சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் சும்மா இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் அல்லது உச்ச நீதிமன்றம், ஏதாவது பிரச்னையை கிளப்பி, உங்களை அவ்வப்போது உசுப்பேற்றி விடுகிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: இட ஒதுக்கீடு வழங்குவது, அடிப்படை உரிமையல்ல என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை எதிர்த்து, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

'வள்ளலார் சிந்தனை மற்றும் சித்தாந்தம், ஹிந்துக்களால் பின்பற்றப்படுகிறது. ஹிந்து மதத்தை எதிர்ப்போர், அது பற்றி கவலைப்பட தேவையில்லை...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: வள்ளலார் வெறும் சிலை அல்ல. ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, சடங்குகள் ஒழிப்பிற்கான சிறந்த அடையாளம். சடங்குகளை ஒழிக்க பாடுபட்ட அவரை, வெறும் சடங்கு என்ற சிமிழுக்குள் அடைக்காதீர்கள். வள்ளலார் சிந்தனை வளரட்டும்.

'சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றிய பல அம்சங்கள், இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளனவே...' என, நினைவுகூரத்தக்க வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதை வெறும் அறிவிப்பாக விட்டு விடாமல், சட்டசபையில் தனிச்சட்டமாக நிறைவேற்ற வேண்டும். மேலும், எந்த சூழ்நிலையிலும், மத்திய அரசின் நிர்பந்தங்களுக்கு பணியக் கூடாது.

'ரஜினி ஒரு சில வார்த்தைகள் தான் பேசுவார். அதை வைத்தே, தமிழக கட்சித் தலைவர்கள், ஒரு மாதம் ஓட்டி விடுவர்...' என, பதிலடி கொடுக்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேச்சு: நடிகர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் ஒரு மாதத்திற்கு முன், வீட்டை விட்டு வெளியே வருவார். பத்திரிகையாளர்களை சந்திப்பார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்பார். கட்சி துவக்கும் நாளை அறிவிக்கவில்லை. எப்போதும் அறிவிக்கப் போவதில்லை.

'உங்கள் ஆதங்கம் புரிகிறது. எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடத்தை முறியடிக்க, உங்களால் முடியவில்லை என்பதும் நன்கு தெரிகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: தமிழகத்தில், 'ஹைட்ரோ கார்பன்' திட்டம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது, முந்தைய, தி.மு.க., ஆட்சியில். ஆனால், இப்போது எதிர்க்கின்றனர். கேட்டால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர். இதன் மூலம், பாவம் செய்தது, தி.மு.க., பழி சுமப்பது, அ.தி.மு.க., என்றாகிவிட்டது.

'தண்ணீர் சிக்கனம் வலியுறுத்தி, 'வந்தேமாதரம்' போல ஒரு பாடல் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துங்களேன்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேச்சு: தண்ணீர் பற்றாக்குறை தான், இப்போதைய தலையாய பிரச்னையாக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு, துாய்மையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, ஆதாரமாக உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை. இதை குறிக்கோளாக வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X