டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி! 62 இடங்களைப் பிடித்தார் கெஜ்ரிவால்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (24+ 571)
Advertisement
DelhiPolls2020,Congress,rahulgandhi,rahul,DelhiElectionResults,AAPWinningDelhi, டில்லிதேர்தல்,காங்கிரஸ்,கெஜ்ரிவால்,ஆம்ஆத்மி,ராகுல்,ராகுல்காந்தி

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62ல் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. எட்டு தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெற்றது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டபைக்கு கடந்த 8ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் 62.59 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. துவக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளிலும் முன்னிலை பெற்றது. இரண்டு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவிலேயே டில்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியானது.

முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். துணை முதல்வர் சிசோடியா உட்பட அமைச்சர்கள் பலரும் வெற்றி பெற்றனர். முடிவில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ. எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலை போலவே காங்கிரஸ் இம்முறையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது.


பா.ஜ.வுக்கு தொடரும் சோகம்:


லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலில் டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பா.ஜ. அமோக வெற்றி பெற்றது. ஆனால் 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. அதேபோல் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் டில்லியில் எழு தொகுதிகளையும் பா.ஜ. கைப்பற்றியது ஆனால் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. 1993 - 98ம் ஆண்டு வரை டில்லியில் பா.ஜ. ஆட்சி நடந்தது. அதன்பின் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தல்கள் அனைத்திலும் பா.ஜ. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த எந்த தேர்தல்களிலும் பா.ஜ.வால் சிறப்பான வெற்றி பெற முடியவில்லை. அதனால் தான் டில்லியில் வெற்றி பெறுவதை பா.ஜ. கவுரவ பிரச்னையாக கருதியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், பா.ஜ. மூத்த தலைவர்கள் உட்பட பலரும் டில்லியில் தீவிர பிரசாரம் செய்தனர். இருந்தும் பா.ஜ.வால் வெற்றி பெற முடியவில்லை.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு இணையான ஒரு தலைவரை பா.ஜ. முன்னிலைப்படுத்ததாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அத்துடன் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ. எம்பி. பர்வேஷ் வர்மா உட்பட பலர் கெஜ்ரிவாலை தரக்குறைவாக விமர்சித்தனர். இதுவும் தோல்விக்கு ஒரு காரணம் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

டில்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி பல பிரச்னைகளை சந்தித்தது. குறிப்பாக கடந்த தேர்தலில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்ற பின் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டார் என குற்றம்சாட்டப்பட்டது. காற்று மாசு உட்பட எந்த பிரச்னையையும் கெஜ்ரிவால் அரசு சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் நிர்வாகத்திலும் கெஜ்ரிவால் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்பட்டது.

இதனால் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் 2017ல் நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இந்த நிலையை இலவச அறிவிப்புகளை செயல்படுத்தி கெஜ்ரிவால் மாற்றினார். பஸ்களில் பெண்களுக்கு இலவசம், மாதம் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், 400 யூனிட் வரை மின் கட்டணம் பாதியாக குறைப்பு, 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம், தனியார் பள்ளிகளில் கட்டணம் உயர்த்த தடை, இலவச 'வைபை' உட்பட பல திட்டங்களை செயல்படுத்தினார்.

டில்லியில் பெண்கள் பாதுகாப்பை பலப் படுத்த கெஜ்ரிவால் எடுத்த நடவடிக்கைகளும் மக்களின் வரவேற்பை பெற்றது. மாணவர்களுக்கு பஸ்களில் இலவச பயண திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதியளித்தது. பிரசாரத்தில் கெஜ்ரிவால் அரசின் சாதனைகளை கூறித் தான் பெரும்பாலும் பிரசாரம் செய்தார். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி அவர் பெரிதாக பேசவில்லை. இந்த சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வரும் ஷாஹீன்பாக் பகுதிக்கு அவர் ஒரு முறை கூட செல்லவில்லை.

டில்லி பிரச்னைகளை முன் வைத்துதான் ஆம் ஆத்மி பிரசாரம் செய்தது. ஆனால் பிரதமர் மோடி உட்பட பா.ஜ. தலைவர்கள் அனைவரும் ஜம்மு - காஷ்மீர் அயோத்தி ராமர் கோவில் உட்பட தேசிய பிரச்னைகள் பற்றித் தான் பெரும்பாலம் பிரசாரம் செய்தனர். 'டில்லியின் மகன்' என கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி முன்னிறுத்தி பிரசாரம் செய்தது மக்களிடம் எடுப்பட்டுள்ளது. இவை தான் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைததுள்ளது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

டில்லி சட்டசபை தேர்தல் காங்கிரசின் பரிதாப நிலையை வெளிப்படுத்தியுள்ளது. டில்லியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்திய கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஓட்டு சதவீதமும் மிகவும் குறைந்துவிட்டது. டில்லி உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. பா.ஜ.வுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சி என இனி காங்கிரசை கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


பட்டாசு வெடிக்கவில்லை:


டில்லியில் கடந்த ஆண்டு இறுதியில் காற்று மாசு மிகவும் அதிகமாக இருந்தது. மக்கள் சுவாசிக்கவே மிகவும் கஷ்டப்பட்டனர். இதையடுத்து காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை பட்டாசு வெடித்து யாரும் கொண்டாடக் கூடாது என கட்சியினருக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் நேற்று பட்டாசு வெடிக்க வில்லை. கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி ஆடிபாடி வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடினர்.


கெஜ்ரிவாலுக்கு பிரதமர் வாழ்த்து:


டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'டுவிட்டரில்' அவர் வெளியிட்ட பதிவில் '' டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள். டில்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு நன்றி தெரிவித்து ''டில்லியை உலக தரமான நகரமாக மாற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்'' என கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.


3ல் மட்டுமே காங்கிரசுக்கு டிபாசிட்:


டில்லி சட்டசபை தேர்தலில், மொத்தம், உள்ள, 70 தொகுதகிளில், 66ல் காங்கிரஸ் போட்டியிட்டது. மற்ற நான்கில், அதன் கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிட்டது. தேர்தலில், 3 தொகுதிகளை தவிர மற்ற, 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள், 'டிபாசிட்' தொகையை பறி கொடுத்துள்ளனர். காந்திநகர், பாட்லி, கஸ்துார்பா நகர் ஆகிய தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வேட்பாளர்கள், டிபாசிட் தொகையை தக்க வைத்தனர். பெரும்பாலான தொகுதிகளில் பதிவான ஓட்டுகளில், ஐந்து சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளை, காங்கிரஸ் பெற்றுள்ளது.


சரியாக அமைந்த கருத்து கணிப்புகள்:


டில்லியில் தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தன. அதிலும் 'இந்தியா டுடே - ஆக்சிஸ்' வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 59 - 68 தொகுதிகளிலும் பா.ஜ. 2 - 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. அதேபோல் ஆம் ஆத்மி 62லும் பா.ஜ. எட்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் அதன் பின் நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்தியா டுடே - ஆக்சிஸ் வெளியிட்ட கருத்து கணிப்புகள் மிக சரியாக அமைந்தன. அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்ததும் உண்மையாகியுள்ளது.


ஹனுமன் ஆசிர்வாதம்:


''என்னை தங்களின் மகனாக டில்லி மக்கள் கருதுகின்றனர். அவர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்குகிறேன். இது டில்லி மக்களின் வெற்றி. நம்மை கடவுள் ஹனுமன் ஆசிர்வதித்துள்ளார். டில்லி மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவை செய்ய அவர் மேலும் அருள்புரிவார். வளர்ச்சி அரசியல் டில்லியில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தல்களுக்கு இந்த வெற்றி முன்னுதாரணமாக அமைந்துள்ளது''
- கெஜ்ரிவால்


மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்:


டில்லி மக்கள் அளித்த தீர்ப்பை, தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். சிறப்பான எதிர்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம். டில்லி வளர்ச்சிக்கு, ஆம் ஆத்மி அரசு பணியாற்றும் என, நம்புகிறேன்.
- ஜே.பி.நட்டா, தலைவர், பா.ஜ.,


இறுதி நிலவரம்


மொத்த தொகுதிகளில் - 70
ஆம் ஆத்மி - 62
பா.ஜ., - 8

Advertisement
வாசகர் கருத்து (24+ 571)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
13-பிப்-202004:14:00 IST Report Abuse
oce டெல்லி மக்களுக்கு நல்லதே செய்ய காத்திருக்கும் கட்சிக்கு நமது பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
12-பிப்-202017:46:37 IST Report Abuse
Ramesh அரவிந்த் கெஜ்ரிவால் அவர் செய்த ஆட்சியின் நன்மைகளை சொல்லி இந்த வெற்றியை பெற்று இருந்தார் என்றால் இந்திய மக்கள் மகிழ்ந்திருப்போம் ...இலவசத்தை லஞ்சமாக மக்களுக்கு கொடுத்து இந்த வெற்றியை பெற்று இருக்கிறார் ...மக்கள் மாக்களாக இந்தியா முழுவதும் இருக்கிறார்கள் போல ...இலவசத்தை தடை செய்ய வேண்டும் இந்தியா முழுவதும் ...சட்டம் இயற்ற பட வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
12-பிப்-202016:15:53 IST Report Abuse
ரத்தினம் கெஜ்ரிவால் பிஜேபி அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. பிஜேபியின் தோல்வி, சாதாரணமானது தான். பிஜேபி ஓட்டு சதவீதம் முன்பு 33 %, 32 %, இப்போது 38 % . பெரும்பாலான தொகுதிகளில் பிஜேபி வேட்பாளர்கள் மிக குறைந்த வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்கள். தேச விரோத இத்தாலி காங்கிரஸ் முன்பு 24 %, 10 %, இப்போது 4 %.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X