சென்னையில், மெகா சாலைகள் திட்டம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில், 'மெகா சாலைகள்' திட்டம் துவக்கம்

Added : பிப் 12, 2020
Share
சென்னை : சென்னையில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், உலக தரத்திலான, 'மெகா சாலைகள்' திட்டத்தை, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, நேற்று துவக்கி வைத்தார். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை, உலக தரத்தில் சீரமைக்க, 'மெகா சாலைகள் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, உள்ளாட்சி துறை அமைச்சர்

சென்னை : சென்னையில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், உலக தரத்திலான, 'மெகா சாலைகள்' திட்டத்தை, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, நேற்று துவக்கி வைத்தார்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை, உலக தரத்தில் சீரமைக்க, 'மெகா சாலைகள் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, அமைச்சர் வேலுமணி பேசியதாவது:சென்னை மாநகராட்சி, 387 கி.மீ., நீளமுள்ள, 471 பேருந்து சாலைகளையும், 5,525 கி.மீ., நீளமுள்ள, 33 ஆயிரத்து, 374 உட்புற சாலைகளையும் பராமரித்து வருகிறது. இந்த சாலைகள், நவீன முறையில் அமைக்கப்பட்டு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள், பாதசாரிகள், பாதுகாப்பாக, சாலையில் நடப்பதற்கு, 150 கி.மீ., நீளத்திற்கு, வாகனமில்லா போக்குவரத்து கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.தற்போது, மெகா சாலைகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மிதிவண்டி உபயோகிப்பவர்கள், பாதுகாப்பான முறையில் செல்வதற்கு வழிவகை செய்யப்படும்.மேலும், பாதசாரிகளுக்கு, தொடர்ச்சியான நடைபாதைகள், நெறிப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்து, வாகன நிறுத்தம், பாதசாரிகளுக்கான இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் வாயிலாக, அடுத்த, 30 ஆண்டுகளுக்கு, சாலை வெட்டு பணி முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சாலைகள் சேதாரம் ஆகாதவாறு வடிவமைக்கப்படும்.முதற்கட்டமாக, 70 சதுர கி.மீ., அடங்கிய, 110 கி.மீ., நீளமுள்ள, பேருந்து சாலைகள், உட்புற சாலைகள் என, அண்ணாநகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் அடையாறு போன்ற இடங்களில், திட்டம் செயல்படுத்தப்படும். தொடர்ந்து, அனைத்து சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழக தலைமை செயலர் சண்முகம் பேசுகையில், ''வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்களை நிறுத்த முறையான இடங்கள் அமைத்தல், பாதசாரிகளுக்கான முறையான பாதை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை, மெகா சாலைகள் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.கூட்டத்தில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டம் அமைய உள்ள சாலைகள்!l டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலைl காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலைl எல்.பி., சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைl வடக்கு டெர்மினல் சாலை, நியூ ஆவடி சாலைl 2வது மற்றும் 3வது அவென்யூ சாலை, அண்ணா நகர்l ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலைl கிரீன்வேஸ் சாலை, சி.பி.ராமசாமி சாலைl எல்டாம்ஸ் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலைl வேளச்சேரி பிரதான சாலை, ஐந்து பர்லாங் சாலை

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X