவரது பெற்றோர், உறவினர்கள், உடல் உறுப்பை தானம் செய்வதாக, அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சுரேந்தரனின் இருதயம், கல்லீரல் உள்பட மொத்தம், ஏழு உறுப்புகள் எடுத்துக்கொள்வதற்கு, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதில், சுரேந்தரனின் உடலில் இருந்து இருதயம் எடுக்கப்பட்டு, சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, கோவை, அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒரு கிட்னி, கங்கா மருத்துவமனைக்கு எலும்பு, தோல், சேலம், மணிப்பால் மருத்துவமனைக்கு கல்லீரல், சேலம் அரசு மருத்துவமனைக்கு, ஒரு கிட்னி, கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. நேற்று காலை, 11:11 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு வழிப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சேலம் விமான நிலையத்திற்கு, 11:29 மணியளவில் சென்றடைந்தது. அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம், 24 கி.மீ., தூரத்தை, 18 நிமிடத்தில் டிரைவர் சுப்புராஜ், 26, மருத்துவ உதவியாளர் நாகராஜ், 25, ஆகியோர் சென்றடைந்தனர். கவர்னர் செல்வதாக இருந்த நிலையில், ஆம்புலன்ஸ் சென்ற பின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விமான நிலையம் சென்றார். 11:40 மணியளவில், இருதயத்துடன் விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து, மூளைச்சாவு அடைந்த வாலிபரின் பெற்றோர் ஜெயக்குமார், ராணி கூறுகையில், 'எங்களது மகன் இறந்து விட்டாலும், என் மகனின் உடல் உறுப்புகள், மற்றவர்களை வாழ வைக்க பயன்படுவது ஆறுதல் அளிக்கிறது. அவனது உடல் மட்டுமே இறந்தாலும், இருதயம் போன்ற உயிர் துடிப்புகள் மூலம் மகன் வாழ்வான்' என, கண்ணீருடன் கூறினர்.

டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: தானமாக பெறப்பட்ட ஒரு கிட்னி, வாலிபர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, நம் மருத்துவமனையில் நால்வருக்கு, மாற்று கிட்னி பொருத்தப்பட்டுள்ளது. கண் வங்கியில், கண்கள் பாதுகாப்பாக உள்ளன. மத்திய அரசின், மருத்துவமனை தர நிர்ணய கமிட்டியை சேர்ந்த டில்லி, புனே குழுவினர் சமீபத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அதில், மகப்பேறு சிகிச்சைப்பிரிவு மற்றும் குழந்தைகள் மருத்துவப்பிரிவு சிறப்பாக செயல்படுவதாக, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதனால், மிக உயரிய விருதான பிளாட்டினம் விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது. மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு போக்க, ஒரு கோடி ரூபாய் நிதி, சேலம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X