சஸ்பெண்ட் ஊழியருக்கு ஜீவனப்படி தராதது அரசியல் சாசனத்தை மீறிய செயல்: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'சஸ்பெண்ட்' ஊழியருக்கு ஜீவனப்படி தராதது அரசியல் சாசனத்தை மீறிய செயல்: ஐகோர்ட்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஊழியருக்கு, ஜீவனப்படியை வழங்க மறுப்பது, அரசியல் சாசனப்படி, தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில், ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலராக இளங்கோ என்பவர் பணியாற்றினார். பண கையாடல் குற்றச்சாட்டு காரணமாக,

சென்னை : 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஊழியருக்கு, ஜீவனப்படியை வழங்க மறுப்பது, அரசியல் சாசனப்படி, தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில், ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலராக இளங்கோ என்பவர் பணியாற்றினார். பண கையாடல் குற்றச்சாட்டு காரணமாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.'சஸ்பெண்ட்' காலத்திற்கான, ஜீவனப்படி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோ வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவனப்படி வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூட்டுறவு சங்க விதிகளையும், தமிழக அரசின் ஜீவனப்படி சட்டப் பிரிவுகளையும் சுட்டிக் காட்டி, கூட்டுறவு சங்க செயலராக உள்ளவர், ஊழியர் அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவனப்படி வழங்க முடியாது என, மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
'சஸ்பெண்ட் காலத்தில், வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கும் ஜீவனப் படியை வழங்க மறுப்பது, அரசியல் சாசனத்தை மீறும் செயல்' என, இளங்கோ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழக அரசின் சட்டம் மற்றும் கூட்டுறவு சங்க விதிகளின் கீழ், செயலரை ஊழியராக கருத முடியாது. இருந்தாலும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை, முழுமையாக வழங்க மறுப்பது, அரசியல் சாசனத்தின், தனி நபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல்.
ஜீவனப்படி வழங்கக்கோரி, இளங்கோ அளித்த மனுவை, ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X