கொப்பரை தேங்காய் விலை உயர்வு: கர்நாடகாவில் இருந்து காய்கள் வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை தேங்காய் விலை உயர்வு: கர்நாடகாவில் இருந்து காய்கள் வரத்து அதிகரிப்பு

Added : பிப் 11, 2020
Share

ஈரோடு: தமிழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் தேங்காய் வரத்து உள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் தென்னை மரங்கள் உள்ளதால், உணவுக்கான தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய், தேங்காய் எண்ணெய் தேவையை, இம்மூன்று மாநிலங்களுமே பூர்த்தி செய்கின்றன. கடந்த, 2019ல் இம்மூன்று மாநிலங்களில் பரவலாக மழை பெய்து, தேங்காய் விளைச்சல், கொப்பரை உற்பத்தி அதிகமாக உள்ளது. வடமாநிலங்களான மஹாராஷ்டிரா, ஒடிசா, டில்லி, மும்பை, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில், தமிழகம் மற்றும் கர்நாடகா தேங்காயை விரும்பி வாங்குவர். மகாசிவராத்திரியின்போது, வழக்கத்தைவிட, மூன்று முதல் ஐந்து மடங்கு தேங்காய் பயன்படுத்துவர். அதற்காக, பல லட்சம் காய்கள், வடமாநிலம் சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம், தமிழகத்தில் காய் வரத்தும், கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரித்தும், காய் விலை பத்து ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. கொப்பரை தேங்காய் விலை, கடந்த ஜூன், 5ல் கிலோ, 80.15 முதல், 88 ரூபாயாகவும், ஜூலை, 20ல் 86.15 ரூபாய் முதல், 94.15 ரூபாயாகவும், டிச., 10ல் 100 ரூபாயை தொட்டு மீண்டும் சரிந்தது. தற்போது, 108 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுபற்றி, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் கே.வெங்கடாசலம் கூறியதாவது: தமிழக காய்கள், அதிக அளவில் சாப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. 30 சதவீத காய்கள், கொப்பரை தேங்காயாக்கி, எண்ணெய் உற்பத்திக்கும், தேங்காய் துருவல் போன்ற பயன்பாட்டுக்கும் செல்கிறது. நடப்பாண்டு, உணவு பயன்பாட்டுக்கு அதிகமாக வடமாநிலங்களுக்கு வாங்கி செல்கின்றனர். கர்நாடகா, கேரளா காயைவிட, தமிழகத்துக்காய் ருசியாக இருப்பதால், விருப்பி வாங்குவதால், தற்போது ஒரு காய், 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால், விவசாயிகளிடம், 8 ரூபாய், 15 ரூபாய் வரையிலான விலையில் தான் கொள்முதல் செய்கின்றனர். காயில் விலை கிடைப்பதால், கொப்பரை தேங்காயாக்கி விற்க, விவசாயிகள் விரும்பவில்லை. தவிர, கர்நாடகா காய் அதிக அளவில் வரத்தாகிறது. அக்காயை வியாபாரிகள் வாங்கி, கொப்பரை தேங்காயாக்கி விற்கின்றனர். தற்போது வடமாநிலங்களுக்கு அதிகமாக காய் அனுப்புவதால், தமிழகம், கர்நாடகாவில் அதிகம் தேங்காய் விளைந்தும், காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில், 'கஜா' புயலால் தென்னை சேதமடைந்ததால், இன்னும் அங்கு பாதி விளைச்சல் கூட வராததால், ஒருபுறம் தட்டுப்பாடு எனக் கூறலாம். வரும் மார்ச்சுக்குப்பின் காய் வரத்து குறைந்து, விலை மேலும் உயரும். வழக்கமாக ஆடி மாதம்தான் தேங்காய் உற்பத்தி அதிகமாகும். அதுவரை விலை உயர்ந்து காணப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X