பொது செய்தி

இந்தியா

மகிழ்ச்சி! தேவையான சலுகைகள் தொடர்கின்றன; வரிதாரரே சிக்கலின்றி முடிவு செய்ய வாய்ப்பு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Budget, Tax_discount, வரிசலுகை, மத்திய பட்ஜெட், நிர்மலா_சீதாராமன், வரிதாரர், மகிழ்ச்சி, பென்ஷன் கம்யூடேஷன்

புதுடில்லி: வரும், 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி சலுகை பெறுவதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 70 வகையான வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சில குறிப்பிட்ட, மக்களுக்கு தேவையான வரிச் சலுகைகள் தொடர்வதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரி தொடர்பாக, முக்கிய அறிவிப்பை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் நிரந்தரக் கழிவுகள் மற்றும் வரிச் சலுகைகளை கைவிட்டால் மட்டுமே, குறைக்கப்பட்ட புதிய வரி விகிதங்களை பெற முடியும் என, அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி கிடையாது. 2.50 லட்சம் - 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 5 சதவீதம்; 5 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம்; அதற்கு மேற்பட்ட வருவாய்க்கு, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

புதிய வருமான வரி திட்டத்தில், வரி விலக்கு அல்லது வரிக் கழிவுகளை கோர முடியாது. மொத்த வருவாயை குறிப்பிட்டு, அதற்கென உள்ள வரியை செலுத்தினால் போதும். புதிய வரி முறையில், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆண்டுக்கு, 5 - 7.50 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 10 சதவீதம்; 7.50 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை, 15 சதவீதம்; 10 லட்சம் - 12.50 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம் ; 12.50 லட்சம் - 15 லட்சம் ரூபாய் வரை, 25 சதவீதம்; 15 லட்சம் ரூபாய்க்கு மேல், 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

இந்த இரண்டு முறைகளில் எதை வேண்டுமானாலும், வரி செலுத்துவோர் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த, 100க்கும் மேற்பட்ட வரிச் சலுகைகளில், 70 வரிச் சலுகைகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. மீதமுள்ளவற்றை ஆய்வு செய்து, படிப்படியாக அவை குறைக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.

***
வரும் நிதியாண்டில், சில பிரிவுகளுக்கான வரி விலக்கு தொடர்கிறது. வருமான வரி தொடர்பாக, எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, அவரவர் முடிவு செய்து கொள்ளலாம். முக்கியமான பல வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. சில வரிச் சலுகைகள் தொடர்கின்றன. அது குறித்து அறிந்து, தகுந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்.


தபால் நிலைய சேமிப்பு கணக்கு:

தபால் நிலையங்களில் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கு வட்டிக்கான வரிச் சலுகை தொடர்கிறது. தனிநபருக்கு, 3,500 ரூபாயும், கூட்டு கணக்குக்கு, 7,000 ரூபாய் வரையும் வரிச் சலுகை பெறலாம். ஆனால், மொத்த வரி வருவாய்க்கு முன், இந்த சலுகையைப் பெறலாம்.


பணிக்கொடை :

தனியார் நிறுவனங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஓய்வு பெறும்போது, கிராஜுவிடி எனப்படும் பணிக்கொடை வழங்கப்படுகிறது. வாழ்நாளில், ஒரு முறை மட்டும், 20 லட்சம் ரூபாய் வரையிலான பணிக்கொடைக்கு வரி சலுகை பெறலாம். அரசு ஊழியர்களுக்கு, இதில் உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த சலுகை, வரும் நிதியாண்டிலும் தொடர்கிறது.


ஆயுள் காப்பீடு:

ஆயுள் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு, 80சி பிரிவின் கீழ் பெற்று வந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயுள் காப்பீடு முதிர்ச்சியின்போது பெறும் தொகைக்கு, வரிச் சலுகை பெறலாம்.


வருங்கால வைப்பு நிதி:

பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியில், பயனாளியின் கணக்கில், நிறுவனங்கள் செலுத்தும் தொகை, ஆண்டுக்கு, 7.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம். அதேபோல், என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில், நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களே, இந்த வகையில், வரி செலுத்த நேரிடும்.


பி.எப்., வட்டி:

பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியில் சேரும் தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கான வரிச் சலுகை தொடர்கிறது. அதே நேரத்தில், 9.5 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கப்பட்டால், வரி செலுத்த வேண்டும்.


பி.பி.எப்., கணக்கு:

பி.பி.எப்., எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகைக்கு வரிச் சலுகை கோர முடியாது. அதே நேரத்தில், இந்த திட்டத்தில் பெறும் வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம். அதேபோல், முதிர்வின்போது, பெறும் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்.


செல்வமகள் சேமிப்பு திட்டம்:

'சுகன்ய ஸ்மிருதி யோஜனா' எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கான வட்டிக்கு, வரிச் சலுகை தொடர்கிறது. அதேபோல், இந்த திட்டத்தின் கீழ் திரும்பப் பெறும் தொகைக்கும் வரிச் சலுகை பெறலாம். ஆனால், இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடையாது.


தேசிய பென்ஷன் திட்டம்:

என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்ட முதிர்வு காலத்தில் பெறும் தொகைக்கான வரிச் சலுகை தொடர்கிறது. அதேபோல் இடையில் எடுக்கப்படும் தொகைக்கும் வரிச் சலுகை பெறலாம்.


நிறுவனங்களின் பரிசு:

ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் பரிசுக்கும் வரிச் சலுகை பெறலாம். அதிகபட்சம், 5,000 ரூபாய் வரையிலான பரிசுக்கு இந்த சலுகை பெற முடியும்.


ஓய்வூதியம் தொகுப்பு:

'பென்ஷன் கம்யூடேஷன்' எனப்படும், ஓய்வூதியத்தை குறைத்துக் கொண்டு, தொகுப்பு நிதியாக பெறும் திட்டத்தில் பெறப்படும் தொகைக்கான வரிச் சலுகையும் தொடர்கிறது.


விடுப்பு தொகை:

ஓய்வு பெறும்போது, இருப்பில் உள்ள விடுப்பை, ரொக்கமாக பெறும்போது, 3 லட்சம் ரூபாய் வரை, வரிச் சலுகை பெறலாம்.


விருப்ப ஓய்வு:

விருப்ப ஓய்வு பெறும்போது, 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு, வரிச் சலுகை திட்டம் தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - Chennai,இந்தியா
12-பிப்-202011:24:56 IST Report Abuse
venkat வீட்டு கடன், LIC என்று எந்த முதலீட்டுக்கும் வரிச்சலுகை கிடையாது என்கிறபோது எப்படி மக்கள் மகிழ்ச்சி என்று எப்படி புரிந்துகொண்டீர்கள். நிதியமைச்சருக்கே தெளிவில்லாத பட்ஜெட். நடுத்தர மக்களுக்கும் வரிவிலக்குக்காகவே LIC பாலிசி எடுத்தவர்களுக்கும் ஏமாற்றமே....
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-பிப்-202015:17:52 IST Report Abuse
ஆரூர் ரங்வரிச்சலுகை கேட்பவர்களுக்கு அது உண்டு .தேவைப்படாதவர்கள் மட்டுமே புதிய முறையில் வரிக்கணக்கு தாக்கல்செய்யலாம் வரிச்சலுகை வேண்டும் என நினைப்பவர்கள் பழைய முறையிலேயே கணக்கை காட்டலாம்...
Rate this:
Gopi - Chennai,இந்தியா
13-பிப்-202012:23:24 IST Report Abuse
Gopiஎன்ன வெங்கட் பொளந்து கட்டுறீங்க. சொந்த வீடு ஏற்கனவே வாங்கியோ, பாதி தவணை ஆண்டுகள் கடந்தோ (2 /3 rd of homeloan tenure completed with less interest and principal being paid, and could not avail full 1.50+2.00 lakhs benefit) , HRA பெறமுடியாமல் சொந்த வீட்டிலேயே இருப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் 70 வருடங்களில் இல்லாத விடிவு காலம் வந்துள்ளது...
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
12-பிப்-202010:31:12 IST Report Abuse
Radj, Delhi வரி சலுகை கொண்டுபிங்கன்னு பார்த்தா,மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஒழித்து, அவர்களிடம் மொத்த வரியையும் வாங்குவதற்கு என்னமா பிளான் போடுறாங்க. வாட்சாங்கா பாரு ஆப்பு டெல்லியில....
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
12-பிப்-202009:56:51 IST Report Abuse
G.Prabakaran //ஆயுள் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு, 80சி பிரிவின் கீழ் பெற்று வந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.// இனி மேல் யாருமே காப்பீடுகளில் கவனம் செலுத்த மாட்டார்களே. காப்பீடு முகவர்கள் பிழைப்பிற்கு ஆபத்து தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X