பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படுமா?| Dinamalar

பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படுமா?

Added : பிப் 12, 2020
Share

அன்னுார்:நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், அவிநாசி தொகுதியின் தேவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என, மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

அவிநாசி தொகுதியில், தனபால், ஆறாவது முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ளார். 2 வது முறை சபாநாயகர் பதவி வகிக்கிறார். இதனால் இத்தொகுதி, வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றதாக கருதப்படுகிறது. ஆனால், தொகுதியில் பல கோரிக்கைகள், நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்ற படாமல் உள்ளன.அடுத்த ஆண்டு, மே மாதம், சட்டசபை பொதுதேர்தல் நடக்க உள்ளதால், அடுத்த ஆண்டு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

எனவே, தற்போது அ.தி.மு.க., அரசு, இந்த ஆண்டுதான் முழுமையான பட்ஜெட் சமர்ப்பிக்க முடியும்.அன்னுாரில், தினமும் 500 நோயாளிகள் வரும் அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரமுயர்த்த வேண்டும். இங்கு பணிபுரியும் பல ஆயிரம் வெளி மாவட்ட, வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையிலான, அடுக்குமாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.

50 ஆண்டுகளாக கிளை நுாலகமாக உள்ள அன்னுார் நுாலகத்தை, தரமுயர்த்த வேண்டும். ஒன்றியத்திலுள்ள, 189 கிராமங்களில் வசிக்கும், ஒன்றே கால் லட்சம் மக்களுக்கு, தனி கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.அன்னுார் பேரூராட்சியில், தினமும் சேகரிக்கப்படும், 10 டன் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, உரம் தயாரிக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அரசு, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியும், தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐந்து ஆண்டுகளாக முடங்கி உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பல நுாறு ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தியும், ஆறு ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் மின் மயானம் கட்டும் பணியை துவக்கி நிறைவேற்ற வேண்டும், என்று எதிர்பார்த்துள்ளனர். இதற்கான அறிவிப்புகள், வரும், 14ம் தேதி துவங்கும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியாகும் என, அன்னுார் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X