புதுடில்லி: ''நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை; அதன் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று(பிப்.,10) ராஜ்யசபாவில் பேசியபோது, 'தகுதியற்ற டாக்டர்களால், நாட்டின் பொருளாதாரம், வீழ்ச்சியை நெருங்கிஉள்ளது' என்றார்.
பற்றாக்குறை:
இதற்கு பதிலடியாக, இன்று, நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசியதாவது: முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், திறமையான டாக்டர்கள் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்த போது, நிதிப் பற்றாக்குறை எந்த அளவிற்கு உயர்ந்து இருந்தது; அது, தற்போது எந்த அளவிற்கு குறைந்து உள்ளது என்பது, நாட்டிற்கு தெரியும். கடந்த, 2008--14 வரையிலான நிதியாண்டுகளில், நிதிப் பற்றாக்குறை, முறையே, 6.1 - 4.9 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.
மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், 2014-19 வரையிலான நிதியாண்டுகளில், நிதிப் பற்றாக்குறை, 4.1 -3.4 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், மறுமதிப்பீட்டில், 3.3 சதவீதத்தில் இருந்து, 3.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 3.5 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கையிருப்பு:
நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை, வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ள, அன்னியச் செலாவணி கையிருப்பு மற்றும் பங்குச் சந்தை உயர்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான, தனி நபர் முதலீடு, ஏற்றுமதி, தனியார் மற்றும் பொதுத் துறை நுகர்வு ஆகிய நான்கு இன்ஜின்களை இலக்காக வைத்து, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வரும், 2023--25க்குள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், 1.03 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நுகர்வை அதிகரிக்க, ரபி மற்றும் கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி கண்கூடாக தெரியத்துவங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE