'கொரோனா' பலி ஆயிரத்தை எட்டியது ; சீனாவில் சர்வதேச மருத்துவ குழு முகாம்

Added : பிப் 11, 2020
Advertisement
 'கொரோனா' பலி ஆயிரத்தை எட்டியது ; சீனாவில் சர்வதேச மருத்துவ குழு முகாம்

பீஜிங் : அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 1,000 ஐ எட்டியுள்ளது. மேலும், 42 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியாக, சர்வதேச மருத்துவர் குழு, பீஜிங் வந்துள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ், இரண்டு மாதங்களாக வேகமாக பரவி வருகிறது. ஹூபே உள்ளிட்ட பல மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மற்ற நாடுகளிலும், இந்த வைரஸ், வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும், சீனாவின் பல்வேறு பகுதிகளில், வைரஸ் தாக்குதலுக்கு, 108 பேர் பலியாகினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 1,016ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 42 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பலியானோரில், அதிகபட்மாக, ஹூபே மாகாணத்தில் தான், 103 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த, 3,996 பேர், குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரில், 849 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீன அரசின் வேண்டுகோளை ஏற்று, சர்வதேச மருத்துவர் குழுவை, உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழுவினர், நேற்று பீஜிங் வந்து சேர்ந்தனர். சீனாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தும் இந்த குழுவினர், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். சீன அதிபர் ஸி ஜின்பிங், சுவாச கவசம் அணிந்தபடி பீஜிங் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நேற்று ஆய்வு நடத்தினார்.

வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சீன அதிபர் ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று அவர் ஆய்வு நடத்தியது குறிப்பிடத் தக்கது. ''கொரோனா வைரஸ் என்ற பேரிடரிலிருந்து, சீனா, விரைவில் மீண்டு வரும்,'' என, ஜின்பிங் நேற்று தெரிவித்தார். இதற்கிடையே, வைரஸ் பீதி காரணமாக பல்வேறு நாடுகள், சீனாவுக்கு விமானங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

சீனாவிலிருந்து சுற்றுலா பயணியர் வருவதற்கும் தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஹூபே மாகாணத்தில் சுகாதார துறையில் பணியாற்றிய, ஜான் ஜின், லியு யிங்ஜி ஆகியோர், அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க, இவர்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை, சீன அரசு எடுத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, அங்கு படித்து வந்த இந்திய மாணவ - மாணவியர் பலர், நாடு திரும்பினர். இதில், கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. திருச்சூரில் உள்ள மருத்துவமனையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பரிசோதனையில், மாணவிக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், கேரள அரசும், அந்த மாநில மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

அந்த மாணவியின் ரத்த மாதிரி, புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வெளியான பின்பே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை, எட்டாக அதிகரித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து, ஜப்பானுக்கு, 3,711 பயணியருடன் வந்த கப்பல், டோக்கியோவில் உள்ள துறைமுகத்தில், கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்தவர்களில், 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பலில், 138 இந்தியர்களும் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, உறவினர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கப்பலில் உள்ள இந்தியர்களுடன், ஜப்பானில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், தொடர்பு மேற்கொண்டுள்ளனர்.

வைரஸ் பாதித்த பெண்ணுக்குகுழந்தை பிறந்ததுசீனாவின், சாங்ஷி மாகாணத்தைச் சேர்ந்த, 33 வயதான, கர்ப்பிணிக்கு, சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஜியான் நகரில் உள்ள மருத்துவமனையில், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. குழந்தை, 2.7 கிலோ எடை இருப்பதாகவும், ஆரோக்கியமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுக்கு, தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X