இருதயத்தின் எதிரிகள் யார்?

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 இருதயத்தின் எதிரிகள் யார்?

இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம் உயிர் காக்கும் இருதயத்துக்குப் பல வழிகளில் ஆபத்து வருகிறது. அவற்றில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருப்பது, மாரடைப்பு. இருதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கொரோனரி தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், இருதயம் துடிப்பதற்கு சிரமப்படுகிறது. அதனால் ஏற்படுவது மாரடைப்பு.

நமக்கு வயதாகும்போதும் வம்சாவளியிலும் இது தானாகவே வருகிறது. இந்த வழிகளை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அதைத் தவறான வாழ்க்கை முறைகளால் நாமாக இழுத்துக்கொள்வதுதான் அதிகம். அந்த வழிகளைக் கட்டாயம் தவிர்க்க முடியும்.


புகைப்பழக்கம்


பீடி, சிகரெட்டில் நிகோடின் எனும் நச்சு உள்ளது. இது ரத்தக்குழாய்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிடுகிறது. முக்கியமாக, இருதயத்துக்கு ரத்தம் கொடுக்கும் கொரோனரி குழாய்களைச் சுருங்க வைத்து, அதில் கொழுப்பு கட்டி ஆவதற்கு இடம் தருகிறது. அங்கு ரத்தம் உறையும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. புகை பிடிக்காதவர்களைவிட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு 24 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

அதேநேரம் புகைபிடிப்பவர்கள் வெளிவிடும் புகையை அடிக்கடி சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் இதே அளவுக்கு மாரடைப்பு வருகிறது. மேலும், உயிர் காக்கும் மருந்துகளாகக் கருதப்படும் ஆஸ்பிரின், ஸ்டாடின் போன்றவற்றின் வீரியத்தையும் நிகோடின் குறைத்துவிடுகிறது. இது மாரடைப்பு ஆபத்தை இன்னும் அதிகரிக்கிறது.


எகிறும் ரத்த அழுத்தம்


இருதயத்துக்கு அடுத்த எதிரி உயர் ரத்த அழுத்தம். முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க இருதயத் தசைகள் பழசாகிப்போன தண்ணீர்க் குழாய்போல் நெகிழ்வுத் தன்மையை இழந்துவிடும். இதனால் அது துடிப்பதற்கு சிரமப்படும். நாட்கள் ஆக ஆக இருதயம் தடித்துவிடும்; விரிந்துவிடும். இந்த இரண்டும் இருதயத்தின் நிலைமையை இன்னும் மோசமாக்கி மாரடைப்புக்கு வழி கொடுத்துவிடும்.


அச்சுறுத்தும் ரத்த மிகு கொழுப்பு


மாரடைப்பை ஏற்படுத்துவதில் கொழுப்புக்கு நிறையவே பங்கு உண்டு. ஆனால், ரத்த கொழுப்பு கூடுவதற்கு உணவு மட்டுமே காரணமல்ல. வயது, பாலினம், பரம்பரை, உணவு ஆகிய நான்கு 'சூத்திரதாரிகள்' நம் ரத்தக் கொழுப்பைத் தீர்மானிக்கின்றனர். ஆகவேதான், கொழுப்பு உணவைக் குறைவாகச் சாப்பிடுபவர்களுக்கும் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப் பிருக்கிறது. ஒருவருக்கு ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி./ டெ. லிட்டருக்குக் குறைவாகவும், எல்.டி.எல். கொலஸ்டிரால் 80 மி.கி./டெ.லிட்டருக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகள் கூடினால் கட்டாயம் மருந்து சாப்பிட வேண்டும்.

'கொழுப்புணவைக் குறைத்தால் போதாதா? மாத்திரையும் சாப்பிட வேண்டுமா?' என்ற யோசித்தால், மற்ற வழிகளில் கொழுப்பு கூடுவதைத் தடுக்க முடியாது.


ஆபத்தாகும் உடற்பருமன்


'இடுப்பளவு கூடினால் ஆயுள் அளவு குறையும்' என்பது மருத்துவ மொழி. பலருக்கும் இது உண்மையாகி இருக்கிறது. நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் மாவுச் சத்துள்ள உணவுகளும் நொறுக்குத்தீனிகளும் கொழுப்புணவும் உடல் எடையைக் கூட்டுகின்றன. பரம்பரையாகவும் உடல் பருமன் ஏற்படலாம். உடலுழைப்பு குறைந்ததும் உடற்பயிற்சி இல்லாததும் அடுத்த காரணங்கள். எந்த வழியில் உடல் பருமன் ஆனாலும் அது இருதயத்தின் வேலையைப் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தத்தில் எல்.டி.எல். அளவைக் கூட்டிவிடுகிறது. எச்.டி.எல். அளவைக் குறைத்துவிடுகிறது. சர்க்கரை நோயை அழைத்து வருகிறது. இவற்றின் விளைவால் மாரடைப்புக்கு வரவேற்பு தருகிறது.


மிக முக்கிய எதிரி


இருதயத்துக்கு ஆபத்து தரும் ஒரு முக்கியமான எதிரி, சர்க்கரை நோய். இந்த ஒரு நோய் இருந்தால் போதும், மாரடைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கடுமையான நோய்களை இலவசமாகவே தந்துவிடும். ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை வெறும் வயிற்றில் 100 மி.கி./டெ.லி.க்குள்ளும் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 - 140 மி.கி./டெ.லி.க்குள்ளும் இருக்க வேண்டும். மூன்று மாதக் கட்டுப்பாடு 6.5% இருக்க வேண்டும்.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாதவர்களுக்கு எல்லா ரத்தக்குழாய்களும் பழுதாகின்றன. முக்கியமாக, இருதயத்தில் கொரோனரி குழாய்களில் இந்தப் பாதிப்பு ஏற்படும்போது அதில் கொழுப்பு அடைத்துக்கொள்வது மற்றவர்களைவிட எளிதாகிறது. அதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் இவர்களுக்கு நரம்புகளும் பலவீனமாகின்றன. இந்தப் பாதிப்பு இருதயத்தில் ஏற்படுமானால், மாரடைப்பின்போது ஏற்படும் நெஞ்சுவலியை இவர்களால் உணர முடியாது. இந்த நிலைமை இவர்களுக்கு திடீர் மரணம் ஏற்பட வழி செய்கிறது.


அதிகரிக்கும் மன அழுத்தம்


இன்றைய காலச்சக்கரம் நமக்குக் கொடுத்திருக்கும் 'கொடை' மன அழுத்தம். அதனால் விளையும் உறக்கமின்மை, பயம், பதற்றம் எல்லாமே சேர்ந்து பல்வேறு ஹார்மோன்களின் இயக்கங்களைச் சீரழிப்பதால் இருதயத்தின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. அப்போது மாரடைப்பு வருவது எளிதாகிறது. இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலிலும் கால்களில் சக்கரம் மாட்டாத குறையாக ஓடிக்கொண்டிருக்கும் பணிச் சூழலிலும் மன அழுத்தம் இல்லாதவர்களைக் காண்பது கடினம். அதை 100 சதவீதம் இல்லாமல் செய்வதும் கடினம். இப்போது இருப்பதைக் குறைப்பதற்கும் இன்னும் மோசமாவதைத் தடுப்பதற்கும் வழி தேட முடியும்.


இல்லாமல் போன உடற்பயிற்சி


தொலைக்காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் நம்மை ஆட்கொண்ட பிறகு பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் குறைந்துவிட்டது. வாகன வசதிகளும் துணைக் கருவிகளும் வந்த பின்னர் உடலுழைப்பும் அதிகமில்லை. கணினியின் வரவால் தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகமாகிவிட்டன.

இதனால் இருதயத்துக்கு ஆபத்து வருவதும் அதிகரித்துவிட்டது. இருதயத்தின் எதிரிகளாகக் கருதப்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த மிகு கொழுப்பு, மன அழுத்தம் போன்ற பலவற்றுக்குக் கடிவாளம் போடுவது உடற்பயிற்சி. அங்குசம் இல்லாமல் மதம் பிடித்த யானையை அடக்க முடியாது என்பதுபோல் உடற்பயிற்சி இல்லாமல் மாரடைப்பைத் தடுக்க முடியாது என்பதும் உண்மை.


என்ன செய்யலாம்?


நெஞ்சில் வலி வந்தால்தான் மாரடைப்பு என்றில்லை. நெஞ்செரிச்சல், நெஞ்சு கனமாக இருப்பது, படபடப்பு, கிறுகிறுப்பு போன்ற வேஷமிட்ட முகங்களுடனும் மாரடைப்பு வரலாம். அதேநேரம் இரைப்பை அல்சர், செரிமானக்குறைவு போன்றவற்றின் முகங்களும் இவைதான். இவற்றில் எது உண்மையான மாரடைப்பின் முகம் என்பதை மருத்துவர்தான் அறிவார். ஆகவே, இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம் சோதித்துக்கொள்ளுங்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை ரத்த கொலஸ்டிரால், ரத்தச் சர்க்கரை அளந்து கொள்ளுங்கள். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை இசிஜி, டிரட்மில், எக்கோ உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். சமையல் உப்பையும் உப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். துரித உணவுகள் மற்றும் கொழுப்புணவைக் குறைத்து ரத்த மிகு கொலஸ்டிராலைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மாவுச்சத்துள்ள உணவுகளையும் இனிப்பையும் குறைத்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கள். தேவைப்பட்டால் இந்த மூன்றுக்கும் மருந்து சாப்பிடுங்கள்.

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி, ஏதாவது ஓர் உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஒன்றை பின்பற்றுங்கள். சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைப் பேணுங்கள். போதிய ஓய்வும் உறக்கமும் கிடைக்க வழி தேடுங்கள். தியானம், மன அமைதி பயிற்சிகளில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புகைபிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். இருதயத்தின் எதிரிகளை எதிர்கொள்ளும்/கொல்லும் முக்கிய வழிகள் இவை. புரிந்து செயல்படுங்கள்; வாழ்வை வளமாக்குங்கள்!
- டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dilli - CHENNAI ,இந்தியா
17-பிப்-202010:24:16 IST Report Abuse
dilli அருமையான பதிவு...நன்றிகள் பல கோடிகள்... ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X