இன்னலில் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்: களிமண்ணுக்கு நிலவும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?

Added : பிப் 12, 2020
Advertisement
 இன்னலில் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்: களிமண்ணுக்கு நிலவும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?

ஆனைமலை:பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், போதிய அளவு களிமண் கிடைக்காததால், மண்பாண்ட தொழிலாளர்கள் லாபமின்றி கடும் இன்னலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த காளியாபுரத்தில் பழமையான மாட்டேகவுண்டன் கோவில் உள்ளது. இங்கு, விவசாயிகள், மக்கள், கால்நடைகள் மற்றும் தங்களின் நலனுக்காக வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்கு, கால்நடைகளின் உருவபொம்மைகள் வைத்து வழிபட்டால் அவை ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது ஐதீகம்.

இதனால், வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விவசாயிகள், மக்கள் காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலுக்கு வருகின்றனர். அதேபோல், பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில், பல்வேறு கோவில்களில், உருவாரங்கள் வைத்து வழிபடும் முறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கோவில்களுக்கு உருவாரம் தயாரிக்கவும், மக்களுக்கு தேவையான பானைகள் தயாரிக்க, கோட்டூர், காளியாபுரம், ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு உள்பட பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். பல தலைமுறையாக குலத் தொழிலாக மண்பாண்டம், உருவாரம் தயாரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மண்பாண்ட தொழிலுக்கு அடிப்படையான களிமண் கிடைக்காமல், தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதிக பணம் செலவு செய்து களிமண் பெற்று, மண்பாண்ட தொழிலில் லாபமின்றி கடும் இன்னலுக்கு மத்தியில் ஜீவனம் செய்து வருகின்றனர்.இதே நிலை தொடர்ந்தால், மண்பாண்ட தொழிலே அழியும் நிலை உருவாகும். களிமண் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தீர்வு கண்டு, இலவசமாக களிமண் வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:காளியாபுரத்தில் ஆண்டு முழுவதும், உருவ பொம்மைகள், பானை, விளக்கு தயாரிக்கிறோம். பொங்கல் சீசனுக்கு, அதிக அளவில் உருவார பொம்மைகள் தயாரிக்கிறோம். இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம்.ஒரு நாளில் ஒரு நபர், 10 - 15 உருவார பொம்மைகள் தயாரிக்க முடியும். உலர வைக்கும் போதும், சூளை அமைத்து வேக வைக்கும் போதும், சில சிலைகள் உடைந்து விடுகிறது.

இதே நிலை தான் பானை தயாரிப்பிலும் ஏற்படும்.ஒரு உருவார பொம்மை தயாரிக்க, 35 ரூபாய் செலவாகிறது. ஒரு பொம்மை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால், 15 ரூபாய் வருமானம் கிடைக்கும்.பெரிய சைஸ் பொம்மைகள், 150 - 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பெரிய பொம்மைகள் மூலம் சற்று கூடுதல் வருமானம் கிடைக்கும். பானை விற்பனையில், 30 - 50 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

தொழிலுக்கு அடிப்படையான களிமண் கிடைப்பது தான் பெரும்பாடாக உள்ளது. பொள்ளாச்சி அடுத்த கோதவாடி குளத்தில் இருந்து இலவசமாக களிமண் எடுத்து, போக்குவரத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து காளியாபுரம் கொண்டு வருகிறோம்.ஒரு டிப்பர் களிமண், மூன்று மாதங்களுக்கு உருவ பொம்மைகள், பானை தயாரிக்க பயன்படுகிறது.

அதிலும், களிமண் கிடைக்க ஒவ்வொரு அதிகாரியிடமும் அனுமதிபெற்று தாமதமாகி, களிமண் கைக்கு கிடைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.குளங்களில் களிமண் கிடைக்காத நேரத்தில், தனியாரிடம் ஒரு லோடு, 20 - 25 ஆயிரம் செலவு செய்து வாங்குகிறோம். இந்த காரணங்களால் அன்றாடம் வாழ்வை நகர்த்துவதே சிரமமாக உள்ளது.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, களிமண் வழங்குவதை அரசு எளிமைப் படுத்த வேண்டும்; குளங்களில் இருந்து அதிக அளவில் களிமண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X